செய்முறை
இதற்கு முதலில் பத்து முருங்கைக்காயை எடுத்து சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இந்த கிரேவிக்கு ஒரு பொடியை தயார் செய்ய வேண்டும். அதற்கு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 2 ஸ்பூன் தனியா சேர்த்து வறுக்க வேண்டும்.
தனியா நிறம் லேசாக மாறிய பிறகு அதில் 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சோம்பு, சிறிதளவு பட்டை, 3 கிராம்பு, 2 காய்ந்த மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, வாசம் வரும் வரை வறுத்த பிறகு இவற்றை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்த பிறகு, 50 கிராம் சின்ன வெங்காயத்தை சின்னதாக நறுக்கி சேர்க்க வேண்டும். வெங்காயம் நிறம் மாறியதும் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் 2 காய்ந்த மிளகாய் அதனுடன் சேர்க்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும். இதை பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பிறகு அதில் மூன்று தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு அதில் தேவைக்கேற்ப உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இரண்டு நிமிடம் கழித்து நாம் நறுக்கி வைத்திருக்கும் முருங்கைக்காயை அதில் சேர்க்க வேண்டும். முருங்கைக் காயில் மசாலா அனைத்தும் சேரும் அளவுக்கு நன்றாக பிரட்டி விட்ட பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி முருங்கைக்காயை மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை கிரேவியை நன்றாக கிளறி விட வேண்டும். முருங்கைக்காய் நன்றாக வெந்த பிறகு அதில் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். அவ்வளவு தான் அசைவ சுவையில் சுவையான முருங்கைக்காய் கிரேவி தயாராகி விட்டது.