Breaking News :

Thursday, November 21
.

ஒரே பாட்டு.. அதில் நாலு சூப்பர் பாடகர்கள் எந்த பாடல்?


ஒரே பாட்டு.. அதில் நாலு சூப்பர் பாடகர்களை மிக்ஸ் பண்ணி மிரட்டிவிட்ட இளையராஜா - எந்த பாடல் தெரியுமா?

தமிழ் திரையுலகை பொறுத்தவரை மிக மூத்த மற்றும் டாப் இசையமைப்பாளராக வலம்வருபவர் தான் இளையராஜா. தனது படங்களில் புதுமைகளை புகுத்துவதிலும் இவர் வல்லவர்.

தமிழக அளவிலோ அல்லது இந்திய அளவிலோ அல்லாமல், உலக அளவில் உள்ள இசையமைப்பாளர்களில், டாப் 25 பட்டியலில் உள்ள ஒருவர் தான் இளையராஜா. பண்ணைபுரத்தில் பிறந்த அவர், கடந்த 1976ம் ஆண்டு வெளியான "அன்னக்கிளி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை உலக பயணத்தை ஆரம்பித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இன்னும் இரண்டு ஆண்டுகளில் தன்னுடைய ஐம்பதாவது ஆண்டு கால திரை பயணத்தில் அவர் பயணிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவை பொருத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் என்று அனைவருடைய திரைப்படங்களுக்கும் இவர் இசையமைத்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் நடிகர் மைக் மோகன் மற்றும் நடிகர் ராமராஜன் உள்ளிட்டவர்களுடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பங்காற்றியது இளையராஜா என்றால் அது மிகையல்ல. அன்று தொடங்கிய அவரது பயணம் இன்று உள்ள கோலிவுட்டின் இளம் ஹீரோக்கள் வரை தொடர்கிறது என்றால் அதுவே அவர் திறமைக்கு கிடைத்த பரிசு.

இளையராஜாவின் சாதனைகள்

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில், 8000க்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்து, 20,000 மேற்பட்ட இசைக்கச்சேரிகளை நடத்தி வருபவர் தான் இளையராஜா. கடந்த 2010 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இந்திய அரசு வழங்கும் பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் பட்டங்களை வென்றவர் இவர். 1983 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான "சாகர் சங்கமம்" என்ற திரைப்படத்திற்காக தான் முதல் முதலில் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. தொடர்ச்சியாக "சிந்து பைரவி", "ருத்ரவீணை", "பழசிராஜா" மற்றும் "தாரை தப்பட்டை" உள்ளிட்ட ஐந்து திரைப்படங்களுக்காக தேசிய விருது வென்றவர் இசைஞானி.

இந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், FilmFare விருதுகள், தமிழ்நாடு அரசு வழங்கும் கலை மாமணி விருது, தமிழ்நாடு அரசு வழங்கும் மாநில திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள், நார்வே தமிழ் சங்கம் வழங்கும் திரைப்பட விருதுகள், தென்னிந்திய சர்வதேச திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகள் என்று இளையராஜாவின் விருதுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இசையில் புதுமை

நரம்பு வாத்தியங்கள் எதுவுமே இல்லாமல் பாடலுக்கு இசை அமைப்பது, ஒரு பாடலில் ஆணின் குரல் வெளிப்படும் அதே நேரம், அதை ஓவர் லாப் செய்வது போல ஒரு பெண்ணின் குரல் இடம் பெறுவது என்று வித்தியாசமான பல முயற்சிகளை தமிழ் சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் சோதித்து அதில் மெகா ஹிட் வெற்றியடைந்த இசையமைப்பாளர் தான் இளையராஜா.

ஆப்பிரிக்க நாட்டு இசையை முதல் முறையாக இந்திய இசைக்குள் புகுத்தியவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமல்ல, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை கூட முதல் முதலில் பாட வைத்தது இளையராஜா தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தளபதி திரைப்படத்தில் ஒலித்த "ராக்கம்மா கையத்தட்டு" என்கின்ற பாடல் கடந்த 2002 ஆம் ஆண்டு பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் நிறுவனம் வெளியிட்ட உலக அளவிலான டாப் 10 பாடல்களில் முதலிடம் பிடித்தது. இதில் ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலும் டாப் 10 வரிசையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு பாட்டு.. நாலு சிங்கர்ஸ்

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த மலையாள இயக்குனர் தான் பிரியதர்ஷன். தமிழில் "லேசா லேசா", "சிநேகிதியே", "பொய் சொல்ல போறோம்", "நிமிர்" போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்றவர் அவர். ஏற்கனவே மலையாள மொழியில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி புகழின் உச்சியில் பயணித்து வந்த அவர், தமிழில் முதல் முதலில் இயக்கிய திரைப்படம் தான் கடந்த 1991ம் ஆண்டு நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் வெளியான "கோபுர வாசலிலே" என்கின்ற திரைப்படம்.

இந்த திரைப்படத்திற்கும் இசை இளையராஜா தான், பாடலுக்காக மிகப்பெரிய அளவில் போற்றப்பட்ட படங்களில் இந்த திரைப்படங்கள் ஒன்று. ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் நேர்த்தியான பல காட்சிகளை இந்த திரைப்படத்தில் கொடுத்திருப்பார். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இந்த திரைப்படத்தில் வாலி வரிகளில் ஒலித்த நான்கு பாடல்களில் ஒன்றுதான் "தேவதை போல் ஒரு பெண்ணொன்று வந்தது தம்பி உன்னை நம்பி" என்கின்ற பாடல்.

இந்த பாடல் கார்த்தி தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து பாடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆகையால் இந்த பாடல் நான்கு நண்பர்களுக்கு இடையே நடக்கும் பாடலாக அமைந்திருப்பதால் அதில் நான்கு வித்தியாசமான குரல்களை சேர்த்து அசத்தியிருப்பார் இளையராஜா. மனோ, மலேசியா வாசுதேவன், தீபன் சக்கரவர்த்தி மற்றும் சுரேந்தர் ஆகிய நால்வருடைய குரலில் தான் இந்த பாடல் ஒலித்தது. இப்போது இந்த பாடலை கேட்கும் பொழுது கூட நான்கு பெரிய பாடகர்கள் கோரசாக பாடுவது அவ்வளவு இனிமையை கொடுக்கும். அந்த காலகட்டத்தில் மெகா ஹிட் ஆன பாடல்களில் இதுவும் ஒன்று.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.