பாடகர்களில் ஒரு தனித்த பிரிவினர் உண்டு. அவர்கள் அநேகமாகப் பாடுகிற பாடல்கள் எழுதுபவர்களின் கவித்திறன் மற்றும் இசையமைப்பவர்களைத் தாண்டி ரசிகரைக் கட்டிப் பிணைத்துக்கொள்ளும் தனித்துவ வசீகரம் கொண்டவர்கள். ஒரு சில பாடகர்கள் தங்கள் தாய்மொழியில் அல்லது ஒரு சில மொழிகளில் அத்தகைய அடைதல்களைச் சாத்தியப்படுத்துவார்கள். ஆனால் வெகுசிலர் மாத்திரமே புகுந்து புறப்பட்டுத் திரும்புகிற வரை எல்லா மொழிகளிலும் ஒற்றை வண்ணமாக அப்படிப்பட்ட வசீகரத்தை ஏற்படுத்துவார்கள். அவர்களுள் ஒருவர்தான் வாணி ஜெயராம். வாணி பாடிய பெரும்பாலான பாடல்களை ரசிப்பவர்களுக்கு அவருடைய தாய்மொழி எது என்பதே தெரியாது.
ஆம், 3 பேர் என்பது பல இடங்களில உண்டு. பிரம்மா, விஷ்ணு, சிவன், கங்கை, யமுனை, சரஸ்வதி, பாரதி, வஉசி, சிவா, தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள், சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி, ஜி இராமநாதன், கே வி மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற மூவர் வரிசையில் – சுசிலா, ஜானகி, வாணி ஜெயராம் என்றே ஆகி விட்டது பெருமை.
வாணி ஜெயராம் என்ற பெயர் இசையுடன், திரை உலகுடன், ரசிகர்களுடன் ஒன்றிப்போன ஒன்று. 50 வருடங்களுக்கு மேலாக இசை ரசிகன் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் குரல் அது.
அவர் தமிழில் பாடியவற்றுள் ‘பொங்கும் கடலோசை’, ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’, ‘நாதமெனும் கோவிலிலே’, ‘என்னுள்ளில் எங்கோ’, ‘எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது’, ‘கண்டேன் எங்கும் பூமகள் ஊர்வலம்’, ‘என் கல்யாண வைபோகம்’, ‘நானே நானா யாரோதானா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘நினைவாலே சிலை செய்து’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
பாலைவனச்சோலை படத்தில் வந்த ‘மேகமே மேகமே’ பாடல் கஜல் வடிவிலான பாடல். இறப்பது உறுதி என்று தெரிந்துகொண்ட இளம்பெண் ஒருத்தி பாடும் கழிவிரக்கம் மிகும் பாடல் அது. ‘என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்’ பாடலின் இரண்டாவது சரணத்தில் ‘சுகங்கொண்ட சிறுவீணை’ என்ற சொல்லை அவர் உச்சரிக்கும் விதம் பாடலின் உச்சம்.
புனித அந்தோணியார் படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் ‘ தோன்றும் தாரகை எல்லாம் தேவதை ஆகும்’ என்று தொடங்கும் கிறித்துவ நம்பிக்கை சார்ந்த பாடல் எல்லோருக்கும் எப்போதும் பிடித்த பாடல்.
நெஞ்சமெல்லாம் நீயே படத்தில் இடம்பெற்ற ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது’ என்ற பாடலை வேறு யாராவது பாடியிருந்தால் இத்தனை அழகாக இருந்திருக்குமா என்பது ஐயமே. ‘மார்கழிப் பூக்கள் என்னைத் தீண்டும் நேரமே வா… தாமரை ஓடை…இன்ப வாடை…’ ஆகிய இடங்களின் நெளிவுசுழிவுகளை எத்தனை முறை கேட்டாலும் செவிகள் அலுப்படையா.
மீனவ நண்பன் படத்தின் ‘பொங்கும் கடலோசை’ என்ற பாடல் கடலலையின் ஏற்ற இறக்கங்களை பாட்டில் கொண்டு வருவதாகும். அப்பாவியான கணவனை ஏமாற்றி வேறு ஒருவனது நெருக்கத்தில் மலையில் பயணிக்கும் ஒருத்தியின் உள்ளக்கிடக்கையை காம வேட்கையை வெளிப்படுத்தும் ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’.
வெளிவராத படமான நிஜங்கள் எம் பி சீனிவாசன் இசையில் அமைந்த பாடல். பாரதிதாசன் எழுதிய அம்மா உந்தன் கை வளையாய் ஆக மாட்டேனா என்ற பாடல் அரிதான ஒன்று.
இசைக்கருவிகளின் ஆதிக்கம் குறைந்து பாடலின் ஆழத்துக்கும் வாணியின் குரலுக்கும் இங்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
“ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் பூமியில் பிறந்திட வேண்டுகின்றேன்!
அத்தனை பிறப்பிலும் இத்தனை உறவும் அருகினில் இருந்திட வேண்டுகின்றேன்!”
இது அவர் பாடியவற்றுள் அவருக்கு மிகவும் விருப்பமான பாடல் என்று சொல்வார்.
நாதம் எனும் கோவிலிலே ஞான விளக்கு ஏற்றியவர். 70 களில் எங்கிருந்தோ வந்த இந்த தேவதையின் குரல் தான் யாரும் செய்யாத, செய்ய முடியாத சாதனைகளைச் செய்தது. – 19 மொழிகளில், 10,000 பாடல்கள் மேல் பாடியவர். ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி கண்டவர்,
எந்த மொழியில் பாடினாலும், இவரின் தாய்மொழி இது தானோ என்ற வியப்பை ரசிகர்களுக்குத் தந்தவர். நடிகர் திலகம் சிவாஜியைப் போல, இவரை one take பாடகி என்பார்கள். பெரும்பான்மையான பாடல்கள் ஒரே டேக்கில் பாடல்கள் பதிவு செய்தவர் வாணி அவர்கள்.
நானே நானா யாரோ தானா ஒரு வகை என்றால், நானா பாடுவது நானா என்பது இன்னொரு வகை. மல்லிகை என் மன்னன் மயங்கும் மற்றும் வேண்டும் வேண்டும் உங்கள் உறவு என்ற பாடல்கள் தாம்பத்தியத்தின் அழகை, உறவை, உணர்வை உணர்த்தும் வேளையில், உறவின் பிரிவை, இவரின், கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான், கண்ணின் மணி சீதை தானும் நடந்தாள் என்ற பாடல் கூறும். இப்படி, கவிஞர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் நினைப்பதை , தனது குரலால் வெளிப்படுத்தியவர் திருமதி வாணி
மெல்லிசை மன்னர் இசையில் வெளி வந்த மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல், படத்தின் மன்னனை மட்டும் அல்ல , மாநிலத்தை, மானுடத்தை மயங்கவைத்தது. கிறங்க வைத்தது. திரை உலகின் தீர்க்க சுமங்களியானது இந்தப் பாடல் என்றால் மிகை ஆகாது.
ஸ்வரங்களை அவர் பாடும் அழகே தனி – அக்கா என்ற திரைப்படத்தில் வரும், மாலை மலர் பந்தலிட்ட மேகம் என்ற பாடலில் மற்றும், அபூர்வ ராகங்கள் படத்தில் வரும் ஏழு ஸ்வரங்களுக்குள் போன்ற பாடல்களை அவர் அசாத்தியமாக பாடி இருப்பார். சரிகமபதநி என்ற ஸ்வரங்களால் சாகசம் செய்தவர்.
மொழியின் இலக்கணம் அறிந்து பாடுவதில் சமர்த்தர். ஒரு பாடல் போதும் இதைக் கூற – நிழல் நிஜமாகிறது படத்தில் இடம் பெற்ற, இலக்கணம் மாறுதோ – இலக்கியம் ஆனதோ – இதில் வல்லினம் மெல்லினம் வேறுபாடு, துல்லியம் என்றே சொல்லும் :
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ
என்ற வரிகளில், தமிழின் உச்சரிப்பு தெரியும். அதேபோல, கவிஅரசின் அந்தாதி வரிகள் கொண்ட , வசந்த கால நதிகளிலே, ஆடி வெள்ளி தேடி உன்னை போன்ற பாடல்களும் இவரின் மொழி அழகிற்கு சான்று.
தெளிவான மொழி உச்சரிப்பு, சங்கதிகளை உள் வாங்கி பாடுதல், தொடமுடியாத சங்கதியையும் பிசிறில்லாமல் பாடும் திறமை என்று வலம் வந்த கலைவாணி அவர்கள், இறைவனடி சேர்ந்தாலும். அவரின் அழியாப் பாடல்கள் இருக்கும் வரை, இசைப் பிரியர்களுக்கு, இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே ஆனந்தம் தானே.!துயரிலும் மகிழ்விலும் எப்போதும் நினைவில் இருப்பார் வாணி!
வாழ்க இசை அரசி வாணி அம்மாவின் புகழ் !