Breaking News :

Sunday, February 23
.

ஆற்காடு மக்கன்பேடா செய்வது எப்படி?


மக்கன் பேடா கிட்டத்தட்ட பாதுஷாவைப் போலவே இருக்கும் நன்கு ஜீராவை குடித்து இருக்கும்! மதுரைக் காரர்களுக்கு புரியும்படி சொன்னால் அப்படியே பால்பன் சாப்பிட்டது போலிருக்கும் மக்கன் பேடாவின் மேற்புறம் அம்மைத் தழும்பு வந்தவர் முகம் போல தோற்றமளிக்கும் ஜீராவில் ஊறி ருசிக்க அருமையாக இருக்கும்.!

நான் சொன்னது வட இந்திய ஸ்டைல் மக்கன் பேடா.! ஆற்காடு மக்கன் பேடா வேறு.! எப்படி பாம்பே அல்வாவுக்கும் திருநெல்வேலி அல்வாவுக்கும் வித்யாசம் இருக்கிறதோ அதே அளவு வித்யாசம் ஆற்காடு மக்கன் பேடாவுக்கு உண்டு.. முதன் முதலில் ஆம்பூரில் இதைப் பார்த்ததும் காலா ஜாமூன் என்றே நினைத்தேன்.!

காலா ஜாமூன் குலாப் ஜாமுனின் பெரியப்பா! அதே குலாப் ஜாமூன் சுவை! ஆனால் இதில் தயிர் கலந்திருக்கும்! கறுப்பான ஜாமூன் மேலே முந்திரி தூவி தருவார்கள் ஒரு ஜாமுனே டென்னிஸ் பந்தை விட கொஞ்சம் சிறியதாக இருக்கும் இதுவே காலா ஜாமூன்! முதலில் இந்த மக்கன் பேடாவை நான் காலா ஜாமூன் என்றே நினைத்தேன்!

இது பொன்னிறத்தில் குலாப் ஜாமூனின் ப்ரவுன் கலரில் இருந்தது! பால்பன் போல இருந்த இதை மக்கன் பேடா என்கிறார்களே! நாம் பார்த்த மக்கன் பேடா வேறே என்னும் சந்தேகம் இருந்தது. உடன் வந்த நண்பர் ‘ப்ரீத்திக்கு நான் கேரண்டி’ போல ஒண்ணு சாப்பிட்டு பாருங்க நிச்சயம் இன்னொண்ணும் சாப்பிடுவிங்க என்றார்!

அரைமனதாக எடுத்து முதல் கடியிலேயே பாகும், பருப்பும், தெளி தேனும் என் நாவில் இனிமையாய் பாயக் கண்டேன்! மைதாவுடன் பாலில் எடுத்த கோவாவும் சேர்த்து செய்திருக்கிறார்கள் என்பது சுவையில் தெரிந்தது! அதிகம் கடிக்க வேண்டிய அவசியமே இன்றி நன்கு பாகில் ஊறி உள்ளே முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட்..

உலர் திராட்சை என அதகளமான ருசியில் இருந்தது இந்த மக்கன் பேடா, அந்நியன் படத்தில் வரும் அம்பி, ரெமோ, அந்நியன் என 3 வேடங்களில் பால்பன், ஜாமூன், பேடா மூன்றின் கலவையான ருசியை ஆற்காடு மக்கன்பேடாவில் ருசித்தேன். வட இந்திய மக்கன் பேடாவை சுவைத்ததற்கும் இதற்கும் உள்ள அனுபவமே வேறு.

அதிலும் அந்த செட்டியார் கடை மக்கன் பேடா உலகபிரசித்தம் என்று சொன்னார்கள். ஆற்காடு நவாபின் நாவையே அடிமையாக்கி தனக்கு சலாம் போட வைத்த பெருமையுடையது என்றனர்! நிச்சயம் ஆம்பூர், ஆற்காடு பகுதிகளுக்கு சென்றால் பிரியாணி மட்டுமல்ல செட்டியார் கடை மக்கன் பேடாவையும் சுவைக்க மறக்காதீர்கள்.!

இப்போது அதை நினைத்தாலும் என் நாவின் ருசி மொட்டுகள் குபீரென எழுந்து ஒரு சல்யூட் அடிக்கும். ஆற்காடு மக்கன் பேடா மென்மையான கோவாவில் உலர் பருப்புகளின் சுவையோடு இனிய பாகும் சேர்ந்து உங்களுக்கு ஒரு அற்புத சுவையானுபவத்தை தரும்.!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.