மெலனின்' எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது. இதைப் போன்றே யூமெலனின், பயோ மெலனின் ஆகிய நிறமிகள் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன.
இந்த நிறமிகளின் உற்பத்திக் குறைவதால், கருமையான முடிகள் நரைமுடிகளாக மாறுகின்றன.
சருமத்தில் காணப்படும் மயிர்க்கால்களில் இருந்து புதிய முடி வளர்கிறது. அங்கு, நிறமியை உருவாக்கும் மெலனோசைட்டுகளும் இருக்கும்.
மெலனோசைட்டுகள் அவ்வப்போது சிதைவடைந்து மீண்டும் புதிதாக உருவாகும். புதிய மெலனோசைட்டுகள், ஸ்டெம் செல்களிலிருந்து உருவாகும். இந்த செல்கள்தான் முடிகளுக்கு இடையில் சிக்கி, நரைமுடியை உருவாக்கும்" என்றனர்.
மெலனோசைட் ஸ்டெம் செல்கள் சிதைந்து சுற்றித்திரியும் தன்மையை நிறுத்திக் கொண்டு, ஒரே இடத்தில் தங்கிவிடும். அதாவது, அவை முடிகளுக்கு இடையே மாட்டிக்கொள்வதால் தலைமுடிக்குத் தேவையான நிறமி உற்பத்தி நடக்காது. இதனால் முடியானது சாம்பல், வெள்ளை அல்லது வெள்ளி நிறமாக மாறுகிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாள்பட்ட மன அழுத்தமும் பதட்டமும் கூட இளநரை தோன்றுவதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. அதிகப்படியான மன அழுத்தம் மெலனோசைட்டுகளை உற்பத்தி செய்யும். இந்த மெலனோசைட்கள் நம்முடைய தலைமுடியின் கருப்பு நிற நிறமியை பாதிக்கச் செய்யும். அதனால் இளம் வயதிலேயே நரைமுடி தோன்றி விடும்.
இளம் வயதில் நரை முடி வராமல் நீண்ட நாட்களுக்கு தடுக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது மன அழுத்தத்தை குறைப்பது தான். தலைமுடிக்கு தேவையான போதிய அளவு புரதங்களோடு வைட்டமின் பி12, இரும்புச்சத்து, போலிக் அமிலம், ஜிங்க், காப்பர் உள்ளிட்ட மினரல்கள் பற்றாக்குறை உடலில் ஏற்படும் போது இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனை ஏற்படுகிறது.
அதனால் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் போதிய அளவு தினசரி டயட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது மிக அவசியம். நம்முடைய புற உடலுக்கு ஓய்வு கொடுப்பதற்கு மட்டுமின்றி உடல் உள் உறுப்புகள் ஓய்வு எடுப்பதற்கும் தூக்கம் என்பது மிக அவசியம்.
போதிய அளவு தூக்கம் இல்லாமல் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குகிறார்களோ அவர்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வரும் வாய்ப்பு மிக அதிகம்.
நரைமுடி மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமே பாதிக்கப்படும் அதனால் முடிந்தவரை 7 முதல் 8 மணி நேரம் வரை இரவில் தூங்குவது பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.