'அரிசி ஆபரேஷன்' என்று வெகுஜன மக்களால் அழைக்கப்படும் இந்தக் குடும்பக் கட்டுப்பாடு சர்ஜரி 80 மற்றும் 90-களில் மிகவும் பிரபலம். ஆண்கள் கருத்தடை (vasectomy) செய்துகொண்ட பின் அவர்களின் அனுபவங்கள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. இன்னும் இங்கே பல ஆண்கள் vasectomy என்பது ஆண்களுடைய ஆண்மையை நீக்கும் மருத்துவமுறை என்று தான் நினைக்கின்றனர். இரண்டு குழந்தைகள் பெற்ற பின் மயக்கத்தில் இருக்கும் மனைவிக்குத் தெரியாமலேயே கணவனும் மாமியாரும் பெண் மருத்துவரிடம் பேசி அந்தப் பெண்ணுக்குக் குடும்பக் கட்டுப்பாடும் செய்து விடுகின்றனர்.
வாசெக்டமி (vasectomy) என்பது ஒரு நிரந்தரக் கருத்தடைச் சிகிச்சையாகும். இதில், விந்தணுக்கள் (sperm) விந்தகக் குழாய்களில் (vas deferens) இருந்து உடலுக்கு வெளியே செல்லும் பாதையைத் தடுப்பதன் மூலம் கருவுறும் வாய்ப்புத் தவிர்க்கப்படுகிறது. சிகிச்சையின் போது, மருத்துவர் ஒரு சிறிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, விந்தகக் குழாய்களை வெட்டியோ அல்லது முத்திரை போட்டு முடக்கி விடுகிறார். இதனால் விந்தணுக்கள் விந்து பையில் சேராமல் போகின்றன.
வாசெக்டமிக்குப் பிறகு ஆண்களின் இயற்கையான உணர்ச்சி மற்றும் எழுச்சி பாதிக்கப்படுவதில்லை. இது விந்தணுக்கள் வெளியேறுவதை மட்டும் தடுக்கிறது. இச்சை, உறவுநிலை, உணர்ச்சிகளின் அளவு போன்றவற்றில் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை.
பெண்கள் கருத்தடை சர்ஜரிக்கு (tubectomy) பிறகும், 200-இல் ஒரு பெண் கருவுற வாய்ப்புகள் உண்டு, அதே போல ஆண்கள் கருத்தடை சர்ஜரி செய்து கொண்ட பிறகும் 1000 ஆண்களில் 5 பேரால் அவர்களின் மனைவி கர்ப்பமாக முடியும்.
இந்தியாவில், குடும்பக் கட்டுப்பாட்டுப் பொறுப்பைப் பெரும்பாலும் பெண்களே ஏற்கிறார்கள். இதனால், பெண்களுக்குக் கருத்தடை முறைகள் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. ஆண்களை விடப் பெண்கள் இந்தக் கருத்தடை ஆப்பரேஷன் செய்வதால் அவர்களுக்குப் பக்கவிளைவுகள் சற்று அதிகம், அப்படி இருந்தாலும் பெண்களையே பெரும்பாலும் இந்தச் சமூகம் சிகிச்சையைச் செய்து கொள்ள வைக்கும். பெண்கள் மட்டுமே தைரியமாக இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒரு சில ஆண்கள் ஏதோ அவர்களின் வாழ்வில் நான்கைந்து முறை vasectomy செய்து கொண்டதை போல "அட அது வேற சுருக் சுருக்குன்னு வலிக்கும்.." என்பார்கள். அது சரி.. பிரசவ வலி ஆண்களுக்கும் இருப்பதைப் போல இயற்கை வடிவமைத்திருந்தால் பெண்ணின் வேதனை அவர்களுக்கும் புரிந்திருக்கும். சினிமாவை பார்த்து அதில் வருவதைப் போல மனைவிக்கு மசாஜ் செய்வது மற்றும் பாதங்களைப் பிடித்து விடுவதையே பெரிய செயல்களாக எண்ணி புளகாங்கிதம் அடைகிறார்கள்.
ஒரு பெண் கருத்தரித்து விட்டால், 100-இல் 90 சதவிகிதம் ஆண்கள் கூகிளில் தேடுவது "மீண்டும் எப்பொழுது உடலுறவு கொள்ளலாம், எந்தப் பொஷிஷனில் செய்யலாம்.." போன்ற விஷயங்களைத் தான். இதில் நண்பர்கள் என்ற சில நாதாரிகள் என்னமோ ஆயிரம் மனைவிகளைக் கட்டி ஆண்ட சக்ரவர்த்திகளைப் போல "மூனாவது மாசத்துல இருந்து டிரை பண்ணலாம் மச்சி.. நாலாவது மாசத்துல இருந்து டிரை பண்ணலாம் மச்சி.. அப்படிப் பண்ணா தான்டா அவங்களுக்குச் சுகப்பிரசவம் ஆகும்.." என்பார்கள்.
இந்த உத்தம நண்பர்கள் எவனும் Science-இல் 60 மார்க் கூட வாங்கியிருக்க மாட்டார்கள், ஆனால் பேசுவது என்னமோ மருத்துவத்தில் அதுவும் பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நோபல் பரிசு வாங்கியதை போலப் பிதற்றுவார்கள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் பல ஆண்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இயற்கைக்கு மாறான குதவழி உறவுக்கு முயற்சிக்கிறார்கள்.
என் சகோதரியின் இரண்டாவது பிரசவத்தின் போது, அவளுடைய மாமியார் சண்டை போட்டு என் சகோதரிக்குக் கருத்தடை ஆபரேஷன் செய்ய வைத்தார். ஏன், உங்க மகன் பண்ணிக்க வேண்டியது தானே.. எங்க குடும்பத்துல அதெல்லாம் பழக்கம் இல்ல.. ஆனா பொம்பளைங்க காசுல உட்கார்ந்து சாப்பிடுறது மட்டும் உங்க குடும்பத்துல பழக்கம்..
விளைவு, இன்று வரை என்னுடன் என் சகோதரி குடும்பத்தார் பேசுவதில்லை.
இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளில் ஆண்கள் வாசெக்டமி செய்யும் அளவு பெண்கள் டியூபெக்டமி (tubectomy) செய்யும் அளவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே உள்ளது. அதாவது, குடும்பக் கட்டுப்பாட்டிற்காக ஆண்கள் செய்யும் வாசெக்டமியின் பங்கு சுமார் 3% மட்டுமே ஆகும், ஆனால் 97% பெண்கள் டியூபெக்டமி செய்து கொள்கிறார்கள். பெரும்பாலான ஆண்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் அதன் பக்க விளைவுகள் குறித்துப் பயம் அதிகம்.
என் தந்தை இந்த டிபார்ட்மெண்டில் பணி புரிந்து இருக்கிறார். 90-களில் vasectomy செய்து கொண்ட பல ஆண்கள் முறையான ஓய்வு எடுக்காமல் சிகிச்சை முடிந்த நான்கைந்து நாட்களிலேயே விவகாரமாக முயற்சி செய்து சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு மூன்று நாட்கள் ஓய்வும், மூன்று வாரங்களுக்குப் பாலியல் செயல்பாடுகளையும் தவிர்க்க சொல்லுவார்கள்.
"குழாயை மூடினாலும் இவனுங்க மூடிக்கிட்டு இருக்கிறதில்ல.." என்பாராம் அந்த அறுவை சிகிச்சை செய்த டாக்டர். இன்னும் சிலர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தம் எழுச்சியின் வீரியத்தைப் பரிசோதிக்க விலைமாதர்களிடம் செல்வார்களாம். கேட்டால் "அதான் குழாயை எடுத்துட்டாங்க இல்ல.. இனிமே எனக்கு எய்ட்ஸ் வராது.." என்பார்களாம்.
நன்றி: ஆபுத்திரன்