Breaking News :

Saturday, December 21
.

மறக்க முடியுமா?: மலேசியா வாசுதேவனின் ’இந்த மின்மினிக்கு’ பாடல்!


இந்திய சினிமாவில் சில பாடகர்களின் குரல் எல்லாம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்க கூடிய வகையில் அமைந்திருக்கும். அப்படி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போன்ற ஒரு குரலுக்கு ஈடு இணையே இல்லை என நிச்சயம் சொல்லி விடலாம். படத்தில் என்ன மாதிரி உணர்வு அந்த பாடல் காட்சியில் சொல்லப்படுகிறதோ அதற்கேற்ற வகையில் உணர்ச்சியை வெளிப்படுத்தி பாடுவதில் எஸ்.பி.பிக்கு நிகர் யாருமே இல்லை.

ஏறக்குறைய அவரது குரலை போல உணர்வுகளை கலந்து பாடும் ஒரு அசத்தலான குரலுக்கு சொந்தக்காரர் தான் மலேசியா வாசுதேவன். இவர் பாடல்கள் பாடி கவனம் ஈர்த்தது ஒரு பக்கம் இருக்க, நிறைய திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

அதிலும் பெரும்பாலான படங்களில் வில்லனாகவும் ஒரு சில படங்களில் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்தார். அவரது இனிமையான குரலை எந்த அளவுக்கு ரசிகர்கள் ரசித்தார்களோ அதேபோல் அவரது நடிப்பையும் ரசித்து பார்த்தார்கள்.

கடந்த 1944 ஆம் ஆண்டு பிறந்த மலேசியா வாசுதேவன் சிறு வயதிலேயே மலேசியா சென்றுவிட்டார். அதன் பிறகு மீண்டும் அவர் இந்தியா திரும்பிய நிலையில் தான் பாடகராக மாறினார். மலேசியா வாசுதேவன் முதல் முதலாக ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா நடித்த ’டெல்லி டு மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தில் தான் பாடகராக அறிமுகம் ஆகினார். ’பாலு விக்கிற பத்மா, உன் பாலு ரொம்ப சுத்தமா’ என்ற காமெடி பாடலை அவர் வி குமார் இசையில் பாடினார். அதன் பிறகு அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது.

குறிப்பாக இளையராஜாவின் இசையில் தான் அவர் அதிக பாடல்களை பாடினார். ’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் இடம்பெற்ற ’இந்த மின்மினிக்கு’ என்ற பாடல், புதிய வார்ப்புகள் படத்தில் இடம்பெற்ற வான் மேகங்களே என்ற பாடல், கிழக்கே போகும் ரயில் படத்தில் இடம்பெற்ற  மலர்களே நாதஸ்வரங்கள் என்ற பாடல், கோழி கூவுது படத்தில் இடம்பெற்ற பூவே இளம்புவே, தூறல் நின்னு போச்சு படத்தில் இடம்பெற்ற ‘தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி’ என்ற பாடல் என நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றளவும் மனதை கவரும் பாடல்களாக உள்ளன.

பாடகராக மலேசியா வாசுதேவன் மிகப்பெரிய அளவில் பிசியாக இருந்த போது தான் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. முதலில் நடிக்க தயங்கிய மலேசியா வாசுதேவன் அதன்பிறகு தைரியமாக நடிக்க தொடங்கினார். பல படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தாலும் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’ஒரு கைதியின் டைரி’ என்ற திரைப்படத்தில் அவர் அரசியல்வாதி கேரக்டரில் நடித்தது தான் மக்கள் மனதில் பதிந்தது.

அதனையடுத்து ’முதல் வசந்தம்’ படத்தில் சத்யராஜ்ஜூடன் இணைந்து வில்லத்தனமான கேரக்டரில் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து மீண்டும் அரசியல்வாதி கேரக்டரில் பாலைவன ரோஜாக்கள், எம்எல்ஏ கேரக்டரில் ஊமை விழிகள், கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார்.

சிவாஜி, கமல், ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மலேசியா வாசுதேவன், இதே முன்னணி நடிகர்களுக்கு பாடல்களும் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜகுமாரன் இயக்கத்தில் உருவான ’திருமதி தமிழ்’ என்ற படத்தில் தான் அவர் கடைசியாக நடித்தார். மலேசியா வாசுதேவனின் கலைச்சேவையை பாராட்டி அவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது. அதுமட்டுமின்றி சிறந்த பாடகருக்கான விருதையும் அவர் இரண்டு முறை தமிழ்நாடு அரசிடம் இருந்து பெற்றுள்ளார்.

நடிகர், பாடகர் மலேசியா வாசுதேவன் கடந்த 2003 ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மலேசியா வாசுதேவன் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.

நன்றி: தமிழச்சி கயல்விழி (சோஷியல் மீடியா)

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.