டீன் ஏஜ் பருவகாலம் தான் அபாயகரமானது என்று நினைத்திருப்போம். ஏனெனில் அப்போது தான் முடிவு எடுக்க தடுமாறி எந்த குழியில் தவறி விழுவோம் என்றே தெரியாமல் இரண்டாங்கெட்ட மனதாக தவிச்சு போயிருப்போம். வயது ஏற ஏற முதிர்ச்சியினால் அதையெல்லாம் சீர் செய்துக் கொள்ளலாம் என்று நம்பியிருப்போம். ஆனால் உண்மை வேறு.
நாற்பது வயதுக்கு மேல் தான் அபாயகரமானது (விதிவிலக்குகள் உண்டு). இந்த வயது வந்தவுடன் தான் ஒருவிதமான வெறுமை மனநிலை தோன்றும். விரக்தியான மனம் அலைபாயும். காதலும் காமமும் தீர்ந்து வேறொரு பரிமாணத்தை தேடும். இச்சமயத்தில் உடலும் ஒத்துழைக்காது. நாம் கொஞ்சம் கொஞ்சமாக இளமையை இழந்துக்கொண்டு வருகிறமோ என்றெல்லாம் துயருறும்.
ஏதாவது புதியதாக செய்தால் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்ற விஷம் தடவிய கேள்விகள் வரும். இதனால் நம்மை யாரும் அடிமை படுத்தக்கூடாது, ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்ற மனப்பான்மை மேலோங்கும். கண்டிக்கும் வகையில் யாராவது உரையாடினால் அவர்களை தவிர்த்து மிகச் சாதாரணமாக யாராவது புகழ்ந்தால் அவர்களை கொண்டாடவும் மனம் துடிக்கும்.
தனிமையில் தவித்திருக்கும் மனதை தனிமை போக்குகிறேன் என்ற உறவுகள் முளைக்கும். புதிது புதிதாக தோன்றும். நான் செல்லவில்லையே என்றாலும் அதுவாகவே வரும். வருகின்ற உறவு ஆர்வத்தை தூண்டும். இல்லாததை எல்லாம் ஆஹா ஓஹோ என்று புகழும். நான் திடகாத்திரமான மனம் உடைய நபர் என்றாலும் அச்சமயத்தில் வழுக்கி விழ எல்லாவிதமான சூழல்களும் கைகொடுக்கும். சந்தனம் பூசிய வார்த்தைகளும்
கமகமக்கும் செயல்களும் அரங்கேறும்.
அந்த உறவு நிலைக்காது.
இறுதி வரை வராது. எதற்கு வருமோ அதை தீர்த்துவிட்டு சென்றுவிடும். "இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை." தனிமை வாய்ப்புகள் பயன்படுத்திக் கொள்ளபட்டன.
இரு உறவுகளும் அனுபவித்தன.
அவ்வளவு தான். இதை செய்வதனால் ஒன்றும் கெட்டுவிடாது. இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் விட்டது விட்டுவிட்டதென புரிந்துக் கொண்டு விலக பாருங்கள். அதையே தொங்கிக் கொண்டிருப்பதால் எந்த பிரயோசனையும் இல்லை இங்கு.
இதற்கு பின் ஏன் வாழுகிறோம் என்ற நிலைமையை மாற்றுங்கள்.
தனிமையை நேசியுங்கள் அல்லது நம்பத்தகுந்த உறவால் அதை முறியடியுங்கள். பரிபூரண வாழ்க்கையை வாழ தொடங்குங்கள்.
நீங்கள் விட்ட வாழ்வு அங்கேயே தான் உள்ளது. என்ன தேவை என்று வேறோரு உறவுக்கு நுழைந்தீர்களோ அந்த உறவும் அந்த தேவையை பூர்த்தி செய்திருக்காது. ஏனெனில் உங்கள் தேவைகளை உங்களால் தான் கொடுக்கமுடியும்.
'உங்கள் வாழ்க்கைக்கு முழு பொறுப்பு நீங்கள்தான்'
இதுவும் கடந்து போகும்...
வாழ்க்கை வாழ்வதற்கே மற்றவர்களுக்காக இல்லை...!