மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்களை எழுதி இருக்கிறார், வாலி. ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை. தனது நண்பரான நடிகர் வி.கோபாலகிருஷ்ணனுடன் விஸ்வநாதனை சந்திக்க சென்றார் வாலி. அவர் எழுதிய பாடல்களை கண்ட விஸ்வநாதன், சினிமாவுக்கு சரிப்பட்டு வரமாட்டார், அவர் பார்க்கிற வானொலி நிலைய வேலையை பார்க்க சொல்லு என கூறிவிட்டார். ஆனால் பிற்காலத்தில், அதே எம்எஸ்வி இசையில், பிரபலமானார் வாலி…
கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ் என்பவர், 1958-ல் தயாரித்த அழகர் மலைக்கள்ளன் என்ற படத்ற்கு இசை அமைத்தார்.கோபாலம் என்பவர். அவர் போட்ட மெட்டுக்கேற்றபடி “நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா” என்ற பல்லவியை எழுதிக் காட்டினார் வாலி…. மறுநாள் பி. சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவானது.
வாலி கவிஞராக பிரபலமான நிலையில் ஒரு பாடலை குறிப்பிட்டு பேசியுள்ளார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. படப்பிடிப்பில் இருந்த சிவாஜி அங்கு வந்த கவியரசு கண்ணதாசனிடம் அந்த மாதவி பொன் மயிலாள் பாட்டு போல இன்னொரு பாட்டு எழுதணும் கவிஞரே என கூறியுள்ளார்.. மாதவி பொன்மயிலாள் பாட்டு நான் எழுதலையே எனக் கூறிய கவிஞர், பின்னர் விஸ்வநாதனிடம் இது குறித்து கேட்ட போது வாலி எழுதிய பாட்டு எனத்தெரிந்தது. இதை அறிந்ததும் நேராக வாலி வீட்டுக்கு சென்று பாராட்டினார் கண்ணதாசன்…
1958ம் ஆண்டு சென்னைக்கு வந்த கவிஞர் வாலி, மெல்ல மெல்ல திரையுலகில் கால் பதித்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடல்கள் எழுதி வந்த நிலையில், நல்லவன் வாழ்வான் என்ற திரைப்படத்தில் எம்ஜிஆருக்காக பாடல் எழுதத் தொடங்கினார் வாலி. சில ஆண்டுகளுக்குள் எம்ஜிஆர் நடித்த படகோட்டி திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் வாலி எழுதி, வரலாற்றில் இடம் பிடித்தார். எம்ஜிஆருடன் கூட்டணி அமைத்த பிறகு வாலியின் வலிமை இன்னும் அதிகமானது.
திரையுலகில் காற்று வாங்கிட கவிஞராக வந்த வாலி, இன்றும் துருவ நட்சத்திரமாக நிலைத்து நிற்கிறார்.
நன்றி நியூஸ் 7 தமிழ்,