நம் வீட்டு சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் உள்ளன. அதில் தினசரி சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தும் ஒரு பொருள் தான் பிரியாணி இலை. நிறைய பேர் பிரியாணி இலையை வெறும் நறுமணத்திற்காக தான் சேர்க்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் பிரியாணி இலை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இந்த இலையை சமையலில் சேர்ப்பதைத் தவிர, இதை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடித்து வந்தால், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பது தெரியுமா? ஏனெனில் இந்த இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 மட்டுமின்றி, மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவைகளும் அதிகமாக நிறைந்துள்ளன.
பாரம்பரிய மருத்துவத்திலும் இந்த பிரியாணி இலை பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது பிரியாணி இலையை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
நீங்கள் செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் பிரியாணி இலையை நீரில் கொதிக்க வைத்து குடியுங்கள். இதனால் அந்த இலையில் உள்ள சத்துக்கள் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, உணவுகளை சிறியதாக உடைத்தெறிந்து, அஜீரண கோளாறு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் பிரியாணி இலையில் உள்ள சேர்மங்கள் வயிற்றுப்புண்ணை ஆற்றும். குடல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த நீரை குடிப்பது மிகவும் நல்லது.
பிரியாணி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ளன. இதனால் இந்த பிரியாணி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரும் போது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதுவும் தற்போது HMPV வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால், தினமும 1/2 டம்ளர் இந்த நீரை குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெற்று, தொற்றுநோய்களின் அபாயம் குறையும்.
பிரியாணி இலை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள், இயற்கை வழியில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த நினைத்தால், காபி, டீ-க்கு பதிலாக, பிரியாணி இலை நீரை குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
பிரியாணி இலைகளில் உள்ள குறிப்பிட்ட கலவைகள், இதயத்தின் நுண் குழாய்களை வலுப்படுத்த உதவுகின்றன. இதன் மூலம் இரத்த அழுத்தம் குறைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் மேம்படுகிறது. முக்கியமாக பிரியாணி இலை நீரை குடித்து வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய நோய்களின் அபாயமும் குறையும்.
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், அதை சிரமப்படாமல் குறைக்க நினைத்தால், பிரியாணி இலை நீர் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இந்த நீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, அதிகப்படியான கலோரிகளை எரித்து, உடல் எடையை குறைக்க உதவுகின்றன. மேலும் பிரியாணி இலை நீரை குடித்து வருவதன் மூலம், உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான நீர் வெளியேறி, உடல் லேசாகவும், ஆற்றலுடனும் இருக்கும்.
மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியை சந்திக்கும் பெண்களுக்கு பிரியாணி இலை நீர் ஒரு சிறந்த தீர்வளிக்கும். இதற்கு அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம். இவை கருப்பை தசைகளை தளர்த்தி, வயிற்று பிடிப்புகள் மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது. அதோடு மாதவிடாய் கால உடல் சோர்வையும் போக்க உதவுகிறது.
பிரியாணி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடித்து வந்தால், அது உடலில் இருந்து அதிகப்படியான நீரையும், நச்சுக்களையும் வெளியேற்றும். இதனால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது தடுக்கப்படுவதோடு, சிறுநீரகங்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.