Breaking News :

Tuesday, April 15
.

என்றும் இளமையா இருக்கனுமா?


உடல் உறுப்புகளில் மிகவும் பெரியது தோல். உள்ளுறுப்புகளை பாதுகாப்பதும் உடலின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதும் இந்த தோல் தான் . இந்த தோலுக்கு கொலாஜென் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களால் பலம் கிடைக்கிறது.

இவை இரன்டு புரதங்களும் சேர்ந்து தோலுக்கு ஒரு உருவத்தை கொடுக்கின்றன. இந்த புரதங்கள் சரியான அளவு கிடைக்காதபோது, முதுமை எட்டிப் பார்க்கிறது. தோலில் சுருக்கங்கள் தோன்றுகிறது. இதனை தடுப்பதற்கான வழி, கொலாஜென் மற்றும் எலாஸ்டின் அதிகமாக இருக்கும் உணவுகளை கண்டறிந்து உண்பது தான். இந்த இரண்டு புரதங்களை பெறுவதற்கான முக்கிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகளின் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து சரும ஆரோக்கியத்தை காப்போம் . முதுமையை விரட்டுவோம்.

வைட்டமின் சி :
ஸ்டராபெர்ரி , எலுமிச்சை , நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் சி கொலாஜென் உயிர்சக்திக்கு அத்தியாவசிய சத்தாக இருக்கிறது. கொலாஜென் கூறுகளை இணைக்க, கொலாஜென் மரபணு வெளிப்பாட்டை ஊக்குவிக்க வைட்டமின் சி அதிக அளவில் உதவுகிறது. ஆகவே வைட்டமின் சி அதிக உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உண்பதன்மூலம் உங்கள் வயது குறைய துவங்கும் என்பது உறுதி.

ஈஸ்ட்ரோஜென் :
ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்களுக்கு உற்ற தோழி. உங்களை இளமையாக தோன்ற வைக்கிறது. கொலாஜென் மற்றும் எலாஸ்டின் அளவை அதிகரிக்க செய்கிறது. ஈஸ்ட்ரோஜென் குறைந்த சருமம் சுருக்கங்களுடன், வறண்டு, ஒளி இழந்து காணப்படும். இதனை தடுக்க ஈஸ்ட்ரோஜென் அதிகம் உள்ள உணவுகளை உண்ணுவது தீர்வாகும். பீன்ஸ், சோயா, நட்ஸ் , பருப்பு வகைகள், ஓட்ஸ், பார்லி , எள்ளு, போன்றவை ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகள். 30 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் இந்த வகை உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜெலட்டின் :
குழந்தை பருவத்தில் ஜெல்லியை அனைவரும் விரும்பி உண்ணுவோம். அந்த ஜெல்லி ஜெலட்டினில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு புரதம் ஆகும். பொதுவாக விலங்குகளின் எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களில் இந்த புரதம் காணப்படுகிறது. ஜெலட்டினை உணவில் சேர்த்து கொள்வதால், கொலாஜென் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி அதிகரிக்கும். மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் தவிர்க்கப்படும். இறைச்சி, தயிர், எலும்பு குழம்பு போன்றவற்றில் ஜெலட்டின் அதிகமாக இருக்கும்.

வைட்டமின் பி :
வைட்டமின் பி என்பது எட்டு வகையான வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழுவாகும். தையமின், ரிபோபிளவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், வைட்டமின் b6, பயோட்டின், போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 ஆகியவை இந்த குழுவில் அடக்கம். இவை அனைத்தும் கொலாஜென் உற்பத்திக்கு உதவுகின்றன. ரிபோபிளவின் மற்றும் வைட்டமின் b 6 குறைபாடு உள்ளவர்களுக்கு கொலாஜென் உற்பத்தி குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பீன்ஸ், பட்டாணி , பச்சை காய்கறிகள் மற்றும் இலைகள் உள்ள காய்கறிகள் போன்றவற்றில் வைட்டமின் பி சத்து அதிகமாக இருக்கும்.

வைட்டமின் ஈ :
வைட்டமின் ஈ என்பது கொழுப்புகளை கரைக்கும் ஒரு ஆன்டிஆக்ஸிடெண்டாகும். இது தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து உடலை காக்கின்றன. சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தை காக்கின்றன. வைட்டமின் சியுடன் இணைந்து கொலாஜென் உற்பத்தியில் உதவுகின்றன. நட்ஸ், கீரைகள், முழு தானியங்கள், ஆலிவ் எண்ணெய் , சூரிய காந்தி எண்ணெய் போன்றவற்றில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது.

தாமிரம்- (காப்பர்)
ஆரோக்கியமான மற்றும் திடமான சருமம் பெற எலாஸ்டின் மற்றும் கொலாஜென் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும். இதனை செய்ய உதவுவது தாமிரம். மனித உடலில் தாமிரம், லிஸில் ஆக்ஸிடேஸ்(Lysyl Oxidase ) என்ற என்சைமின் செயலாற்றலை அதிகரித்து, கொலாஜென் மற்றும் எலாஸ்டினின் இணைப்பிற்கு உதவுகின்றன. இறைச்சி, மட்டி மீன் , முந்திரி, பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் பருப்புகளில் இந்த தாமிரம் அதிகமாக உள்ளது. அல்லது காப்பர் பாத்திரங்களில் சமைப்பதால் இன்னும் நிறைய பலன்களை பெறலாம்.

முதுமையை நீக்கி இளமையுடன் வாழ யாருக்கு தான் பிடிக்காது. உடனே இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் உணவுகளை உங்கள் தினசரி உணவு பட்டியலுடன் இணைத்து இளமையோடு வாழுங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.