குப்பைமேனி காடுமேட்டில் வளரக்கூடியது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைப்பசேலென முக்கோண வடிவமாக அரும்பு அரும்பாக இருக்கும். ஒரு சில இடங்களில் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக சிறிய அளவில் இருக்கும். காய்கள் முக்கோணவடிவில் மிளகு போன்று இருக்கும்.
இலைகளின் சாறு மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைச்சாறு சீரகம் மற்றும் மிளகு சேர்த்து சளிக்கு சிறந்த மருந்தாகிறது. நிமோனியா நோயாளிகளுக்கு குப்பைமேனி இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறுகளின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குப்பைமேனி இலைகளின் சாறு சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் அடைப்பு நிலைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
மலச்சிக்கல் பிரச்ச்னை இருப்பவர்கள் குப்பைமேனி இலையை சாறாக்கி அதனுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் மலமிளக்கியாக செயல்படுகிறது. தினசரி மலம் கழிக்கும் வழக்கத்தை உண்டாக்குகிறது.
குப்பைமேனி இலைச்சாற்றில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து கொள்ளவும். இந்த கலவையை வெளிப்புறமாக பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவினால் தோல் நோய்கள் குணமாகும். சொரி, சிரங்கு போன்ற நிலையில் குப்பைமேனி இலைச்சாற்றை எடுத்து சருமத்தின் மீது தடவி வந்தால் சிரங்கு குணமாகும்.
குப்பைமேனி இலைச்சாற்றை தேங்காயெண்ணெய் மற்றும் மஞ்சள் தூளுடன் கலக்கவும். இந்த கலவையை டபுள் பாய்லிங் மெத்தட் முறையில் சூடாக்கவும். இதை சருமத்தின் மீது தடவி அவை காயும் வரை வைத்திருந்து பிறகு சுத்தம் செய்யவும். பலவிதமான தோல் பிரச்சனைகளுக்கு இவை நன்மை பயக்கும். இதை காயங்கள் மற்றும் வெட்டுக்களுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
ரிங்வார்ம் பிரச்சனை இருந்தால் குப்பை மேனி இலைகளை பேஸ்ட் செய்து அதில் சிட்டிகை உப்பு கலந்து, இந்த பேஸ்ட்டை சொறி அல்லது தடிப்புகள் மீது தடவினால் சருமம் குணமாகும்.
உஷ்ணக்கொதிப்பால் அவதிப்படுபவர்கள், குப்பைமேனி இலை பசையை எலுமிச்சை சாறுடன் கலந்து பூசலாம். இது உஷ்ண கொதிப்பை அடக்கும்.