எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய பாடல் சென்சாரில் சிக்கி 75 சதவீதம் வரிகள் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கண்ணதாசனுக்கு பிறகு எம்.ஜி.ஆரின் அஸ்தான கவிஞராக மாறிய கவிஞர் வாலி, எங்க வீட்டு பிள்ளை படத்தில் எழுதிய ஒரு பாடலுக்கு சென்சார் அதிகாரிகள், பலத்த எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அந்த இடத்திலேயே அத்தனை மாற்றத்தையும் உடனடியாக செய்து படத்திற்கு சென்சார் வாங்கியுள்ளனர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1964-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற ராமுடு பீடுமு என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பிய, தயாரிப்பாளர் நாகி ரெட்டியார், எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடிக்க, எங்க வீட்டு பிள்ளை என்ற பெயரில் படத்தை தொடங்கியுள்ளார்.
இயக்குனர் சாணக்யா இயக்கிய இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி இவரும் இசையமைக்க, கவிஞர் வாலி உள்ளிட்ட பலர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக நான் ஆணையிட்டால் என்ற பாடல் இன்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் ஒரு பேவரெட் பாடலாக அமைந்துள்ளது. ஒருவர் கோழை ஒருவர் வீரன் என இரு கேரக்டரில் நடித்த எம்.ஜி.ஆர், கோழையில் வீட்டில் வீரனும், வீரன் வீட்டில் கோழையும் மாறிவிடுவார்கள். அப்போது கோழை எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்ற வீரன், நம்பியாரை எதிர்த்து அடித்துவிடுவார்.
அப்போது தான் நான் ஆணையிட்டால் என்ற பாடல் வரும், இந்த பாடலை முதலில், நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார் என்று தான் வாலி எழுதியுள்ளார். படம் சென்சார் ஆக போகும்போது இந்த வரிகள் சரி வராது மாற்றுங்கள் என்று சொல்ல, தயாரிப்பாளர் நாகி ரெட்டி வாலியிடம் கூறியுள்ளார். ஆனால் எம்.ஜி.ஆர் சொல்லாமல் நான் எதையும் மாற்ற மாட்டேன் என வாலி கூறியுள்ளார்.
அதன்பிறகு எதை மாற்ற வேண்டுமோ அதை மாற்றிவிடுங்கள் என்று எம்.ஜி.ஆர் சொல்ல வாலி அத்தனை மாற்றத்தையும் உடனடியாக செய்துள்ளார். அதன்படி, நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால் என்ற வரிகளை மாற்றிவிட்டு, நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்று மாற்றியுள்ளார். அதேபோல், எதிர் காலம் வரும் என் கடமை வரும் இந்த காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்று எழுதியிருந்தார். அப்போது தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சியினரை காக்கைகள் என்று விமர்சித்திருந்தால் இந்த வரிகளையும் மாற்ற கூறியுள்ளனர். இதனால் இந்த வரி, எதிர் காலம் வரும் என் கடமை வரும் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் என்று மாற்றினார்.
இந்த பாடலில் 75 சதவீத வரிகள் மாற்றம் செய்யப்பட்டதால், முதலில் இருந்ததை போல் பெரியதாக எடுபடாது என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்க, வாலி மாற்றிய அத்தனை வரிகளும் பெரிய ஹிட் அடித்து, பலரின் பேவரெட் பாடலாக இது மாறியது. இன்றும் எம்.ஜி.ஆர் குறித்து எந்த நிகழ்ச்சி என்றாலும் இந்த பாடல் ஒலிக்காமல் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.