காவல்காரன் படத்தில் இடம்பெற்ற நினைத்தேன் வந்தாய் நூறு வயது பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.
மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அந்த வகையில், 1967 ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ல் வெளியான திரைப்படம் 'காவல்காரன்'.
சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். ப.நீலகண்டன் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், அசோகன், பண்டரிபாய், மனோகர், சிவகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் எம்ஜிஆர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடிக்க ஒரு முக்கிய காரணம் உண்டு.
ஆம், எம்ஜிஆர் சுடப்பட்ட பின்னர் நடித்து 8 மாதங்கள் கழித்து ‘காவல்காரன்’ ரிலீஸானது. துக்கமும் அழுகையுமாக வந்து மக்கள் படம் பார்த்தார்கள். எதிர்பார்த்த வெற்றியை விட மூன்று மடங்கு வெற்றியைத் தந்தார்கள். அதுதான் எம்ஜிஆர் மேஜிக்.
'மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ', 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது', 'அடங்கொப்புரானே தியமா நான் காவல்காரன்', 'காது கொடுத்து கேட்டேன் குவாகுவா சத்தம்' போன்ற எல்லாப் பாட்டுகளும் செம ஹிட்டு.
அப்படி இப்படத்தில் இடம்பெற்ற நினைத்தேன் வந்தாய் நூறு வயது பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.
”நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று
கண் மீனாக மானாக நின்றாடவோ
பொன் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்து உறவாடவோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓய்யா..
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா”
எம்.எஸ் விஸ்வநாதன் இசையில், வாலி வரிகள் எழுத, பி. சுசிலா, டி. எம். சௌந்தரராஜன் இணைந்து பாடிய பாடல் தான் இது. எம்ஜிஆர் சுடப்பட்ட பின்னர் அவர் நடித்த படம் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இப்படத்திற்கு இருந்தது.
எம்ஜிஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு நலமடைந்த பின்னர் நடந்த முதல் படப்பிடிப்பு இந்த பாடல் காட்சி. அதற்கு ஏற்ப கவிஞர் வாலி அவர்கள் நினைத்தேன் வந்தாய் நுாறு வயது என்று வரிகளை கொடுத்திருந்தார்.
அதேபோல எம்ஜிஆருக்கும் கழுத்தில் குண்டு பாய்ந்ததால் பேசக்கூட சிரமபட்டார். ஆனால் தன் படத்தில் நானே டப்பிங் கொடுக்கிறேன் என சொல்லி அவரே டப்பிங் கொடுத்தாராம். அவர் டப்பிங் பேசும் போது ரத்தம் வருமாம் அதை பொருட்படுத்தாமல் அவர் டப்பிங் பணியை தொடர்ந்தாராம்.
அதேபோல என் உடல்நிலையை காரணம் காட்டி பாடலில் எந்த காம்பர்மைசும் செய்ய வேண்டாம். கண்டிப்பாக கனவுபாடல் இருக்க வேண்டும். அதைதான் மக்களும் விரும்புவார்கள் என சொன்னாராம். இதைக்கேட்ட ப.நீலகண்டன் பாடல் காட்சிக்கு ஒரு அரேபியன் தீமில் எடுக்க முடிவு செய்து அதனை எம்எஸ்வியிடன் கூறுகிறார்.
அவரும் உடனே அவ்வளவு தானே பண்ணிவிடுவோம் என அரேபியன் இசை சாயலில் டியூன் போடுகிறார். அதற்கு ஏற்றார் போல வாலி அவர்கள் வரிகள் எழுத அமைந்த அற்புதமான பாடல் தான் இது.
இன்றும் அனைவராலும் கொண்டாடப்படும் பாடலாக இப்பாடல் உள்ளது.