Breaking News :

Thursday, November 21
.

'கொட்டுக்காளி' அல்ல கோபக்காளி!


வேறு சாதி ஆணுடன் காதல் வயப்பட்டதால் அப்பெண்ணின் மனதை மாற்றி, மாமனுக்கே திருமணம் செய்துவைக்க சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள் குடும்பத்தினர். அப்போது, என்ன நடக்கிறது என்பதுதான்  ‘கொட்டுக்காளி’.

குடும்பத்தினரின் பார்வையில்தான் நாயகி அன்னா பென் ஒருமாதிரி தெரிகிறார். ஆனால், பார்வையாளர்களின் பார்வையில், மிகத் தெளிவாக இருக்கிறார் என்பதை அவரது தெளிவான பார்வை, அழகிய சிந்தனை, உதடுகளின் முணு முணுப்பு, குழந்தையிடம் வெளிப்படுத்தும் புன்னகை  என தெளிவாக விளக்கிவிடுகிறது திரைக்கதை.  

ஸ்கூல் படிக்கும்போதே மாமனுக்கு திருமணம் செய்துவைக்க பார்த்திருக்கிறார்கள். ஆனால், கல்லூரிக்கு சென்றால்தான் இப்படி ஆகிவிட்டது என்று புலம்புகிறார்கள். உண்மையில், மாமனைப் போன்ற கொடூர வன்முறையாளனை நிராகரித்து தனக்கு பிடித்தவனை; நிகரானவனை தேர்ந்தெடுக்க துணையாக இருப்பது பெண்களுக்கு கல்விதான் என்பதை சிந்திக்கவைக்கிறது அந்தக் காட்சி.

இவர்களது பயணத்தில் ஒரு காளை மாடு வந்து வழியில் நிற்கும்.  அமைதியாக இருக்கும் நாயகியிடம் மட்டுமல்ல, தடுக்க வந்த அத்தனை பேரையும் கோபத்தில் அடித்து, உதைத்து வீரத்தைக் காட்டுகிறார் சூரி.  

அவ்வளவு வன்முறையாளரான அவர்கூட அந்த மாட்டிற்கு பயந்து இயலாமையால் அப்படியே நிற்கிறார். கிட்டத்தட்ட சந்தானம் நின்றுகொண்டிருக்கும் ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்’ காமெடி காட்சியை  நினைவூட்டி சிரிக்கவைத்துவிடுகிறது அக்காட்சி.

அதைவிட எள்ளலானது, அந்த காளையை விரட்ட முடியாமல் ஒருக்கட்டத்தில் அருகிலிருக்கும் அந்த மாட்டின் உரிமையாளரைச் சென்று பார்ப்பார்கள்.  “அட ஆமாம்... நம்ப மாடுதான்” என வயிறு ஒட்டிய மெல்லிய தேகம் கொண்ட அவர், தனது மகளான சிறுமியை அழைத்து விரட்டச் சொல்கிறார்.

எவ்வளவு நேரம் ரிவர்ஸில் செல்வது என்பதால், ஷேர் ஆட்டோவை தூக்கி திருப்ப முயற்சிக்கும் காட்சியில் அனைவரும் இறங்கி வருகிறார்கள். ஆனால்,  எனது விருப்பத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் இறங்கி வரப்போவதில்லை என நாயகி தீர்க்கமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது ஆட்டோவுக்குள் அப்படியே அமர்ந்திருக்கும் காட்சி.

ஷேர் ஆட்டோ நிறுத்தப்பட்டிருக்கும் காட்சியில் ஒருக்கட்டத்தில் நாயகியை அழைத்து சென்று தாயே தப்பிக்கவைக்க முயற்சிப்பதுபோல் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. காட்டுக்குள் ஓடி தப்பித்துவிட்டாளா? என சூரி பதட்டப்படுவது, சூரியின் தங்கை பதட்டத்டோடு ஓடிப்பார்ப்பது என அனைவரும் பதட்டத்தில் இருக்கும்போது தாயின் முகத்தின் மட்டும் பதட்டம் இல்லை. ஒரு பெண்ணின் விருப்பத்தை, காதலை இன்னொரு பெண்ணால் உணராமல் போய்விடமுடியுமா என்ன?

சாமியாரிடம் சென்று காத்திருக்கும் இடத்தில் தாய் தண்ணீர் கொடுத்து,  “அடிவாங்குறதுக்கு தெம்பு வேணுமில்ல?” என்கிறார்.   “இங்க அடிக்க மட்டுமா? செய்யுறாங்க?” என்று கேட்டதும் கட் ஆகி, நாயகியை போன்றே இழுத்துவரப்பட்டிருக்கும் இன்னொரு பெண்ணின் காட்சியை காண்பிக்கிறார்கள். அடிப்பதை தாண்டி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் அதில் தெளிவாக தெரியும். அதேபோல்,  “நீங்கள் என்னை என்ன செய்தாலும் சரி,  என் விருப்பத்துக்கு எதிராக எதிரா எதையும் செய்யமுடியாது. ஐ ஆம் வெயிட்டிங்” என்பதுபோல் இருக்கும் நாயகி தண்ணீரை வாங்கி மடக் மடக் என்று முழுவதுமாக குடித்து முடிக்கும் காட்சி.
 
ஒற்றையடி பாதையில் பைக்கில் கஷ்டப்பட்டு சென்று... நாயகி இழுத்து செல்லப்படும் ஷேர் ஆட்டோவிலேயே விடாமல் பயணித்து, இயற்கைக்காக ஒதுங்கினால்கூட பதட்டப்பட்டுக்கொண்டு இழுத்துசென்று எப்படியாவது மனதை மாற்றிவிடலாம் என செல்கிறார் சூரி. ஒருக்கட்டத்தில், காதலைப் பிரித்து சொந்த சாதியில் திருமணம் செய்து வைக்கப்படும் பெண்கள் திருமணத்துக்குப் பிறகும்கூட மனம் மாறாமல் சாமியாரிடம் கொண்டுவரப்படுவது சூரியை மட்டுமல்ல; எப்படியாவது மனம் மாற்றி  சுயசாதியில் திருமணம் செய்துவைத்துவிடலாம் என நினைக்கும் ஒவ்வொருவரையும் நிலைகுலைய வைத்துவிடுகிறது .
 
திருமணத்துக்குப்பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைகளை  ‘கூழாங்கல்’ மூலம் வெளிப்படுத்தியவர், ‘கொட்டுக்காளி’ மூலம்  திருமணத்துக்கு முன்பே பெண்கள் குடும்பத்தினரால் எதிர்கொள்ளும் வன்முறைகளை சொல்ல முயற்சித்ததற்கே, ’கொட்டுக்காளன்’ பி.எஸ் வினோத்ராஜை கெட்டிமெளம் கொட்டி வரவேற்கவேண்டும்.
 
அதேநேரத்தில், இடைவேளை முடிந்து பாப்கார்ன் வாங்கும் இடத்தில் திடீரென்று  “படம் ஸ்டார்ட் ஆகிடுச்சு சீக்கிரம் வாங்குடா” என்று ஒருவர் சொல்ல, அவரது நண்பரோ, “விடு விடு படத்துல எப்படியும் ஷேர் ஆட்டோவுல போயிக்கிட்டும் நடந்துக்கிட்டும்தான் இருப்பாங்க. அதுக்குள்ள, நாம போயிடலாம்” என கூலாக பாப்கார்ன் வாங்கிக்கொண்டிருந்தார்கள்.  

இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழுவதை இனி இயக்குநர் தவிர்க்கவேண்டும்.  
ஓரிடத்திற்கு கூட்டமாக செல்லும்போது செஃல்பி கேமராவில் பதிவு செய்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் மிக எதார்த்தமாக இருக்கிறது காட்சிகளும் ஒளிப்பதிவும். இசையை வைத்து காட்சியின் வீரியத்தை விவரிக்காமல் கதாப்பாத்திரங்களின் கண்களிலிருந்து வெளிப்படும் எக்ஸ்பிரஷன்களாலேயே வெளிப்படுத்தியிருப்பது பேரழகியல்.

படம் முடிந்து வெளியே வரும்போது ஷேர் ஆட்டோக்கள் நம்மை கடந்து செல்லும்போது சூரி அண்ட் கோவினர்தான் சென்றுகொண்டிருக்கிறார்களோ என யோசிக்க வைக்கும் அளவுக்கு படம் முழுக்க ஷேர் ஆட்டோ பயணம் ஆக்கிரமித்துக்கொள்கிறது.

சாதிப் பெருமை பேசக்கூடிய இடங்களில்தான் பெண்கள் அடிமையாக்கப்படுவது, அடக்கி ஒடுக்கப்படுவது, அடித்து வன்முறைக்குட்படுத்தபடுவது என துன்புறுத்தல்கள் தொடர்கின்றன.

நடைபிணமாக காண்பிக்கப்படும், சாமியாரிடம் இழுத்துவரப்படும் ஒவ்வொரு பெண்களிடமும் வெளிப்படுவது வெளியில் சொல்லமுடியாத அல்லது சொல்லியும் குடும்பத்தினரால் சாதியின் காரணமாக காதில் வாங்கிக்கொள்ளப்படாத ‘காதல்’ தான் என்பதை தெளிவுபடுத்துகிறது திரைக்கதை.

இவள் வெறும் கொட்டுக்காளி அல்ல. காதலுக்கு எதிரான சாதிவெறியர்களின் கொட்டத்தை அடக்கவந்த கோபக்காளி!

நன்றி: வினி சர்பனா

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.