Breaking News :

Sunday, May 04
.

சந்திராஷ்டமம் நேரத்தில் என்ன செய்ய கூடாது?


ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங்களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும்  தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம்  காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் புதன்  இருக்கும் இடத்தையோ, குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்துகொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.
சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த  வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.

ஒருவருக்கு மனம் தெளிவாக இருக்கும்போதுதான் அவரால் சிறப்பாகச் சிந்திக்கவும், செயல்படவும் முடியும். ஒருவருடைய மனம் தெளிவாக இருக்கவேண்டும் என்றால், அவருடைய ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து நல்ல இடத்தில் சந்திரன் அமையப் பெற்று இருக்கவேண்டும். ஜன்ம லக்கினத்துக்கு 6, 8, 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் சந்திரன் அமையப் பெற்றிருந்தால், அவருடைய வாழ்க்கையில் சந்திர தசை, சந்திரபுக்தி நடைபெறும் காலங்களிலும், மற்ற கிரக தசைகளில் சந்திர புக்தி நடைபெறும் காலங்களிலும் தேவையற்ற மனஉளைச்சலுக்கு ஆளாக நேரும்.


நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே  சந்திராஷ்டமம் என்கிறோம்.

சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான்  ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள்,  இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக  தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன.

ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய  இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம்,  வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்யமாட்டார்கள்,  புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களையும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.  

எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம்  எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே  நேரத்தில் லாப-நஷ்டங்கள்,  நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன  பலன்கள் ஏற்படும்?

சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம்.

இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.

மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள்.

நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு.
ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன்  ஆதரவு.

ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள்.

ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி.

எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.

ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.
பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன  அமைதி, தரும சிந்தனை.

பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.


உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள்  நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்வினி    அனுஷம்
பரணி    கேட்டை
கிருத்திகை    மூலம்
ரோகிணி    பூராடம்
மிருகசீரிஷம்    உத்திராடம்
திருவாதிரை    திருவோணம்
புனர்பூசம்    அவிட்டம்
பூசம்    சதயம்
ஆயில்யம்    பூரட்டாதி
மகம்    உத்திரட்டாதி
பூரம்    ரேவதி
உத்திரம்    அஸ்வினி
அஸ்தம்    பரணி
சித்திரை    கிருத்திகை
சுவாதி    ரோகிணி
விசாகம்    மிருகசீரிஷம்
அனுஷம்    திருவாதிரை
கேட்டை    புனர்பூசம்
மூலம்    பூசம்
பூராடம்    ஆயில்யம்
உத்திராடம்    மகம்
திருவோணம்    பூரம்
அவிட்டம்    உத்திரம்
சதயம்    அஸ்தம்
பூரட்டாதி    சித்திரை
உத்திரட்டாதி    சுவாதி
ரேவதி    விசாகம்

கெடுபலன்கள் வராது: சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

சந்திராஷ்டமத்தால் யாருக்கு கெடுதல்? சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. சில நேரங்களில் முடிக்க முடியாத வேலைகள் கூட சந்திராஷ்டம தினங்களில் முடிவதை பார்க்கலாம்.

 1. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாம் வீடு குருவின் வீடாகவோ அல்லது எட்டாம் வீட்டிற்கு குருவின் பார்வையோஅல்லது சேர்க்கையோ ஏற்பட்டால் சந்திராஷ்டம கெடுபலன் ஏற்படாது.

2.சந்திரனுக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் நின்று சந்திராஷ்டமம் ஏற்பட்டால் அப்போது தீமையை காட்டிலும் நன்மையை ஏற்படும். அதிலும் சுக்கிரன் ஆட்சிபலம் பெற்றுவிட்டால் உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் அதிக நற்பலன்கள் ஏற்படும்.

3.ஒருவர் ஜாதகத்தில் ஜெனன சந்திரன் குரு பார்வை பெற்ற நிலையில் அவருக்கு சந்திராஷ்டமம் கெடுதல் செய்யாது.

4. ஜெனன ஜாதகத்தில் சந்திரன் அதிக ஷட்பலம் பெற்று நின்றாலும், சந்திரன் பின்னாஷ்டகவர்க பரல்களாக 6 க்கு மேற்பட்ட பரல்கள் பெற்றுவிட்டாலும், சந்திரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக நின்றாலும் சந்திராஷ்டம பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

5. ஒருவர் சந்திராஷ்டமம் அடையும் நக்ஷத்திரம் குருவின் நக்ஷத்திரமாகவோ சுக்கிரனின் நக்ஷத்திரமாகவோ அமைந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் கெடுபலன் அளிப்பதில்லை.
 
6. ஒருவர் ராசிக்கு எட்டாமிடத்தில் புணர்பு தோஷத்தை தரும் சனைஸ்வரன், கிரஹன தோஷத்தை தரும் ஸர்ப கிரகங்களான ராகு கேது, சந்திரனுக்கு அஷ்டங்க தோஷத்தை ஏற்படுத்தி சந்திரபலம் இல்லாத அமாவாசை ஏற்படுத்தும் சூரியன் போன்ற கிரகங்களுடன் சேர்ந்து சந்திராஷ்டமம் ஏற்படும்போது மட்டுமே கெடுபலன்கள் ஏற்படுகின்றன.

தீர்வுகள்:
இக்காலத்தில் அமைதியை நாடி பொறுமையுடன் இருக்க வேண்டும். மனஅமைதிக்கு சந்திரனின் அதிதேவதையான பார்வதியை வணங்கி, சிவபுராணம் படித்தல் நன்று.

மனதை ஒருமுகப்படுத்தும் யோகா - தியானம் - பிராணாயாமம் போன்ற முறைகளை கடைபிடித்து “ இன்று நாள் முழுவதும் பொறுமை காக்க வேண்டும்” எனும் தீர்மானத்துடன் இருப்பின் தொல்லைகள் குறையும். மிகமுக்கிய பிரச்சனைகள் மேலும் சிக்கலாகாமல் தவிர்க்கலாம்.

குருவின் ஆதிக்கம்பெற்ற விரளி மஞ்சளை கையில் காப்பாக கட்டிக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் பலம் இழந்துவிடும்.

சந்திராஷ்டம தினத்தில் குருவின் ஸ்வருபமான பிராமணர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜோதிடர்களுக்கு வெற்றிலை பாக்குடன் இயன்ற அளவு தாம்பூலம் அளிப்பது.

விநாயகர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.

சந்திராஷ்டம தினத்தில் பால் திரிவது, சாதம் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாவது, வெண்ணிற ஆடையில் அசுத்தம் மற்றும் கறைபடுவது போன்றவை இயற்கையாக நேர்ந்துவிட்டால் சந்திராஷ்டம தோஷம் விலகிவிடும்.

திரிந்த பாலில் செய்யப்படும் ரசகுல்லா போன்ற இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு சாப்பிட சந்திராஷ்டம தோஷம் விலகிவிடும்.

தானம்:
இக்காலத்தில் சந்திரனின் தானியமான பச்சரிசியை ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்யலாம். வெண்ணிற ஆடையை சாலைகளில் திரியும் மனநலம் பாதித்தவர்களுக்கு தரலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.