Breaking News :

Saturday, May 03
.

எச்சரிக்கை: பக்கவாதம் யாருக்கு வரும்?


50 வயதைத் தாண்டியவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டால் பக்கவாதத்தை கட்டுப்படுத்தலாம்.

 

மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’ (Stroke) என்று சொல்கிறோம்.

 

வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது. இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.

 

#காரணங்கள்:

 

50 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். அதாவது, இந்த வயதுக்கு மேல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பக்கவாதம் வருகிற வாய்ப்பு 2 மடங்கு அதிகரிக்கிறது. குடும்பத்தில் பெற்றோருக்கு அல்லது அவர்களின் சந்ததியினருக்கு பக்கவாதம் வந்திருந்தால், அவர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 

 

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வு கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு அடித்தளம் அமைக்கின்ற முக்கிய நோய்கள். புகைப்பிடித்தல், அடுத்தவர் விடும் புகையைச் சுவாசித்தல், மது அருந்துதல், பருமன், உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கைமுறை ஆகியவை பக்கவாதம் வருவதைத் தூண்டுகின்றன. தலைக்காயம், மூளையில் ஏற்படும் தொற்று போன்றவற்றாலும் பக்கவாதம் வரலாம். முன் அறிவிப்புகள் பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது.

 

பக்கவாதத்தின் அலார #அறிகுறிகள்...

 

1. முகத்தில் அல்லது உடலில் ஒரு பக்கத்தில் மரத்துப்போதல், பலவீனம் அடைதல், தளர்ச்சி அடைதல் அல்லது ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு, உடல் செயலிழத்தல்.

 

2. பேசும்போது திடீரென வார்த்தைகள் குழறுதல்... மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் பிரச்சனை... எளிய வாக்கியங்களைக்கூட வெளிப்படுத்த முடியாத நிலைமை...

 

3. நடக்கும்போது தள்ளாடுதல்... நேராக நிற்க முடியாத நிலைமை, ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது...

 

4. பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென்று சில நொடிகள் பேச்சு நின்றுபோகும். பார்வை திடீரென்று குறைந்து உடனே தெளிவாகும். இரட்டைப் பார்வை ஏற்படும்.

 

நடந்து செல்லும்போது தலைசுற்றும். உணவை வாய்க்குக் கொண்டு செல்லும்போது கை தடுமாறும். கையெழுத்துப் போடும்போது கை விரல்கள் திடீரென ஒத்துழைக்காது. வழக்கத்துக்கு மாறான தலைவலி, வாந்தி.

 

பக்கவாத நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிந்த 2 அல்லது 3 மணி நேரத்துக்குள் தக்க சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி முழுவதுமாக செயலிழந்துவிடும். ஆகவே, காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு பாதிப்பு குறையும்.

 

#என்னென்ன_சிகிச்சைகள்?

 

ரத்தச் சர்க்கரையையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவது, நோயாளிக்கு மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்வது, ரத்த உறைவுக்கட்டியைக் கரைப்பது, ரத்தக்கசிவை நிறுத்துவது, ரத்தக் கொழுப்பைக் கரைப்பது, இதயம் பழுதுபடாமல் பாதுகாப்பது, சுவாசம் சீராக நடைபெற உதவுவது போன்றவை முதல் கட்டத்தில் செய்யப்படுகின்ற சிகிச்சை முறைகள். சிலருக்கு மூளையில் ரத்தக்குழாய் உடைந்து ரத்தக்கசிவு பெருவாரியாக இருக்கும்.

 

அப்போது அவர்களுக்கு மூளையில் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கும். இவற்றைத் தொடர்ந்து ‘பிசியோதெரபிஸ்ட்‘  

(Physiotherapist) மூலம் நோயாளியின் செயலிழந்து போன கை, கால்களுக்குப் பயிற்சிகள் தந்து அவரை நடக்க வைப்பது சிகிச்சையின் அடுத்தகட்டம். நோயாளிகள் நம்பிக்கையுடன் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மருத்துவமனையில் நோயாளி இருக்கிறவரை அவரை கவனிப்பது மட்டுமின்றி, வீட்டுக்கு வந்தபிறகும் இந்தப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

#தடுப்பது_எப்படி?

 

இக்கொடிய நோயை வரவிடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம். அதற்கு என்ன செய்யலாம்?

 

ரத்த அழுத்தம் சரியாக இருக்கட்டும்.. முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதம் ஒருமுறை தங்கள் ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைத் தொடர்ந்து முறைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால், உணவுமுறையும் முக்கியம். ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு 3லிருந்து 5 கிராம் வரை உப்பு போதுமானது. இதற்கு மேல் உப்பு உடலுக்குள் போனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதைத் தவிர்க்க ஊறுகாய், கருவாடு, அப்பளம். வடகம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப்பருப்பு, புளித்த மோர் போன்றவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

 

இறைச்சி, முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், சாஸ் மற்றும் சாக்லெட் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. 

 

காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகள், சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். 

 

எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். 

 

தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது.

 

 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைக்கூட மிகக் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும். 

 

நார்ச்சத்துள்ள உணவுகளை விரும்பிச் சாப்பிடுங்கள். 

 

கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள்... கொய்யா, தர்ப்பூசணி, மாதுளை போன்ற பழங்கள்... பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள்... புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகள்... காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub