தூக்கத்தில் கனவுகள் வருவது இயல்பானது. பச்சிளம் குழந்தைகளுக்கு கூட தூக்கத்தில் கனவுகள் வரும். திடீரென தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை சிரிப்பதையும் அல்லது விம்மி அழுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். எதிர்மறையான கனவுகள் தான் பெரும்பாலும் நமக்கு நினைவில் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.
கெட்ட கனவுகள் வந்து நம்மை பயமுறுத்துவது ஏன்? கெட்ட கனவுகள் வந்தால் என்ன செய்யணும்? என்பதை தொடர்ந்து காணலாம் வாருங்கள். ஆழ்ந்து தூங்கும் பொழுது திடீரென நம்மை அறியாமல் பயந்து எழுந்து விடுவோம். காரணம் கெட்ட கனவுகள் நம்மை அச்சுறுத்தி இருக்கும். யாரோ நம்மை துரத்துவது போலவும், யாருக்கோ ஆபத்து வருவது போலவும் கனவில் வந்தால் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும். இந்த கெட்ட கனவுகள் நம்மை ஆட்கொள்ளும் பொழுது நம் கண்கள் இமைகளுக்குள் சுழன்று கொண்டிருக்கும். ஆனால் நம்மால் எதையும் செய்ய முடியாது.
நாம் கனவினை நிஜம் என்று நினைத்து எதுவும் செய்து விடக்கூடாது என்பதற்காகவே நம் கை, கால்கள், தசைகள் அசைவற்ற நிலையில் இருக்கும். இது போன்ற கெட்ட கனவுகள் எல்லோருக்கும் வருவது இல்லை. ஜோதிடத்தில் கிரக அமைப்புகள் சாதகமற்ற நிலையில் இருக்கும் பொழுது, ஜாதகருக்கு மன அழுத்தமும், மனநல பிரச்சனைகளும் உண்டாகிறது.
பொதுவாகவே மன அழுத்தம், சரியான தூக்கமின்மை போன்ற தொந்தரவுகளால் இது போன்ற கெட்ட கனவுகள் நம்மை துரத்துகிறது. நன்கு தூங்கி ஓய்வெடுப்பவர்களுக்கு இந்த தொந்தரவுகள் வருவதில்லை. எப்போதும் எதிர்மறையான சிந்தனைகள் கொண்டிருப்பவர்கள் கெட்ட கனவுகளை கடந்தாக வேண்டும். நடந்து முடிந்தவற்றை சிந்தித்துக் கொண்டே இருந்தால் எதுவும் மாறப் போவதில்லை. ஆனால் ஒரு சிலர் முடிந்தவற்றை நினைத்து இப்படி செய்திருக்கலாம் அல்லது அப்படி செய்திருக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி சிந்திக்கும் பொழுது கெட்ட கனவுகள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எதைப் பற்றிய கவலையும் இல்லாமல், வருவதை எதிர் கொள்ளலாம் என்கிற மன தைரியத்துடன் இருங்கள். இது போன்ற கனவுகளை தவிர்க்கலாம்.
கெட்ட கனவுகள் வந்தால் ஜோதிட ரீதியாக சனிக்கிழமையில் கால பைரவரை சென்று வணங்குங்கள். காலபைரவர் சன்னதியில் கொடுக்கக்கூடிய விபூதியை வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். தினமும் இரவு தூங்கும் முன் இதை பூசிக் கொண்டு தூங்குங்கள். எம பயம், மரண பயம் போன்றவற்றிலிருந்து விடுதலை கொடுப்பவர் காலபைரவர். காலபைரவரின் வாகனமாக இருக்கக்கூடிய நாய்களுக்கு இரவில் உணவு வையுங்கள், நன்மைகள் நடக்கும்.
அறிவியல் ரீதியாக கெட்ட கனவுகள் வந்தால் தியானம், மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவற்றை தூங்கும் முன்பு சில நிமிடங்கள் வரை முயற்சி செய்யுங்கள். தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்னர் உடலையும், மனதையும் தளர்வாக வைத்துக் கொள்ள பத்து நிமிடம் மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து, வாய் வழியாக வெளியில் விடுங்கள். புத்தகங்கள் வாசிப்பது, நகைச்சுவையான விஷயங்களை நினைத்துப் பார்ப்பது, அன்றைய தினத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் ஏதாவது நடந்திருந்தால் அதை அசைபோடுவது, பிடித்தமான மெல்லிய இசைகளை கேட்பது போன்றவற்றை செய்து விட்டு தூங்க செல்லுங்கள், கெட்ட கனவுகள் வராது.