சித்ராலயாவின் ‘உத்தரவின்றி உள்ளே வா’ காமெடிப் படத்தில் காஞ்சனா தான் நாயகி. கலகலவெனச் செல்லும் படத்தில், காஞ்சனாவும் அவரின் கதாபாத்திரமும் தனித்துத் தெரிந்தன.
‘மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி’ என்கிற டூயட் பாடலுக்காகவே திரும்பத் திரும்பப் பார்த்தது ரசிகக் கூட்டம். அதிலும் எஸ்பிபி-யின் மந்திரக் குரலும் காஞ்சனாவின் பேரழகும் நம்மைக் கட்டிப்போட்டன.
காதலிக்க நேரமில்லை’ படம் தொடங்கியதும் வருகிற முதல் முகங்கள்... முத்துராமன், காஞ்சனாதான்! இளமையிலும் அழகிலும் நடிப்பிலும் பார்வையிலும் ஒரு காமெடிப் படம்தானே... என்பவற்றையெல்லாம் தாண்டி மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார் காஞ்சனா. அதிலும் முதல் படத்திலேயே!
ஒருபக்கம் பாலையா... இன்னொரு பக்கம் நாகேஷ். இவர்களுக்கு நடுவே, கிழவ வேஷத்தில் இருக்கும் முத்துராமனைத் தெரியாமல்,
அவரின் குறும்பை வெறுப்பதும், வந்திருப்பவர் முத்துராமனின் அப்பா என்று தெரியாமலேயே, அந்தத் திருமணத்துக்குச் சம்மதமில்லை என்று மறுப்பதும் என நடிப்பில் தடம் பதித்தார் காஞ்சனா.
சிவாஜியுடன் ‘சிவந்த மண்’ படத்தில் நடித்தார். படத்தில் மகாராணியாகவும் போராளியாகவும் என இரண்டு வேறுபட்ட குணங்களையும் மிகச்சிறப்பாக தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருந்தார். எல்லாப் பாடல்களிலும் கவனம் ஈர்த்தார். என்றாலும்
‘பட்டத்துராணி பார்க்கும் பார்வை’ பாடலும் காஞ்சனாவின் நடனமும் படத்தில் மிக முக்கியமான அம்சங்களாக மிளிர்ந்தன. இன்றைக்கும் டிவியில் இந்தப் பாடல் ஒளிபரப்பாகும்போது, ரிமோட்டைத் தொடாமல் வியந்து மலைத்து ரசிப்பவர்கள் ஏராளம்.
ஸ்ரீதரின் ‘அவளுக்கென்று ஒரு மனம்’ படத்தில் மிகச்சிறந்த கேரக்டரை வழங்கியிருந்தார் ஸ்ரீதர். அப்படத்தின்
‘ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதிலும் எஸ்பிபி விளையாடியிருப்பார். ‘
மங்கையரில் மகாராணி, மாங்கனி போல் பொன்மேனி’யும் எஸ்பிபி தான். காஞ்சனாவின் நளினமான நடிப்பு இப்படத்திலும் பேசப்பட்டது!
எம்ஜிஆருடன் ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகக் கனமானது. கே.ஆர்.விஜயாதான் நாயகி என்றாலும் இவரின் நடிப்பு பிரமிக்க வைக்கும்.
பாலசந்தரின் ‘பாமா விஜயம்’ படத்தில், செளகார் ஜானகி, ஜெயந்தியுடன் காஞ்சனாவும் பாலையாவின் மருமகளாக நடித்திருப்பார். மூக்குக்கண்ணாடி போட்டால்தான் தெரியும் என்கிற காமெடியாகட்டும் மொட்டைக் கடுதாசிக்கு ஒவ்வொருவரும் பயந்து, தன் கணவனோ... என்று சந்தேகப்படுவதாகட்டும்...
’ஆனி முத்து வாங்கிவந்தேன் ஆவணி வீதியிலே அள்ளிவைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே’ என்ற பாடலில் செளகார் ஜானகி, ஜெயந்தி, காஞ்சனா என மூவரும் கலக்கியெடுத்திருப்பார்கள். முத்துராமனுக்கு ஜோடியாக அசத்தியிருப்பார் காஞ்சனா.
‘சாந்தி நிலையம்’ காஞ்சனாவுக்கு முக்கியமான படம்.
'கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்’, ‘இயற்கையெனும் இளைய கன்னி’ என்ற இனிமையான பாடல்களெல்லாம் கிடைத்தன. இதிலும் தன் தனித்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து நல்ல படங்கள்... நல்ல கேரக்டர்கள்.
ஆனால் திருமணம் மட்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ‘ஒரு நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கோயேம்மா’ என்று சக நடிகர்களும் நடிகைகளும் அறிவுரை சொல்லியும் ஏற்க முடியாமல் தவித்தார். குருவி சேர்ப்பது போல் சேகரித்த சொத்துகளும் உறவுகளிடம் மாட்டிக்கொண்டன. ‘இப்போ என்ன அவசரம், இன்னும் நடிக்கட்டும்’ என்று பணத்தில் குறியாக இருந்தார்கள் உறவினர்கள். வீடுவாசல், சொத்துபத்து என்று சேர்த்துவைத்துப் பார்த்தால், கல்யாண வயதெல்லாம் தாண்டிப்போயிருந்தது. அதன் பின்னர், உறவினர்களிடம் மாட்டிக்கொண்ட சொத்துகளை மீட்பது பெரிய சவாலாக உருவெடுத்தது.