தேவையானவை
கோவைக்காய் – 200 கிராம்
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 2 ,
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – 3/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் – 12
மிளகு – 1 1/2 டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 4
கருவேப்பிலை – ஒரு கொத்து
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுந்து – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கோவைக்காயை குறைந்த தீயில் வைத்து ஏழு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை இதனுடன் சேர்த்து இரண்டையும் நன்றாக வதக்க வேண்டும். தக்காளி லேசாக வதங்கியதும் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இவை மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் இதை அப்படியே எடுத்து வைத்து விடுங்கள்.
மறுபடியும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, வேர்க்கடலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் மிளகு சீரக பொருட்களை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதேபோல் வதக்கி வைத்திருக்கும் கோவைக்காயை போட்டு அதிலும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதையும் அரைத்து கொள்ளுங்கள்.
இப்பொழுது மறுபடியும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து போன்றவற்றை சேர்த்து நாம் முதலில் அரைத்து வைத்த மிளகு, சீரக விழுதை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இரண்டு நிமிடம் வதங்கிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் கோவைக்காய் விழுதையும் அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக கலந்து எண்ணெய் பிரியும் பொழுது அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறலாம். இந்த சட்னியை இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்திற்கும் போட்டு நாம் சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்..