Breaking News :

Friday, May 02
.

இறந்த பின்னும் மீண்டும் வாழ்வது எப்படி?


இந்தியா முழுக்க பிறவிக்குறைப்பாடு, விபத்துகளினால் பார்வை இழந்தவர்களை தவிர்த்து, நோய், சத்தான உணவின்றி,  கருவிழி புண்ணினால், பாதிப்பினால் வருசத்துக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் இருக்காங்க. வருசத்துக்கு 20,000 பேர் இதுல கூடிக்கிட்டே  வர்றாங்க (இது 2013ல எடுத்த கணக்கெடுப்பு).  

கருவிழியால் பாதிக்கப்பட்டவங்க திரும்ப பார்வையைப்பெற மாற்று கருவிழி பொருத்துவதுதான் ஒரே வழி.  அரசு மற்றும் லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் மாதிரியான சமூக அமைப்புகள் மூலம் 50,000 முதல் 55,000 வரை மட்டுமே கண்கள் தானமா கிடைக்குது. இது  கருவிழி தேவையில் பாதியளவுகூட கிடையாது.  இதுக்கு காரணம் மக்கள்கிட்ட கண் தானம் பத்தி சரியான விழிப்புணர்வு இல்லன்றதுதான்.  மண்ணோடு மண்ணாய் மக்கி போற கண்ணை தானம் பண்ணினால் 2 பேருக்கு திரும்ப பார்வை கிடைக்கும்ன்னு தெரியாம வீணடிக்கிறோம்.

கண் தானம்னா கண்ணை தோண்டி எடுத்துப்பாங்களா?

ம்ஹூம்.   கண்ணின் மையப்பகுதியில்  கறுப்பாகத் தெரியும் கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவக் கூடிய கண்ணின் மேல் படலமே கருவிழின்னு சொல்லப்படுது. மெல்லிசான ஒரு சவ்வு மாதிரிதான் இருக்கும். அதை மட்டுமே எடுத்துப்பாங்க.  அதை  கருவிழி பாதிப்பால் பார்வையிழந்தவர்களுக்குக் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை (Corneal Transplantation) மூலம் பார்வையைத் திரும்பக் கொடுப்பாங்க. இந்த கருவிழியை மட்டுமே அடுத்தவங்களுக்கு வைப்பாங்க.

யார்யாரெல்லாம் கண் தானம் செய்யலாம் ?

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை முதற்கொண்டு  யாரும் கண் தானம் செய்யலாம். வயதுவரம்பு கிடையாது. நாம செத்தப்பிறகுதான் கருவிழி எடுத்துக்குறதால நமக்கு எந்த பாதிப்பும் கிடையாது.  கண்களைத் தானம் செய்ய விருப்பப்பட்டால் நாம உயிரோட இருக்கும்போதே கண் தானம் செய்ய விருப்பம்ன்னு பதிஞ்சு வைக்கலாம். நாம செத்தப்பிறகு நமது கண்களை தானம் செய்யும் பொறுப்பை நம்ம சொந்தக்காரங்கக்கிட்ட சொல்லி வைக்கனும் அவ்வளவே!

எழுதி வைக்காம இறந்தவங்க கண்களும் நெருங்கிய உறவுக்காரங்க விருப்பப்பட்டா கொடுக்கலாம், சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, இதய நோய் , கண்களில் நரம்பு பாதிப்பு (Optic nerve disease), விழித்திரை பாதிப்பு (Retinal disease), கண்புரை அறுவை சிகிச்சை (Cataract surgery) செய்துகொண்டவர்களும்,  உன்னை மாதிரி கிட்டப்பார்வை, தூரப்பார்வை கண்ணாடி அணிந்திருப்பவர்களும் கண் தானம் செய்யலாம்.

ஆனா, எப்படி இறந்தாங்கன்னு தெரியாதவங்க, கண்ணில் கிருமி பாதிப்பு இருக்கவுங்க, நாய்க்கடி, விசம் குடிச்சு செத்தவங்க, டெட்டனஸ், எய்ட்ஸ், சிபிலிஸ் நோய், மஞ்சக்காமாலை, கேன்சர், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கவுங்க மட்டும் கண் தானம் செய்யமுடியாது.  இதுக்குதான் கருவிழியை எடுக்கும்போதே கொஞ்சூண்டு ரத்தமாதிரியை எடுத்துக்கிட்டு போவாங்க. அதை வச்சு மேல இருக்கும் நோய்கள் எதாவது இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் அந்த கருவிழியை அடுத்தவங்களுக்கு வைப்பாங்க. இல்லன்னா, அந்த கருவிழியை அழிச்சுடுவாங்க.

ஒருத்தர் இறந்த 6 மணி நேரத்துக்குள் கருவிழியை எடுத்து மருத்துவ பாதுகாப்புல  வைக்கனும்.  6 மணி நேரத்தை தாண்டிட்டா அந்த கருவிழி பயன்படுத்த நிலைக்கு போய்டும்.   கண் தானம் செய்யனும்ன்னு முடிவாகிட்டா இறந்தவர்களின் கண் திறந்திருக்காம இமைகளை மூடி இருக்கும்படி பார்த்துக்கனும்.  சுத்தமான பஞ்சினை தண்ணில நனைச்சு கண்களின்மீது போட்டு வைக்கனும்.  இறந்த உடலை வைத்திருக்கும் இடத்தில்  பேன் ஓடக்கூடாது.

இறந்தவரின் தலையை அரையடி உயரத்துக்கு உயர்த்தி வைக்கனும்.  உடனே அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கோ அல்லது சமூக சேவை அமைப்பிற்கோ தகவல் சொன்னால் அவங்க வந்து கருவிழியை நம்ம வீட்டிலயே வந்து  எடுத்துப்பாங்க.  கருவிழியை எடுக்க 15 டூ 30 நிமிசந்தான் ஆகும்.  அதன்பிறகு  நம்ம சடங்கு செய்ய எந்த தடையுமில்ல.  நம்மை கண்ணை கொண்டு போக ஆப்ரேஷன் செய்ய வரும் டாக்டர் அரசு அங்கீகரம் பெற்றவரா இருக்கனும். அது முக்கியம். இல்லன்னா அந்த கருவிழி செல்லாது.
 
இப்படி எடுக்கப்பட்ட கருவிழியை  கண் தான மையம் (Eye donation centre) இல்லன்னா கண் வங்கியில் (Eye Bank) நோய்கிருமி பாதிக்காத மாதிரி ஒரு ரூமில் பாதுகாத்து வைப்பாங்க. கண்களின் கருவிழியை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து, பாதுகாக்கக் கூடிய திரவத்தில் வைத்து பத்திரப்படுத்துவாங்க.  

இப்படி பாதுக்காக்கப்பட்ட கருவிழியை ஒரு வருடம்வரை கண் வங்கியில் பாதுகாத்து வைக்க முடியும்.  இப்படி தானமாய் பெற்ற கருவிழியில் இருக்கும்  கண்ணின் வெளிப்புற வெண்படலம் (sclera) மட்டுமே இன்னொருத்தருக்கு பொருத்துவாங்க. கருவிழியால் ஏற்படும் பார்வையிழப்பை மட்டுமே கருவிழி மாற்று அறுவை சிகிச்சையால் சரிசெய்ய இயலும். மிச்ச பாகங்கள்லாம்  கண் சம்பந்தமான படிப்பு, ஆராய்ச்சிகளுக்கு எடுத்துப்பாங்க. இந்த மாதிரி மாற்று கருவிழி பொருத்தியவர்களில் 90% பேருக்கு திரும்ப பார்வை கிடைக்கும்.  ஒருத்தர் கண் தானம் செய்தால் இருவருக்கு பார்வை கிடைக்கும்.

யாருக்காவது கண்களை தானம் செய்யனும்ன்னு ஆசை இருந்தால் பக்கத்திலிருக்கும் அரசு, அல்லது அரசு உதவி பெறும் கண் வங்கியில் பதிவு செய்துக்கலாம், இப்படி பதிஞ்ச விவரத்தினை தன்னோட குடும்ப உறுப்பினர்கள்கிட்ட சொல்லனும். ஏன்னா இறந்தவரின் கணவன்/மனைவி, மகன்/மகள், இரு சாட்சிகள் ஒத்துக்கிட்டால் மட்டுமே நம்ம கண்ணை கொண்டு போவாங்க.  விபத்து, நோய் காரணமா திடீர்ன்னு இறந்துட்டா உடனே பக்கத்திலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு சொல்லிட்டா போதும்.

போலீசுக்கு 100, ஆம்புலன்சுக்கு 108 மாதிரி  கண் தானம் செய்ய 104ஐ கூப்பிடலாம். தெளிவான முகவரியை சொன்னால் அவங்களே உடனே எல்லா ஏற்பாடும் பண்ணிடுவாங்க.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.