எந்த ஒரு விஷயமும் காலப் போக்கில் ஓரளவிற்காவது மாறும்.. அப்படி மாறவில்லையென்றால் அது செயற்கையானது. கணவன் மனைவிக்குள் ஒருவரின் மேல் ஒருவருக்கு இருக்கும் மிதமிஞ்சிய அன்பே பல நேரங்களில் ஊடலுக்கு வழிவகுக்கும். சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு சிறிது நேரமோ சிலநாட்களோ பேசாமல் இருந்தால், மனம் ஏங்கும் அன்பு கட்டாயம் கூடும்.
"அவளுக்கெல்லாம் அவ்வளவு திமிரா.. பார்த்துக்கலாம்.." என்ற ஆணின் இறுமாப்பு சிறிது நேரத்திலோ அல்லது ஓரிரு நாட்களிலேயோ "நாமளே முதல்ல பேசிடலாம்.." என்கிற நிலைக்குச் சென்று விடும். நல்ல கணவர்கள் என்றால் அவர்கள் தான் முதலில் வெள்ளைக் கொடி நீட்டுவார்கள். உயர்ந்த உத்தம புருஷர்கள் அதற்கும் ஒரு படி மேலே சென்று அவர்கள் செய்யாத தவறுக்கும் சாரி கேட்பார்கள். அதற்குக் காரணம் இல்லற சுகத்திற்காக இருக்காது, மனைவியும் பாவம் தானே என்கிற நல்ல எண்ணம் தான். ஆனால் இதனாலேயே சில மனைவிகள் இதுபோன்றவர்களின் கழுத்தில் ஏறி மிதிப்பதும் உண்டு.
"அதெல்லாம் இல்ல.. எனக்கும் என் மனைவிக்கும் சண்டையே வந்தது இல்ல.." என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தால் நாகரீகம் கருதி "அப்படிங்களா சார்.. ரொம்பச் சந்தோஷம்.." என்று தான் சொல்ல முடியுமே தவிர அவர் பொய் சொல்கிறார் என்று வெளிப்படையாகக் கூற முடியாது. "எனக்கும் என் மனைவிக்கும் சண்டையே வந்தது இல்லை.." என்று ஒருவர் சொன்னால், அதற்குக் கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.
அவரோ அவருடைய மனைவியோ வாழ்க்கை முழுவதும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அப்படிக் கூறும் நபருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்று அர்த்தம். மனைவி என்று ஒருத்தி இருந்தால் தானே அவளுடன் சண்டை என்ற ஒரு விஷயம் நடைபெறும்..
இன்னொரு தம்பதியினர் சொல்லுவார்கள் "எங்களுக்குள்ள சண்டையே வராது. ஏன்னா, நாங்க தினமும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர்றதே 9 மணிக்கு மேல தான்.. சண்டே ஒருநாள் தான் ரெஸ்ட்டு.. அதுவும் அடுத்த வாரத்துக்கான திட்டமிடல்'லயே சரியா போயிடும்..
ஒருசில சைக்கோ கணவர்கள் அவர்களுடைய மனைவிகளை இயற்கை உபாதைகளைக் கழிக்க மட்டும் தான் தனியே விடுவார்கள். அங்கேயும் துணைக்குப் போனால் செருப்பால் அடிப்பார்கள் என்பதால் அங்குப் போகும் போது மட்டும் பின்தொடர மாட்டார்கள். அது போன்ற கணவர்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் கூட எப்பொழுதும் சண்டையே வராது. ஏனென்றால் அது போன்ற நபர்களுக்கு வாழ்க்கைப்பட்ட மனைவி ஏற்கனவே நடைபிணம் போலத் தான் வாழ்ந்து கொண்டிருப்பாள். பிணத்துடன் குடும்பம் நடத்தும் போது சண்டை சச்சரவுகள் ஏற்படவே ஏற்படாது.
சின்னச் சின்னச் சண்டைகள் தான் திருமண வாழ்வை மகிழ்ச்சியாகவும் உயிர்ப்புடனும் வைத்திருக்கிறது என்று பல திரைப்படங்களில் சொல்லி விட்டார்கள். ஒரு கணவன் மனைவி இல்லற வாழ்வில் அன்பு பலவிதமான பரிணாம வளர்ச்சி அடைகிறது. திருமணமான புதிதில் காமமும் காதலும் கலந்த காக்டெயில் அன்பு.. பிள்ளைகள் பெற்ற பின் காமத்தின் அளவு குறைந்து காதலுடன் குடும்பப் பொறுப்புகள் கூடிய அன்பு.. நரை படர்ந்து நாடி தளரும் சமயத்தில் வெறும் அன்பு மட்டுமே எஞ்சி இருக்கும்..