தேவையானவை:
முட்டை - 3
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சைமிளகாய் - ஒன்று (கீறியது)
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
பனீர் - 50 கிராம் (உதிர்த்தது)
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முட்டையை உடைத்து ஒரு பவுலில் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து அது பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியவுடன் பச்சைமிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் உதிர்த்து வைத்துள்ள பனீர், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையைச் சேர்த்து, முட்டை பொடி பொடியாக ஆகும் வரை அடிபிடிக்காமல் கிளறி கடைசியில் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
முட்டை பெப்பர் வறுவல்
தேவையானவை:
முட்டை - 2 (வேக வைத்தது)
பெரிய வெங்காயம் - ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வேகவைத்த முட்டையை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, சிறிது வதங்கியவுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் தெளித்துக் கிளறவும். இதில் நறுக்கி வைத்துள்ள முட்டைத் துண்டுகளைச் சேர்த்து மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் தூவி முட்டை உடையாமல் திருப்பி விட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
முட்டைப் பணியாரம்
தேவையானவை:
முட்டை - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
(பொடியாக நறுக்கவும்)
பச்சைமிளகாய் - 2
(பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இட்லி மாவு - 2 கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பவுலில் இட்லி மாவுடன் உடைத்த முட்டை, பெரிய வெங்காயம், மஞ்சள்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துத் தாளித்து இட்லி மாவில் சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் கால்வாசி அளவுக்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இனி, கலந்து வைத்துள்ள இட்லி முட்டை மாவுக் கலவையை ஒவ்வொரு பணியாரக் குழியிலும் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் ஒரு குச்சியால் பணியாரத்தைத் திருப்பிவிட்டு மறுபக்கமும் வேகவைத்து சூடாக எடுத்துப் பரிமாறவும்.