கர்நாடக இசைப் பாடகரும், திரைப்பட பின்னணிப் பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் 1933ம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நாகை மாவட்டம் சீர்காழியில் பிறந்தார்.
பி.எஸ்.செட்டியார் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். இவர் இசைமாமணி பட்டமும் (1949), சங்கீத வித்வான் பட்டமும் (1951) பெற்றார். சென்னை மியூசிக் அகாடமியில் 1951-ல் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.
1953-ல் பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் சிரிப்புத்தான் வருதையா என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதற்கு முன்னரே ஒளவையார் திரைப்படத்துக்காக ஆத்திச்சூடி பாடியிருந்தார்.
சீர்காழியின் குரல் கோயில் மணியோசையின் கம்பீரத்தைக் கொண்டது. பூமி அதிர முழங்கும் போர் முரசைப் போன்று பேருண்மைகளையும் ஆழமான தத்துவங்களையும் அழுத்தமாக நம் மனதில் பதியவைக்கக்கூடியது. ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ என்னும் தத்துவப் பாடலையும், ‘மரணத்தைக் கண்டு கலங்கும் விஜயா’ என்று போதனை செய்யும் கிருஷ்ணனின் குரலையும், தமிழர்களின் காதுகளிலும் நினைவுகளிலும் அழியாத ஒலிச்சித்திரமாக்கியவர் சீர்காழி.
‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்று கர்ணனுக்காக உருகிய குரலும் அவருடையதுதான். இந்தப் பாடல்களின் ஆதாரமான தன்மை சீர்காழியின் குரலால் எப்படி வலுப்பெற்றிருக்கிறது என்பதை இந்தப் பாடல்களை ஒருமுறை கேட்கையில் புரியும்.
மொத்தத்தில் சீர்காழியின் குரலில் சுருதி சுத்தம், சாரீர வளம், பாவம் போன்ற இசையின் அனைத்து அம்சங்களும் நிறைந்து காணப்படும். பாடலைப் பாடும்போது வல்லினம், மெல்லினம் அறிந்து பாடுதல், பக்கவாத்தியங்களுக்கு மேல் குரல் ரீங்காரம் செய்த முறைமை போன்றவை சிறப்பாக இருக்கும். கே.பி.சுந்தரம்பாளுக்கு அடுத்ததாக ஒலிபெருக்கியே தேவையில்லை என்று சொல்லத்தக்க குரல் வளம் சீர்காழியினுடையது. திரையிசையின் மெல்லிசைக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளாமல் செவ்வியல் இசையின் கனத்தைத் திரைக்கு அளித்து அதன் மதிப்பைக் கூட்டிய சாதனையாளர் சீர்காழி.
இதனிடையே பக்திப் பாடல்களில் கோலோச்சிய அளவுக்கு திரைப் பாடல்களில் சீர்காழியால் ஜொலிக்க முடியவில்லை. தமிழ்த் திரைப்படங்கள் காதல் என்னும் உணர்வில் ஊறியவை. சீர்காழியின் கம்பீரம் காதலையும் தத்துவமாக மாற்றிவிடும். இதனால்தான் திரை இசைப் பாடல்களில் அவரால் பிறரைப் போல ஜொலிக்க முடியவில்லை. ஆனால், தனக்கான பாடல் என்று வரும்போது – அதாவது, கம்பீரம், தத்துவம், உருக்கம் – அதில் தனக்கு இணை யாரும் இல்லை என்பதைக் காட்டிவிடுவார்.
சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தன் இனிமையான குரலால் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் (1988) மறைந்தார்.