1980-1990-களில் பின்னணிப் பாடகியாக திரையிலும் தன் கணவர் ரமணனுடன் இணைந்து மேடைகளிலும் கலக்கியவர் உமா ரமணன். எம்.ஏ., பட்டப்படிப்பு படித்தவர். கல்லூரி நாட்களில் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர்.
விமானப் பணிப்பெண்ணாக ஆகவேண்டுமென்பதே கனவாகயிருந்தது இவருக்கு.
இந்நிலையில் தான் 1972-இல் தனது வருங்கால கணவரைச் சந்திக்கிறார். மனம் மாறுகிறது. அவரது ”மியூசியானோ இசைக்குழுவில்” பாடகியாக இணைகிறார்.
4 வருடங்கள் செல்கிறது. காதலர்களான இவ்விருவரும் தம்பதியாகின்றனர்.
சுமார் 6000 கச்சேரிகளில் இருவரும் இணைந்து இசை விருந்தளித்தனர். அப்போதுதான் ஏ.வி.ரமணன் “நீரோட்டம்” என்னும் படத்திற்கு இசையமைப்பாளராகிறார். அப்படத்தில் தனது காதல் மனைவியைப் பாடகியாக அறிமுகம் செய்கிறார். பின்னர் பல்வேறு இசையமைப்பாளர்களிடமிருந்து அழைப்புக்கள் வருகிறது. ”நிழல்கள்” படத்தில் இளையராசாவின் இசையில் பாடும் சந்தர்ப்பம் அமைகிறது. ”பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய்” என்ற கங்கை அமரனின் பாடலைத் தீபன் சக்கரவர்த்தியுடன் இணைந்து பாட இப்பாடல் இவரை முன்னணிக்கு இட்டுச்சென்றது.
தொடர்ந்து இளையராசாவின் இசையிலேயே நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடினார். “எங்கிருந்தாலும் வாழ்க” படத்தில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து “ஆசை நெஞ்சில்”, ”ஏவி.எம்.மின் புதுமைப் பெண்” படத்தில் கே.ஜே.யேசுதாசுடன் இணைந்து “கஸ்தூரி மானே கல்யாணத் தேனே”, மகாநதி” படத்தில் ”ஸ்ரீ ரங்க ரங்கநாதனின் பாதம் மங்கலம்”, “தூரல் நின்னு போச்சு” படத்தில் “பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்”, “கோவில் புறா” படத்தில் “அழகே தமிழே அழகிய”, ”மெல்லப் பேசுங்கள்” படத்தில் “செவ்வந்திப் பூக்களில் செய்த வீணை”, ”பகவதிபுரம் ரயில்வே கேட்” படத்தில் “செவ்வரளி தோட்டத்திலே உன்னெ நெனச்சேன்”, “அன்பே ஓடி வா” படத்தில் “காதில் கேட்டதொரு பாட்டு”, “தென்றலே என்னைத் தொடு” படத்தில் “கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலைப் பாத்திருந்தேன்”, “அரங்கேற்ற வேளை” படத்தில் “ஆகாய வெண்ணிலாவே அலை போல” , “கேளடி கண்மணி’” படத்தில் ”கே.ஜே.யேசுதாசுடன் சேர்ந்து”நீ பாதி நான் பாதி கண்ணே”,, தண்ணியிலே நினைஞ்சா, அது தங்கம்ன்னு , டி.ராஜேந்தர் இசையில் ”ஒரு தாயின் சபதம்” படத்தில் “ராக்கோழி கூவையிலே ஏன் ராசாத்தி”, வித்யாசாகர் இசையில் “புதையல்” படத்தில் ”பூத்திருக்கும் வண்ணமே” போன்ற பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.
இவரது கணவர் “சம்சாரம் என்பது வீணை” படத்தில் “பாட வந்தேன் உன்னைத்தானே”போன்ற பல பாடல்களைப் பாடியவர்.