Breaking News :

Friday, May 02
.

புணர்ச்சி மகிழ்தல் ஏன்?


கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த பெண்ணிடம் மட்டுமே உண்டு. அடிப்படை தேவைகளான உணவும், காமமும்.

இதில் உணவு முறைகளில் பல ஆராய்ச்சிகள்  செய்து உலகமுழுவதும் பலவகையில் உணவு தயார் செய்கின்றனர்.
அதை பல வண்ண குளிர்சாதன அறையில், அந்தரத்தில் உணவகம், நீருக்குள் உணவகம், காடுகளில் உணவகம் என்று இன்னும் பலவாக உண்டு மகிழ்கிறோம்.

கற்காலத்தில் பச்சை கறி உண்டு, பின்பு சமைத்து உண்ட மனிதன் இப்போது நவீன உலகத்தில் ஏற்பட்ட உணவு வளர்ச்சி அறவியல் வளர்ச்சிக்கு நிகராக, எண்ணில் அடங்காத வகையில் உணவு வளர்ச்சியும் உலகம் முழுவதும் அடைந்து உள்ளது. அதை உண்டும் நாம் இன்பத்தை உணர்கிறோம்.

ஆடை, அலங்காரமும் ஆதிமனிதனை விட பன்மடங்கு பரிணாம வளரச்சி அடைந்து உள்ளது.

ஆனால் காமம் மட்டும் ஒரு இருட்டு அறையில் முடிந்து விடுகிறது. இந்த உலகத்தில் காமம் கொண்டே அனைத்து உயிரினங்களும் படைக்கப்படுகின்றன.

ஆதி மனிதன் எவ்வாறு அச்சம் கொண்டு காமம் கொண்டானோ அதே நிலைதான் இன்றளவும் பரிணாம வளர்ச்சி அடையாமல் அதே நிலையில் உள்ளது.  ஆதி மனிதன் காமத்தில் சுகந்திரம் இருந்தது.

இந்த நவீன உலகத்திலும் காமத்தை சுற்றி மின் கம்பிகளும் போட்டு உள்ளோம்.

சமூகம் ஒப்புதல் இல்லாமல் ஆண், பெண் காமம் கொள்வதை ஒரு பாவச்செயலாக இந்த மனித சமூகம் கருதுகிறது.  

இதனாலேயே குழந்தைகளுக்கான பாலியல் வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு எல்லாம் நடைபெறுகிறது.
தெய்விக தன்மையுடைய காமத்தை ஒரு தண்டனைக்கு உரிய கருவியாக பெண்கள் மீதும், குழந்தைகள் மீதும்
ஏவப்படுகிறது.

காமத்தை இருட்டிலேயே ஒலித்து வைத்திருக்கும் இந்த சமூகம்.  திருமணம் முடிந்த பிறகு அதற்கு தெய்விக அந்தஸ்தை கொடுப்பது வியப்புக்கு உரியது.

இந்த சமூகம் பெண்ணிற்கு மட்டும் கற்பு என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி அவளுக்கு பயத்தை ஏற்படுத்தி அவளுடைய காமத்தை அடக்கி வைத்து இருக்கிறது.

அவளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் கற்பு என்ற வார்த்தையால் அவளுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியில் சொல்லாமல் அவள் மூடி மறைக்கிறாள்.

ஆனால் ஆணிற்கு கற்பு என்பது இல்லை அதனால் அவனுக்கு பயம் இல்லாமல் தன் இஷ்டம்போல் வலம் வருகிறான்.
பெண் உடலவில் அவள் காமத்தில் ஈடுபடவில்லை என்றாலும் அவள் மனதளவில் தன் விருப்பம் உள்ள ஆணிடம் காமம் கொள்வதை எந்த சமூகமும் தடுக்கமுடியாது.

ஏனென்றால் பெண் கற்பை இழந்தது விட்டால் எந்த ஆணும் அந்த பெண்ணை மறுப்பான், அவள் நடத்தை கெட்டவள், ஒழுக்கம் இல்லாதவள் என்று ஆணின் ஜீனில் இந்த அருவ வடிவில் உள்ள இந்த சமூகம் பதித்து உள்ளது.

ஒரு ஆண் பசி உணர்வு நீங்கியவுடன் என்ன உணர்வானோ அதே உணர்வுதான் பெண்ணிற்கும் ஏற்படும்.
ஒரு ஆண் தூங்கும் போது என்ன உணர்வானோ அதே உணர்வுதான் பெண்ணிற்கும் ஏற்படும்.

ஒரு ஆண் வலி உணர்வை எவ்வாறு உணர்வானோ அதே உணர்வுதான் பெண்ணிற்கும் ஏற்படும்.

காமத்திலும் ஆண்களுக்கு என்ன ஆசை ஏற்படுமோ அதே உணர்வுதான் அவளுக்கும் ஏற்படும்.
 
ஆனால் காமத்தில் மட்டும் ஆண் கொடுப்பவனாகவும், பெண் பெறுபவளாகவும் மட்டும் இருக்கிறாள்.
இது பல்லாயிரம் வருடங்களாக பெண்ணிற்கு நடக்கும் கொடுமை.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub