Breaking News :

Tuesday, May 06
.

வயிற்று பூச்சிகளை அழிக்கும் சுண்டைக்காய்?


சுண்டைக்காய் பெரியவகை செடி இனத்தை சேர்ந்தது. 5 முதல் 10 அடி உயரம் வரை வளரும். காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இதில் காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது.

ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது.

சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.

பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இளம்வயதினரிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை போக்க சுண்டைக்காய் உதவும்.

குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்கவேண்டும். இதை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.

மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும். தவறான உணவுப் பழக்கம் காரணமாக பலர் வயிறு சம்பந்தபட்ட நோய்களால் துன்பப்படுகிறார்கள்.

அமீபியாஸ் என்ற வயிற்று நோயால் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மலச்சிக்கலும், அதிக மலப் போக்கும் மாறி மாறி தொந்தரவு செய்யும். புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளும் தோன்றும்.   இதனால் மனசோர்வு ஏற்படும். இத்தகைய நோயாளிகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.

சுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் தொல்லை தரும் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது.  கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது. இதில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகள் உணவில் சுண்டைக்காயை அடிக்கடி பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub