நமக்கு எளிதிலே, சமையல் கூடங்கள் மற்றும் கடைகளில் கிடைக்கின்ற மூலிகைகளில் உள்ள மருத்துவ குணங்களை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் பல்வகை சத்துக்கள் அடங்கிய தக்காளியின் பயன்களையும், பல்சுவை நிறைந்த பஞ்சாமிர்தம் பற்றியும் பார்க்கலாம். ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளி எளிதில் நமக்கு கிடைக்கிறது. இதில் லைக்கோபெனின் எனும் வேதிப்பொருள் முழுமையாக இருப்பதுடன், பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, பி, பி2, ஏ, நார்ச்சத்து, செம்பு, இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தருகின்ற இந்த தக்காளியினை காயாகவும் பழமாகவும் பயன்படுத்தலாம்.
தமிழர்களின் சமையல்களில் முக்கிய இடம் வகிக்கும் தக்காளியில், இதயம், நீரிழிவு மற்றும் புற்றுநோய்களை போக்கும் மருத்துவ குணம் உள்ளது. எலும்புகளுக்கு ஊட்டம் தரும், தக்காளிக்காயினை கீரை போல மசியல் செய்து சாப்பிடலாம். தேவையான பொருட்கள்: தக்காளிக்காய், பூண்டு, வரமிளகாய், புளி, வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள், கடுகு, பெருங்காயப்பொடி, உப்பு, நல்லெண்ணெய். முதலில் வாணலியில் சிறிதாக நறுக்கிய தக்காளி, பூண்டு, புளி, வெங்காயம், பெருங்காயப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து வேகவைத்து இறக்கவும். பின் அந்த கலவையை நன்கு மசித்து வைத்து கொள்ள வேண்டும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, அதனுடன் மசித்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.
இந்த மசியலை சாதத்துடன் சாப்பிடும்போது, பசியை தூண்டுவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. தக்காளியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால், பெப்டிக் அமிலத்தை சுரக்க செய்து, உடலில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. குறிப்பாக வயிற்றில் உருவாகும் சிறுகுடல், பெருங்குடல் புற்றுநோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பழுத்த தக்காளியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் தோலுக்கு மினுமினுப்பையும், பற்கள் மற்றும் தலைமுடிக்கு நல்ல பலத்தையும் கொடுக்கிறது. தக்காளி காயில் புரதச்சத்து மிகுந்து இருப்பதால் இதை கீரையை போல் மசித்து சாப்பிடும்போது சிறந்த உடல் தேற்றியாக பயனளிக்கிறது. பல்சுவை, சத்துக்களை உள்ளடக்கியுள்ள பஞ்சாமிர்தம் செய்யும் முறை மற்றும் அதன் பயன்களை காணலாம்.
தேவையான பொருட்கள்: ஆப்பிள், மாதுளை(சிறிதளவு), வாழைப்பழம் (தேவையான அளவு), சாத்துக்குடி, திராட்சை, பேரிச்சம் பழம், பச்சை கற்பூரம், தேன், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள், நெய். பழங்கள் அனைத்தையும் சிறிய துண்டுகளாக நறுக்கி அகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம், ஏலக்காய் பொடி, தேன், நெய் கலந்து கிளறவும். பின்னர் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊட்டச்சத்து உணவாக விளங்கும் இந்த பஞ்சாமிர்தத்தை சிறியோர் முதல் அனைவரும் உண்ணலாம். ஐந்து வகையான கனிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தை, தேன் சேர்த்து நெடுநாள் கெடாமல் பாதுகாக்கலாம். பல வகை கனிகளை ஒன்று சேர்க்கும் போது, அதனுடன் சற்று பச்சை கற்பூரம் சேர்ப்பதால் சீதள நோய்கள் வராமல் காப்பதுடன், தொண்டையை ஊறு செய்யாத வண்ணம் தடுக்கிறது. இது உடலுக்கு சிறந்த சக்தி அளிக்கிறது.