'சாமுண்டி' படத்திற்காக தேவா இசையமைத்த இந்தப் பாடலை ஒட்டி பகிர்வதற்கு சில சுவாரஸ்ய அவதானிப்புகள் உண்டு.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தேவா நிறைய ரசனையான மெலடிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம். 'தேனிசை தென்றல்' என்கிற அடைமொழிக்கு அவர் நியாயம் கற்பித்துக் கொண்டிருந்த இந்த காலக்கட்டத்தில் வந்த பாடல்களில் இந்த 'கண்ணுல பால ஊத்த வந்த கண்ணம்மா' பாடலும் ஒன்று.
அண்ணாமலை படத்தின் 'அண்ணாமல அண்ணாமல' பாடலின் ஹேங் ஓவரிலேயே தேவா கொடுத்த மாதிரியான உணர்வைத் தரும் மெட்டு இது. இந்தப் பாடலின் சரணத்தின் சாயலை தேவாவின் வேறு சில மெலடிகளிலும்கூட கேட்க இயலும்.
இந்தப் பாடலோடு நினைவுக்கு வரும் மற்றொரு சுவாரஸ்யம் 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' படத்திற்காக தேவா இசையமைத்த பாடலாக இது இருக்கலாம் என்கிற எண்ணம்.
இந்தப் பாடலின் தொடக்க வரிகளுக்கு ஏற்ற சூழல் 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' படத்தில் உண்டு. அந்தப் படத்தின் நாயகனான சரவணனின் கண்ணில் தூசி விழுந்து உறுத்த, நாயகி ரஞ்சிதா தாய்ப்பாலை கண்ணில் விடுகிறார் போல காட்சி ஒன்று வரும். அந்தச் சூழலுக்கு போடப்பட்ட மெட்டாகத்தான் இது இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
தாய்ப்பாலை வைத்து இப்படி ஒரு காட்சியும், அதையொட்டி டூயட்டுமாக இருந்தால் புனிதம் என நம்பிக்கைக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் விரசத்தைக் கலந்தது போல ஆகிவிடும்.
அதுவே படத்திற்குப் பிரச்சனைகளைக் கொண்டு வரக் கூடும் என நினைத்து இந்தப் பாடலை இறுதித் தருணத்தில் நீக்கியிருக்கக் கூடும் என்பதெல்லாம் நானே யோசித்துக் கொண்ட காரணங்கள்.
இந்தப் பாடலின் பல்லவியில் ' ரஞ்சிதமே ரஞ்சிதமே' என நாயகி ரஞ்சிதாவின் பெயரை நினைவூட்டும் வரிகள் அமைந்திருப்பதும்கூட, இந்தப் பாடல் 'பொண்டாட்டி ராஜ்ஜியம்' படத்திற்காகப் போடப்பட்ட மெட்டாகத்தான் இருக்க வேண்டும் என்கிற சந்தேகம் வலுவாக மற்றொரு காரணம்.
இருப்பினும், பொண்டாட்டி ராஜ்ஜியத்தின் பாடலாசிரியர் காளிதாசன், சாமுண்டிக்கு பாடல்கள் எழுதியது வாலி. வேறொரு படத்திற்கு இசையமைக்கப்பட்ட பாடல், இன்னொரு படத்தில் பயன்படுத்தப்படுவதெல்லாம் நிறைய நடக்கும்.. அப்படி ஆகும் போது, பாடலாசிரியர் பெயர் , இன்னொரு பாடலாசிரியரின் பெயரில் வருவதும் நடக்கும்.
ஆனால் இங்கே 'உன்ன நான் தொட்டதும் தொட்டதும் தொட்டதும் கொம்புத்தேன் சொட்டுது சொட்டுது' என்றெல்லாம் வரிகள் இருக்கும். இது அக்மார்க் வாலி டச். அப்போ சாமுண்டிக்காகத்தான் இந்தப் பாடல் உருவானதா? இல்லை இந்த மாதிரி வெவகாரமான பாடலை பொண்டாட்டி ராஜ்ஜியத்திலும் வாலியே எழுதி கொடுத்தாரான்னும் யோசிச்சு..
எப்படியாச்சும் இந்த பாட்டு பொண்டாட்டி ராஜ்ஜியம் ரஞ்சிதாக்கு போட்ட பாட்டுதான்னு நிரூபிச்சிப்புடணும்னு ஒரே கொதியாக இருக்கிறது.
இசையமைப்பாளர் தேவா கண்ணில் பட்டு இதற்கான விடை கிடைத்தால் இந்த ஜென்மம் ஈடேறிடும்.
நன்றி: நாடோடி இலக்கியன் @ அ.பாரி