டிராவலர்ஸ் அன்ட் மெஜிஷியன் 2003ல் வெளிவந்த பூடான் நாட்டு படம். ஆனால் இது ஒரு பிரான்ஸ் நாட்டு தயாரிப்பு. இயக்குநர் என்னவோ பூடான்காரர்தான் பெயர் Khyentse Norbu. அரசியலும் திரைப்படக் கலையும் பயின்றவர்.
பிரமாதமான படம். பூடான் நாட்டின் மலைப் பகுதிகளில் எடுக்கப்பட்டது. அவ்வளவு அழகான பகுதியை விட்டு அமெரிக்கா செல்ல ஆசைப்படுகிறான் கதையின் நாயகன். இத்தனைக்கும் அவன் ஒரு அரசு ஊழியன். அமெரிக்க தூதரகத்தில் வேலைபார்க்கும் நண்பன் ஒருவனின் உதவியோ விசாவும் பெற்றுவிடுகிறான். இரண்டு நாட்கள் அவன் பணிபுரியும் கிராமத்தை விட்டு விமானம் ஏறுவதற்காக தலைநகர் திம்ப் செல்ல புறப்படுகிறான். ஆனால் பஸ்ஸை தவறவிடுகிறான்.
ஆனாலும் விடுவதாக இல்லை. குறுக்கு வழியில் மலைகளை கடந்தும் டிரக் பயணம் செய்தும் இலக்கை அடைய நினைக்கிறான். இந்தப் பயணத்தில் சந்திக்கும் பல்வேறு மனிதர்கள் மற்றும் ஒரு புத்தத் துறவி - அவர் சொல்லும் ஒரு கதை இவற்றால் மன சஞ்சலம் அடைகிறான்.
இது போதாதென்று இந்த பயணத்தில் அவன் சந்திக்கும் ஒரு பெரியவரும், அவருடைய அழகான மகளும் அவனை தடுமாற வைக்கின்றனர். இறுதியில் அவன் விமானம் போயே போயிற்று. இருந்தாலும் அவன் தனது ஊரின் அழகையும், வாழ்க்கையையும் ரசித்து தன் சொந்த கிராமத்துக்கே திரும்புவது போல் கதை முடிகிறது. எந்த ஊருக்குச் சென்றாலும் நம் சொந்த ஊரின் சுகம் நமக்கு கிடைக்குமா? என்ற உண்மையே நமக்கு பளிச்சிடுகிறது