ஒரு ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடமே ராசி என்று சொல்லப்படும். அந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் கோச்சார சனி சஞ்சரிக்கும் போது அது அஷ்டமத்து சனி என்று சொல்லப்படும். சர்வ நாசம் தரக் கூடியது இந்த அஷ்டம சனி.
ஏழரை சனியை விட அஷ்டமத்து சனி அதிக சிரமம் தரும் என சொல்ல காரணம்.. சனி அஷ்டமத்தில் வரும் போது சனியின் பார்வை 10ம் இடம் 2ம் இடம் மற்றும் 5ம் இடத்தில் விழுகிறது அதனால் 10ம் இடமான தொழில் ஸ்தானம் 2ம் இடமான குடும்பம் அல்லது வாக்கு ஸ்தானம் மற்றும் 5ம் இடமான பூர்வ புண்ணிய பலன்களை ஒட்டிய நன்மை தீமை தரும் நிலை என்ற நிலையில் அமைவதால் தொழிலும் குடும்பமும் வாக்கும் பாதகம் ஏற்பட்டு நிறைந்த சிரமம் ஏற்படும்.
தொழிலில் இடையூறுகள் வரும். விரும்பதாகாத இடத்திற்கு மாற்றம் வரும். தேவையில்லாமல் கடன் வாங்கவும்.. வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழலும் உருவாகும். உடல் நலம் பாதிப்பு அடையும். சாதாரணமாக பேசினால் கூட அது சண்டையில் போய் முடியும்... குடும்பத்தில் பிரச்சனை வரும். பிள்ளைகள் சொல்படி கேட்கமாட்டார்கள். இப்படி என்னென்ன சொல்லலாமோ அத்தனையும் சொல்லலாம்...
இது எல்லாம் ஒரே சமயத்தில் வரும் என்பதால் அதன் தாக்கம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அஷ்டமத்து சனியின் மீது குரு பார்வை இருந்தால் மட்டுமே பிரச்னைகள் குறையலாம் அது வன்றி அனைவரும் பிரச்னையை பொறுத்து தான் ஆக வேண்டும்..
இதற்க்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம், இதை தாங்கும் வலிமையை பெறுவது தான். அதற்காக தான் சில பரிகாரம் சொல்வது உண்டு. இந்த பரிகாரத்தால் பிரச்சனை தீருமா என்பதை விட அதை சமாளிக்க முடியும் என்றே சொல்லலாம். சரி இதற்கு ஆறுதலாக சில பரிகாரகங்களை சொல்லலாம்.
எட்டில் வரும் சனி அஷ்டமத்து சனி நான்கில் வரும் சனி அர்தாஷ்டம சனி. இந்த இரண்டு நிலைகளிலும் உள்ளவர்கள் பரிகாரகமாக செய்ய வேண்டியவைகள் என சில சொல்கிறேன். உங்களால் முடிந்தால் அனைத்தையும் செய்யலாம்.. எவ்வளவு முடியுமோ அதை செய்யலாம். இதை சனியின் காலமான இரண்டரை வருடங்களும் செய்ய வேண்டும்.
இந்த அஷ்டமத்து சனி பெயர்ச்சி ஆன நாளில் இருந்து இரண்டரை வருடம் இருக்கும். இரண்டு மணி நேர பரிகாரம் மட்டும் பலன் தராது.. இந்த இரண்டரை வருடமும் இதனை செய்ய வேண்டும்.
எனது பரிகார முறைகள் முறையே, தமிழ் மறை பாடல்கள், உணவு முறைகள் ஒழுக்க கட்டுப்பாடு, விருட்ச ஸ்பரிசம், ஆலய தரிசனம் மற்றும் சில நடை முறை பரிகாரம் என்பதாகவே இருக்கும். இந்த வகையில் சில எளிய எட்டு வித பரிகாரங்கள் இங்கு சொல்ல பட்டு இருக்கிறது. முயற்சி செய்து பலன் பெறுங்கள்.
வெள்ளை எள்ளை சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் பொடித்து சாதத்தில் கலந்து சாப்பிடவும்.. மொத்தமாக பொடித்து வைத்து சாப்பிட வேண்டாம்.. அன்றைய நாள் தேவைக்கு மட்டும் பொடி செய்து பயன்படுத்தவும். உப்பு சேர்க்க வேண்டாம்.. சுவை விரும்பிகள் கொஞ்சமாக உப்பு அல்லது வெல்லம் சேர்த்து கொள்ளுங்கள். (இது 2ம் இட பார்வைக்காக)
பஞ்சமுக மூர்த்திகளை வழிபாடு செய்யுங்கள். பஞ்சமுக விநாயகர், பஞ்ச முக ஆஞ்சநேயர் பஞ்சலிங்கம், பஞ்சமுக சுப்ரமனியர் போன்ற திருமூர்த்தங்களை தரிசனம் செய்து வழிபாடு செய்யுங்கள். (இது 10ம் இட பார்வைக்காக)
சனியுடன் தாயாரும் மனைவியும் (சாயா தேவி, நீலா தேவி) இருவரும் சேர்ந்து இருக்கும் திருதலத்தலமான திருவானைக்கா சென்று தரிசனம் செய்யுங்கள்.. இங்கு தான் சிவபெருமான் கூலியாக திருநீற்றை கொடுக்க அங்கு உழைப்பவர்களுக்கு ஏற்ப அது தங்கமாக மாறியது என்றும் வரலாறு உண்டு.. இது சனியின் 5 ம் பார்வையை சரி செய்யும். (இது 5ம் இட பார்வைக்காக)
தமிழ் படிப்பவர்கள் பச்சை பதிகம் எனும் ஞானசம்பந்தர் அருளிய போகம் ஆர்த்த பூண்முலையாள் என்ற திருப்பதிகம் படியுங்கள் அல்லது ஆடியோவில் கேளுங்கள். நேரம் கிடைப்பவர்கள் நள சரித்திரத்தை படியுங்கள் அல்லது படிக்க சொல்லி கேளுங்கள். (இது 2 மற்றும் 10ம்மிட பார்வைக்காக)
வன்னி மரத்தை வலமாக வந்து வழிபாடு செய்யுங்கள். இது எதுவுமே முடியாது என்றால் பௌர்ணமி நாளில் குபேர லிங்க தரிசனம் செய்யுங்கள். முடிந்தவரை சனி பிரதோஷம் அன்று சிவ வழிபாடு செய்யுங்கள்.
இவைகளை செய்ததால் பிரச்சனைகளை சந்திக்கும் தைரியமுடன் இருக்கலாம். ஆகா.. இது தான் தீர்வு என்று எண்ணிவிடாமல் உங்கள் நம்பிக்கைக்கு உரிய சோதிடரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
நல்லது சொல்லி உள்ளது நல்லதே நடக்கும். நல்வாழ்த்துக்கள்.