‘வன ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் விளாம்பழம்,
விளாம்பழம் ‘வுட் ஆப்பிள்’ (Wood Apple) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.வெளிர் பச்சை நிற தடித்த ஓட்டினுள் இனிப்புடன் புளிப்பு கலந்த சுவை கொண்ட பழம்.
ஊட்டச்சத்துக்கள் : விளாம்பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. மேலும், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களும் நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குப் பங்களிக்கின்றன. விளாம்பழங்களில் 70 சதம் ஈரப்பதம், 7.3 சதம் புரத சத்து, 0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 70 மி.கி. ரிபோபிளோவின் மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன.
மேலே கடினமான ஓடுடன் கூடிய இந்தப் பழத்தின் உள்ளே இருக்கும் சுவையான சதைப்பற்றுள்ள பகுதியுடன் நாட்டுச் சர்க்கரையை கலந்து உண்டால் மிகவும் ருசியாக இருக்கும். இந்த விளாம்பழம் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். விநாயகருக்கு மிக விருப்பமான பழம் என்பதால் விநாயக சதுர்த்திக்கு படைப்பது வழக்கம்.
இதை பச்சையாக உண்ணலாம். பானங்கள், சட்னிகள், ஜாம்கள் மற்றும் இனிப்பு வகைகளாக செய்து பயன்படுத்தலாம். மேலும், இதில் தண்ணீர் மற்றும் வெல்லம் கலந்து புத்துணர்ச்சியூட்டும் பானமாகத் தயாரிக்கலாம். கோடை காலத்தில் இது மிகச் சிறந்த பானமாக விளங்கும். சூட்டை குறைக்கும்.
ஆக்சிஜனேற்ற பண்புகள் : இந்தப் பழத்தில் உள்ள பல்வேறு ஆக்சிஜனேற்ற பண்புகள் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. செரிமான ஆரோக்கியம் : இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமானம் நன்றாக நடைபெற உதவுகிறது. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. மேலும், இது ஆரோக்கியமான உடல் நுண்ணுயிரியையும் ஊக்குவிக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியம் : பாரம்பரிய மருத்துவம் கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு விளாம்பழத்தை இயற்கையான தீர்வாகப் பயன்படுத்துகிறது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி அதன் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் என்று பாரம்பரிய மருத்துவம் சொல்கிறது.
இரத்த சர்க்கரை கட்டுப்பாடு : சில ஆய்வுகள் விளாம்பழம் இரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான விளைவுகளைக் கொண்டிருக்கின்றன என்று கூறுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகளும் தாராளமாக இந்தப் பழத்தை உண்ணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி : இதில் உள்ள அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், உடலில் நோய்த் தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்க்கிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் காரணமாக உடலில் காயம் ஏற்பட்டால் அதை விரைவில் குணமாக்கும் ஆற்றல் வாய்ந்தது என்கிறது பாரம்பரிய மருத்துவம்.
சரும ஆரோக்கியம் : விளாம்பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கின்றன மற்றும் முகப்பரு போன்ற சரும பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன. பசி உணர்வைத் தூண்டும் : சில குழந்தைகள் அஜீரணக் கோளாறு காரணமாக சரியான உணவு உண்ணாமல் இருப்பார்கள். அவர்களுக்கு விளாம்பழம் கொடுத்து வந்தால் அஜீரணக் குறைபாட்டை நீக்கி நன்றாக பசி எடுக்க வைக்கும்.
பித்தம் தணிக்கும் : பித்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு தலைசுற்றல், வாந்தி, தெளிவான கண் பார்வை இன்மை, தலைவலி போன்ற பிரச்னைகள் இருக்கும், அதிகமாக வியர்ப்பது, கிறுகிறுப்பு போன்ற உணர்வுகள் இருக்கும். இவர்கள் விளாம்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இந்த பிரச்னைகள் அனைத்தும் சரியாகும். பித்தத்தை நன்றாக தணிக்கும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். விளாம்பழ பிசினை உலர்த்தி , தூள் செய்து, காலை மாலை என ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டால், உள்ளுறுப்பு ரணம், நீர் எரிச்சல், வயிற்றுப்போக்கு, மாதவிடாய் பிரச்சனைகள் எல்லாம் குணமாகும். விளாம் மரத்தின் பிசினை அடிக்கடி சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.
பித்தம் சம்பந்தமான பாதிப்பு உள்ளவர்கள் விளாம்பழத்துடன் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால் எல்லாம் சரியாகும். இதனால் பித்தத்தால் ஏற்படும் கண்பார்வை மங்கல், தலைவலி, வாயில் கசப்பு, அதிக வியர்வை, நாவில் ருசியற்ற உணர்வு போன்றவை குணமாகும்.
எலும்புகள் பலமடையும் : பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் எலும்புகள் பலவீனமடைந்து மூட்டு வலி, எலும்புத் தேய்மானம் போன்றவை ஏற்படும். அவர்கள் விளாம்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் எலும்புகள் வலுவடையும். மேலும், விளாம்பழத்திற்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. நினைவாற்றலை அதிகரிக்கும்.
விளாம் பழத்தை வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது உண்ணலாம்.
விளாம்பழத்துக்கும் ஒரு பழமொழி உண்டு.
விட்டதடி உன்னாசை விளாம்பழ ஓட்டோடு .
அதாவது......
சில பெண்கள் தங்களுக்குப் பிடித்த ஆண்மகனை இடுமருந்து கொடுத்து வசியம் செய்வதுண்டு.இவர்கள் எளிதில் விலகமாட்டார்கள். இதற்குத் தீர்வாக ( மருந்தாக ) விளாம்பழத்தின் ஓட்டை காயவைத்து, இடித்து சலித்து பவுடராக்கி இரண்டு சிட்டிகை அளவு தேனில் // பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர படிப்படியாக இடுமருந்தின் நஞ்சு முறிந்து விலகுவர். இதனாலேயே இந்தப் பழமொழி ஏற்பட்டது எனக் கூறுவர்.
இப்படி எண்ணிலடங்காத பல ஆரோக்கிய நன்மைகள் விளாம்பழத்தில் நிறைந்துள்ளது. எனவே இதை அனைவரும் கட்டாயம் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை உங்களால் வாழ முடியும். இந்தப் பழம் கிடைக்கும் காலங்களில் அவசியம் தவறாது உண்ணுங்கள். உடல் ஆரோக்கியம் பெறுங்கள்.