Breaking News :

Sunday, May 04
.

புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு!


கோடைக்காலத்தில் உண்ண உகந்தது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இதில் பீட்டா கரோட்டினும், வைட்டமின் சி யும் அதிகமுள்ளது. அதனைத் தவிர்த்து மாங்கனீசு, செம்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி 1, பி2யும் அதிகமுள்ளது. இந்த சத்துக்கள் உங்களை கோடை வெயிலை சமாளிக்க உதவுகிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு நீண்ட நாட்கள் நோயின்றி உயிர் வாழ உதவும் ஓர் அருமையான உணவுப்பொருள். அலர்ஜியை எதிர்க்கும் ஆற்றல் மிக்கது. வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரைவள்ளிக் கிழங்கு முக்கியக் காரணமாக விளங்குகிறது. இதிலிருக்கும் வைட்டமின் ஏ சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.

இது புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது. புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் துணைபுரிகிறது. பழுதடைந்த செல்களை சரிசெய்வதிலும், புதிய செல்களை சேதாரம் அடையாமல் பாதுகாப்பதிலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. பி6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது. இதய நோய் பாதிப்பில் இருந்தும் காக்கிறது. இரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எல்லா காலத்திலும் சருமப் பொலிவை தக்க வைக்கவும் உதவுகிறது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கை காலை உணவாக சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த இவை அதிகப்படியான ஆற்றலையும் கொடுக்கிறது. இதில் இருக்கும் மெக்னீசியம் மன அழுத்தத்தில் இருந்தும் மனபதற்றத்திலிருந்தும் விடுவிக்கிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம். உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றவும் வழிவகை செய்கிறது.

இதிலிருக்கும் வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் சருமம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் வைட்டமின் டி அவசியமானதாகிறது.

நமது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குவது, தசை வளர்ச்சிக்கு உதவுவது, சிறுநீரகப்பணியை சீராக்குவது என அனைத்தையும் பார்த்துக்கொள்வது நமது உடலிலுள்ள பொட்டாசியம் சத்துதான். இதன் குறைபாடுதான் நாளடைவில் சர்க்கரை நோய் உருவாகக் காரணம் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனவே, சர்க்கரை நோய் வருவதை தவிர்க்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பொட்டாசியம் சத்து அதிகமுள்ளது. 100 கிராம் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் 1.2 மி.கி. பொட்டாசியம் உள்ளது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கினை தினமும் உண்டு வந்தால் கரு வளர்ச்சிக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஏனெனில், இதில் அதிக அளவில் போலேட் நிறைந்துள்ளது. செரிமான கோளாறுகளை சரிசெய்து, எதிர்ப்பு மண்டலத்தையும் பராமரிக்க இந்த கிழங்கு உதவுகிறது. தைராய்டு சுரப்பி, பற்கள், நரம்புகள், எலும்புகளுக்கு பலத்தை தரக்கூடியது.
குழந்தைக்கு திரவ உணவிலிருந்து திட உணவுக்கு மாறும்போது திட உணவும் சற்று கூழ் பதமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பல் முளைக்கும் குழந்தைக்கு அதை சாப்பிடவும் எளிதாக இருக்கும். அதற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெருமளவு உதவக்கூடும்.

ஆரஞ்சு நிறச் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கண் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும். மூத்தோரிடையே கண் பிரச்னை தீர்க்க உதவுகிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடலில் உள்ள வீக்கங்களைக் குறைக்கவும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது. இதனைச் சிறுவயதிலிருந்தே உட்கொண்டால் அது கணையத்தையும் பாதுகாக்கக்கூடும்.

நல்ல மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருளான சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வளரும் பிள்ளைகளுக்கு அருமையான உணவு.

சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்தோ, சுட்டோ அல்லது சிப்ஸ் தயாரித்தோ சாப்பிடலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கை நீரில் வேகவைத்து, பின் ஆறவைத்து உட்கொள்வதே சிறந்தது. அதனை அடுப்பிலும் வேகவைத்து எடுக்கலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிக நேரத்திற்குச் சமைத்தால் அவற்றின் ‘பீட்டா கெரட்டின்’ அளவு குறையும். அதனால், தோலை அகற்றாமல் அவற்றை குறைவான நேரத்திற்குச் சமைப்பது நல்லது என்கிறார்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கை 100 கிராம் என மிதமான அளவில் உட்கொள்ளவேண்டும். நீரிழிவு பாதிப்பு இருப்போர் 50 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும். அவற்றை வாரத்திற்கு இரண்டு முறை உட்கொள்ளலாம். காலை உணவாக உட்கொள்வது நல்லது. நண்பகல் உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், இரவு நேரங்களில் அதனைத் தவிர்ப்பது நல்லது. அதிகளவில் சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பு உண்டு. காரணம் அதிலுள்ள ஆக்ஸிலேட்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.