Breaking News :

Thursday, November 21
.

மெர்ரிகிறிஸ்த்மஸ் (2024)


உண்மையே சொன்னால்.. .நின்று போன லாரியை  எல்லோரும் சேர்ந்து தள்ளி நகர்த்தும் வேகத்தில்தான் படம் ஆரம்பிக்கிறது. யு டியூபில் ரெண்டு நிமிட ட்ரைலரையே நார்மல் மோடில் இருந்து 2X வேகத்தில் பார்த்து விட்டு அடுத்த ரீலுக்கு தாவும் உலகத்தில் இந்த படம் எங்கே செல்ப் எடுக்க போகிறது என்ற சந்தேகத்தில்தான் பார்க்க ஆரம்பித்தேன்,

அதுவும்  ஸ்ரீ ராம் ராகவன் எனும் ஒற்றை மனிதற்க்காக. அவரின் ஜானி கட்டார், இன்னமும் ஹிந்தியில்  என் விருப்ப பட்டியல்களில் முதல் பத்து இடங்களுக்குள் வரும் படம். (ஒரு பிரெஞ்சு நாவலை உருவி எடுத்திருந்தாலும், மேக்கிங் சிறப்பான சம்பவமாய் இருக்கும். அதை நம் டாப் ஸ்டார் பிரசாந்த், தமிழில் ஜானியாக கொத்து பரோட்டா போட்டது தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியே மறக்க விரும்பும் ஒரு துன்பியல் சம்பவம். மனம் தளராத விக்ரமாதித்தனாக, அவரது அந்தாதூன் படத்தையும் கடந்த 5 வருடங்களாய் செதுக்கோ செதுக்கென்று செதுக்கி வருகிறார். அது தமிழ் சினிமாவில் எத்தகைய கலவரங்களை ஏற்படுத்த போகிறது என்பதை மோஷன் போஸ்டர், சிங்கிள், ட்ரைலர் எல்லாம் கடந்து ஒருவேளை படம் ரீலீஸ் ஆனால் கண்டறிந்துகொள்வோம்.

ஒரு கிறிஸ்துமஸ்க்கு முந்தைய இரவில் தொடங்கி... அடுத்த தினம் முடியும் கதை. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியோ அமைதியாய் ஹீரோ ஊர் சுற்றுவத்தில் ஆரம்பிக்கும் படம், நாம் கொட்டாவி வந்து... சரி அணைத்து விடுவோம் என நினைக்கும் போது, அவர்,  ஹீரோயினை, அவள் குழந்தையோடு சந்திக்கும் தருணத்தில் மெலிசாய் பற்றிக்கொள்கிறது.

சூழ்நிலைகள் ஹீரோவை, ஹீரோயின் வீட்டிற்க்கே அழைத்து சென்று சரக்கடிக்க வைக்க... டிசம்பர் குளிர்... உருகும் மெழுகுவர்த்திகள்... சுமாரான மப்பு என இருவரும் பரஸ்பரம் எல்லைகள் தாண்ட முயலும்போது..குபுக் என நெஞ்சில் வழியும் ரத்ததோடு ஒரு ப்ரேதம் உள்ளே எண்ட்ரி ஆகிறது. ஏன் எதற்கு.. எப்படி.. என நாம் கேட்பதற்குள் முக்கால்வாசி படம் முடிந்துவிடுகிறது. அதிலிருந்து கடைசி இருபது நிமிடங்கள்... தூங்கிக்கொண்டு இருப்பவனை எழுப்பி வித விதமான பரிசுகளை கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் சாண்டா க்ளாஸ் போல... ரக ரகமான ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் கொடுத்து ஒரு இன்பமான அதிர்ச்சியில் படத்தை முடித்து வைக்கிறார்கள்.

கரீனாவிற்கும்.. காத்ரீனாவுக்கும் இடையே இருக்கும் குறைந்த பட்ச ஆறு வித்தியாசங்களை கூட கண்டிறிய முடியா அப்பாவியாய் இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கிறேன். இந்த படத்தில் இருப்பது காத்ரீனாவாம். ரெட் வெல்வெட் கேக்கை வெர்ட்டிக்கலாய் அடுக்கி வைத்தது போல மெது மெதுவென்று இருக்கிறார். அவரோடு ஒப்பீடுகையில் நம்ம வி.ஜே,  பார்ப்பதற்கு கரடு முரடான ப்ளம் கேக் போலிருந்தாலும்.. அவரது உடல் மொழியும், வசன உச்சரிப்புகளும் உள்ளே கொட்டி கிடக்கும் முந்திரிகளையும், செர்ரிகளையும் சுவைக்கும் அனுபவத்தை கொடுத்துவிடுகின்றன.

இதுவும் ஒரு பிரெஞ்சு நாவலை அடிப்படையாய் வைத்து  தமிழ், ஹிந்தியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது . வசனங்களை ஸ்ரீ ராம் & கோ மிக சிறப்பாக எழுதியிருப்பது மெதுவான திரைக்கதை அமைப்பை மறக்க செய்துவிடுகிறது. மது நீலகண்டனின் ஒளிப்பதிவு மிக பழமையான ஒயின் ஒன்றை பருகும் போது கிட்டும் போதையினை படம் நெடுக தக்க வைத்திருக்கிறது.  

பார்த்தே தீர வேண்டிய படம் இல்லை. பார்த்தாலும் பெரிதாய் பாதகம் இல்லை. எந்த வித பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாய் டைம் பாஸ் பண்ண ஏற்ற ஓர் ரொமான்டிக் திரில்லர் சினிமா.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.