மதுரையின் கறிதோசை வரிசையில் இது தனித்துவமானது...!
தமிழர் உணவு மிகுந்த நகரம்... இரண்டு அடையாளங்களுமே மதுரைக்குப் பக்காவாகப் பொருந்தும். அந்தளவுக்கு ருசி மிகுந்த மதுரை மக்களின் உணவு பண்பாட்டை வெறும் வார்த்தைகளால் மட்டும் விவரிக்க முடியாது. காரசாரமாகப் பேசுவதில் மட்டுமல்ல, சாப்பிடுவதிலும் தேர்ந்தவர்கள் மதுரைக்காரர்கள்.
தினமொரு புதிய ரெசிப்பியை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பதால் மதுரை நகரின் சைவ உணவுகளின் பட்டியலும், அசைவ உணவுகளின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது.
அதில், நாம் வழக்கமாக சாப்பிடும் தோசைக்கென்றே தனி ஆய்வகத்தை வைத்திருக்கிறார்களோ என்று எண்ணும் அளவுக்கு தோசை வெரைட்டிகளில் பெரட்டி எடுக்கிறார்கள் மதுரையன்ஸ்!
மதுரை கறிதோசைக்களில் இன்றுவரை நம்பர் ஒன்னாக இருப்பது சிம்மக்கல் கோனார் கடை கறிதோசைதான். அதன் விலை உச்சத்துக்கு சென்றுவிட்டாலும் அந்த கறி தோசைக்கென்று பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.
அதுபோலவே புதுவகையான சுவையில் தனித்து நிற்கும் பாட்டி கடை கறிதோசையும் மதுரையில் புகழ்பெற்றது. முழுக்க முழுக்க வீட்டுப் பக்குவத்தில் நியாயமான விலையில் இங்குத் தரமான தோசை கிடைக்கிறது.
முன்னர் ஃபாத்திமா காலேஜ் ரவுன்டானா அருகில் மாலை முதல் நள்ளிரவு வரை வண்டிக்கடையாக இருந்த பாட்டி கடையைத் தேடி விலை உயர்ந்த வாகனங்கள் வரிசையில் நிற்கும்.
பாட்டி கடையில் வீட்டு மசாலாவில், கலப்பில்லாத நாட்டு உயிரினங்களே சட்டியில் வேகும் என்பதால் கூட்டம் கட்டி ஏறும்.
காலத்துக்கு ஏற்ப பாட்டி கடை இப்போது அதே பகுதியில் நவீன ஹோட்டலாக மாறிவிட்டது. பாட்டியின் வாரிசுகள் பாட்டியின் கைப்பக்குவத்தை மொய்ப்பணம் போல பத்திரமாகப் பாதுகாத்து மக்களுக்குச் சுவைப்பட பரிமாறி வருகிறார்கள்.
வீட்டில் அரைத்து எடுத்த கறி மசாலாவில் சுத்தமான வெள்ளாட்டுக் கறியைப் பொடிசா நறுக்கி நெய்யில் கிரேவி செய்து வைத்திருப்போம்.
மாவு எடுத்து ஊத்தப்ப சைஸில் கல்லில் ஊற்றி விட்டு, தயார் செய்து வைத்திருக்கிற கறி கிரேவியில் முட்டையைக் கலந்து அதை நன்றாகக் கலக்கி பின்பு தோசையில் ஊற்றுவோம். கொஞ்ச நேரத்தில் புரட்டிப்போட்டு வேக வைத்து எடுத்தால் ருசியான கறி தோசை ரெடி.
வெள்ளாட்டுக் கறி மட்டுமில்லாமல் நாட்டுக்கோழி கறியிலும் கறி தோசை போடுகிறோம்" என்கிறார் கடையின் உரிமையாளரான தேவராஜ்.
கறி தோசை 175 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி கறி தோசை 275 ரூபாய்க்கும் கிடைக்கிறது. கறி தோசை போலவே முட்டை வெள்ளைக்கரு தோசையும் இங்குப் பிரபலம்!
இது மட்டுமல்லாமல், பாட்டி கடையில் வெள்ளாட்டு ஈரல் கிரேவி, ஈரல் ஃப்ரை, குடல் கிரேவி, குடல் ஃப்ரையும் சுவையில் சிறப்பு. நாட்டுக்கோழி பிரியாணி, நாட்டுக்கோழி சாப்ஸ் மற்றும் ஃப்ரைக்கும் மவுசு அதிகம்.
மதுரைக்கு வரும் அசைவப் பிரியர்கள் பாட்டி கடையில் ஒரு வெட்டு வெட்டிவிட்டுப் போகலாம்.