Breaking News :

Sunday, May 04
.

வயிற்று பிரச்னைக்கு அதலைக்காய்!


வெளிநாட்டு கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்றவை தெரிந்த அளவுக்கு நம்மூர் காய்கள் பலவற்றை நாம் அறிந்திருக்கவில்லை. அதில் ஒன்றுதான் பாகற்காய் இனத்தைச் சேர்ந்த அதலைக்காய். அதலக்காய் என பேச்சு வழக்கில் அழைக்கப்படும் இது சாதாரணமாக கண்மாய்க் கரைகள், வேலியோரங்கள் போன்றவற்றில் வளரும் கொடி வகையாகும். மழைக் காலத்தில் மட்டுமே விளையும் தன்மையுடனும் அதிக மழை என்றாலும் பாதிப்படையாத தன்மையும் கொண்ட தாவரம் இது.

இக்கொடிகள் பாகற்காய் போலவே படரும் தன்மை உடையது. பார்ப்பதற்கு மிளகாயைப் போல தோற்றம் கொண்டிருக்கும். ஆனால், இவற்றுக்குப் பந்தல் தேவையில்லை. பல ஆண்டுகள் வாழும் தன்மை உடையது இதன் சிறப்பு. இக்கொடி ஒவ்வோர் ஆண்டும் வறட்சிக்காலத்தில் காய்ந்து விழுந்துவிட்டாலும் மண்ணுக்கு அடியிலிருக்கும் இதன் கிழங்கு உயிருடன் இருக்கும்.

இக்கொடியின் இலைகளின் அடிப்பகுதி இதய வடிவாகவும் எஞ்சிய பகுதி ஒருபுறம் சாய்ந்தோ அல்லது சிறுநீரக வடிவிலோ இருக்கும். ஒரே கொடியில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியே இருக்கும்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் விளையும் இக்காய் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும், ஆந்திரா, கர்நாடகாவிலும் குறைந்த அளவில் காணப்படுகிறது. பல வகையான மருத்துவக் குணங்கள் கொண்ட இக்காய்  பற்றிய விபரங்களை தோட்டக்கலை ஆய்வாளர்களின் பதிவுகள் மூலம் அறிய முடிகிறது.

இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின் சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. சித்த மருத்துவத்தில் பயன்படும் மூலிகை செடி, கொடிகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, பல நோய்களுக்கு தீர்வு தருகிறது. இவற்றின் இலைகளில் இருந்து பெறப்படும் மருந்து யானைக்கால் நோயை உண்டாக்கும் கியூலெக்சு வகை கொசுக்களை எதிர்க்கவல்லது என்றும் அறிந்துள்ளனர்.

குறிப்பாக, தற்போது பெருகிவரும் நீரிழிவுக்கு இந்த மூலிகை சிறந்த நிவாரணம் தருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், மஞ்சள்காமாலை பாதிப்புள்ளவர்கள் இந்தக் காயை அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் நிவாரணம் பெறலாம். இதில் உள்ள சத்துக்கள் வயிற்றில் சேரும் தீங்கு தரும் கிருமிகளை அழிப்பதோடு, குடற்புழு பிரச்னைகளையும் சரி செய்கிறது என்கின்றனர்.

அதலைக்காய் கசப்புத் தன்மை கொண்டதாக இருந்தாலும் உண்பதுக்கு ஏற்ற சுவையோடு இருக்கும் என்பதால் இதை புளிக்குழம்பு, பொரியல் குழம்பு போன்றவற்றில் பயன்படுத்தி உண்ணலாம். பாகற்காய் போலவே இதையும் வற்றல் போட்டும் பயன்படுத்தலாம்.

வயிற்றுப் பிரச்னையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கும் அதலக்காயை இனி எங்கு பார்த்தாலும் வாங்கி உணவில் சேர்த்து அதன் மருத்துவ நன்மைகளைப் பெறுவோம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.