Breaking News :

Sunday, May 04
.

பாத தரிசனத்தின் பலன்?


கோயிலுக்குச் சென்று கூட்டத்தில் நின்று கடவுளின் திருவுருவத்தைப் பார்க்கிறோம். கூட்டமில்லாத கோயில்களில் இறைவனின் ஒவ்வொரு அங்கங்களைக் கண்ணாரக் கண்டு இன்புற வாய்ப்பு இருக்கும். கோவிந்த நாம கோஷத்திற்கு இடையில் ‘ஜருகண்டி’ என்ற சத்தத்திற்கு முன், கும்பிடும் கூட்டம் நிறைந்த திருப்பதி போன்ற கோயில்களில் ½ நிமிடம்கூட நிம்மதியாகக் கும்பிட வாய்ப்பு சற்றுக் குறைவுதான்.அப்படி இருக்கும் கோயில்களில் இறைவனின் எந்த உறுப்பை முதலில் பார்ப்பது என்றால், இறைவனின் பாதத்தைத்தான். எப்போதும் இறைவன் பாதத்திலிருந்து தொடங்கி, படிப்படியாக மேல்நோக்கிச் சென்று முடியில் முடிக்கவேண்டும். இலக்கியத்தில் அப்படி அடி முதல் முடி வரை வருணித்துப்பாடும் இலக்கிய வகைக்குப் “பாதாதி கேசம்” என்று பொருள்.

இறைவன் இந்த உலகைத் தாங்குகிறார். அந்த இறைவனையே தாங்குவது அவருடைய பாதங்கள். அதனால் பாதத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும். திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தில் இறைவனுடைய பாதத்தைத்தான்,“நல் தாள்”, “மா அடி”,” இறைவனடி” என்று பாதத்தை மட்டுமே பணிகிறார். இறைவனின் பாத கமலத்தைப் பற்றிக்கொண்டால், நம்முடைய பாதக மலம் அகலும் என்பார் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள். கடவுள்களில் ஒவ்வொரு கடவுள்களுக்கும் கைகளின் எண்ணிக்கையும் தலைகளின் எண்ணிக்கையும் மாறுபடும்.

ஆனால், பாதம் இரண்டு மட்டுமே இருக்கும்.நான்கு முகம்கொண்ட பிரம்மனுக்கு எட்டுக் கால்களும் ஐந்து முகம் கொண்ட சிவபெருமானுக்குப் பத்து கால்களும் ஆறு முகம் கொண்ட முருகப்பெருமானுக்குப் பன்னிரு கால்களும் இருப்பதில்லை. கடவுளுக்குக் கணக்குத் தெரியவில்லையா? என்று எண்ணவேண்டாம். கடவுளுக்குக் கருணை அதிகம். இதுதான் பற்றுக்கோடு என்று பற்றிக்கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டு கைகள் என்பதால் இரு கால்களுடன் அருள்கிறார்.இறைவன் எல்லாவற்றையும் தருவார். அவரது பாதமோ இறைவனையே நமக்குத் தரும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.