குலதெய்வம் கோயிலுக்கு எடைக்கு எடை பச்சை அரிசி தானம் செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம். சனி பகவானுக்கு வாரம்தோறும் எள் தீபம் ஏற்றி வந்தால், சிறுகச் சிறுக கடன் தொல்லை குறையும்.
உங்கள் ஊரில் உள்ள எல்லைச்சாமிக்கு பட்டாடை சாத்தி பொங்கல் வைத்துப் படைய லிட்டால், கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
காலையில் 6 மணிக்குள் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையில் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி, சுவாமியை வழிபடுங்கள். அதேபோல் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக விளக்கேற்றி வழிபடலாம்.
இப்படிச் செய்வதுடன், காலை சூரிய உதயத்தின் போதோ, மாலை சூரிய அஸ்தமனத்தின்போதோ தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. தண்ணீரை வீணாக்கக்கூடாது. காரணம் தண்ணீருக்கு அதிபதியான வருணன், குபேரனைப் போலவே செல்வத்துக்கும் அதிபதி என்பதால், தண்ணீரை வீணாக்கக்கூடாது. தானியங்களையும் வீணாக்கக்கூடாது.
`நோய் இல்லாத தேகமும், கடன் இல்லாத வாழ்கையும் மனிதனுக்கான வரப்பிரசாதங்கள். நோய், கடன் இரண்டையுமே வளரவிடக்கூடாது’ என்பார்கள். இந்த இரண்டுமே எப்படிப்பட்ட மனிதர்களையும் துவண்டு போகச் செய்துவிடும். ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை கடனுக்குக் காரகத்துவம் பெற்றவர் சனி. கடனைக் குறிக்கும் இடம் லக்னத்திலிருந்து 6-ம் இடம் ஆகும்.
இந்த 6-ம் இடத்தின் அதிபதி ஆட்சி, உச்சம், நட்பு ஆகிய நிலையிலிருந் தால், ஆயுள் முழுதும் ஏதோ ஒருவகையில் கடன் பிரச்னை இருக்கும். இந்த இடத்தில் சனியைத் தவிர மற்ற கிரகங்கள் இருக்கலாம்.
6-ல் சனி இருந்தால் கடன் தொல்லைகள் ஏற்படும். அதேபோல், 6-ம் இடத்தின் அதிபதியான கிரகத்தின் தசை நடக்கும் காலத்திலும் கடன்கள் உண்டாகும். இனி, கடன்கள் ஏற்படும் காலத்தையும் பலாபலனையும் அறிவோம்.
ஏழரைச் சனி நடைபெறும்போது உண்டாகும் கடன்கள் அவமானத் தைத் தரலாம். அஷ்டம ராசியில் சனி சஞ்சரிக்கும்போது கடன் வாங்கினால் மனநிம்மதி பறிபோகும். அதேபோல் 6, 8 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும்போது கடன் வாங்கினால், திரும்ப செலுத்தமுடியாமல் தலைமறைவாக வேண்டிய சூழல் உருவாகும். சந்திராஷ்டம நேரத்தில் உண்டாகும் கடன்களால் புதிய பிரச்னைகள் தோன்றும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்.
இவை பொது விதிகள். அவரவர் ஜாதகங் களைத் துல்லியமாகக் கணித்து, மற்ற கிரக அமைப்புகளின் குறை நிறைகளைத் துல்லியமாக ஆராந்தபிறகே, கடன் நிலைகளைக் குறித்து தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும். உரிய பரிகாரங்களையும் செய்யலாம்.
இங்கே, லக்ன ரீதியாக கடன் பிரச்னை களுக்கான அமைப்புகளையும், அவற்றுக்குத் தீர்வாகத் திகழும் எளிய பரிகாரங்களையும் பார்க்கப் போகிறோம். இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும்.
ஒவ்வொருவரும் தமது ராசியை அறிந்து வைத்திருப்பதுபோன்று லக்னத்தையும் அறிந்து வைத்திருப்பது அவசியம். ஜாதகக் கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிட்டிருப்பார்கள். அந்த இடமே அந்த ஜாதகருக்குரிய லக்னமாகும். அதாவது, ஜாதகத்தில் மேஷ ராசிக்கட்டத்தில் ‘ல’ என்று இருந்தால் அவருடைய ஜன்ம லக்னம் மேஷ லக்னம். இந்த வகையில் ஒருவர் தன் ஜன்ம லக்னத்தைத் தெரிந்துகொள்ளலாம். அல்லது குடும்ப ஜோதிட ரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். இனி, லக்ன ரீதியான அம்சங்களைப் பார்ப்போம்.
மேஷ லக்னம்: இதன் அதிபதி செவ்வாய். இதற்கு ஆறாம் பாவம் கன்னி. புதன் கன்னிக்கு அதிபதி. செவ்வாயும் புதனும் பகை ராசிகள். ஆகவே, ஜாதகத்தில் புதன் சூரியனுடன் இருப்பது நன்மையைத் தரும். மாறாக வேறு எப்படி இருந்தாலும் சிறு சிறு கடன்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்குச் செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
ரிஷபம்: சுக்கிரனை அதிபதியாகக்கொண்ட ரிஷப லக்னத்துக்கு 6-ம் வீடு துலாம். துலாத்துக்கு அதிபதி சுக்கிரன். சூரியனோடு சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றிருந்தாலும் குருவோடு சேர்ந்திருந்தாலும் கடன் தொல்லை தீராது. இல்லையெனில் பரிகாரம் செய்யவேண்டும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றி வைத்து, லட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து வர, கடன்கள் படிப்படியாகக் குறையும்.
மிதுனம்: புதனை அதிபதியாகக்கொண்ட மிதுன லக்னத்துக்கு 6-ம் இடமான விருச்சிகம்; அதிபதி செவ்வாய். இவர் மகரம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் இருந்தால் கடன் பிரச்னை நிறைய உண்டு.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்குச் செந்தூரக் காப்பு அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடு வந்தால் கடன்கள் தீரும்.
கடகம்: சந்திரனின் ஆதிக்கம் கொண்ட கடகம். இதற்கு ஆறாம் இடத்தின் அதிபதி குரு. இவர் மிதுனம், கடகம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளில் இருந்தால் கடன் தொல்லைகள் ஏற்படும்.
பரிகாரம்: தொடர்ந்து ஆறு திங்கள்கிழமைகள் ஏழுமலையானை தியானித்து வழிபடவேண்டும். நிறைவில் திருப்பதிக்குச் சென்று திருவேங்கடவனை தரிசித்து வரவேண்டும். இதன் மூலம் படிப்படியாகக் கடன்கள் குறையும்.
சிம்மம்:
சூரியனின் ஆதிக்கம் கொண்ட லக்னம் இது. இந்த லக்னத்துக்கு 6-ம் இடமான மகர ராசிக்கு அதிபதி சனி. இவர் ரிஷபம், துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தால், கடன்தொல்லை அதிகமிருக்கும்.
பரிகாரம்: சூரியனார்கோவிலுக்குச் சென்று அர்ச்சனைக்குக் கொடுத்து வழிபட்டு வரலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வதும் விசேஷம்.
கன்னி: புதனை அதிபதியாகக் கொண்ட லக்னம். கன்னிக்கு 6-ம் இடமான கும்ப ராசியின் அதிபதி சனி. ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளில் சனி இருந்தால் கடன் சுமை ஏற்படும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, தாயார் சந்நிதி யில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் கடன்கள் தீரும்.
துலாம்: சுக்கிரன் ஆதிக்கம் கொண்டது. இந்த லக்னத்துக்கு ஆறாம் அதிபதி குரு. இவர் மேஷம், கடகம், தனுசு மற்றும் மீன ராசிகளில் இருந்தால் கடன் தொல்லை இருக்கும்.
பரிகாரம்: தொடர்ந்து 6 வியாழக்கிழமைகள் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, நெய்தீபம் ஏற்றிவைத்து, அர்ச்சனை செய்யவேண்டும்.
விருச்சிகம் : செவ்வாய் அதிபதியாக உள்ள விருச்சிக லக்னத்துக்கு 6-ம் இடம் மேஷம். இதற்கு அதிபதி செவ்வாய். இவர் மிதுனம், கன்னி மற்றும் மகர ராசியிலிருந்தால் கடன்கள் கஷ்டம் தரும்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து, கந்தசஷ்டிக் கவசம் பாராயணம் செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து 45 நாள்கள் செய்து வர கடன்கள் தீரும்.
தனுசு: குருவின் ஆதிக்கம் கொண்ட தனுசு லக்னத்துக்கு ஆறாம் ராசி ரிஷபம். அதிபதி சுக்கிரன். இவர் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளிலிருந்தால் கடன்தொல்லை பெரும் தொல்லையாக இருக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் திருவரங்கத் துக்குச் சென்று சக்கரத் தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி, துளசி தளத்தால் அர்ச்சனை செய்ய கடன்கள் தீரும்.
மகரம்: சனியின் ஆதிக்கம்கொண்ட மகர லக்னத்துக்கு 6-வது ராசி மிதுனம்; அதிபதி புதன். இவர் மிதுனம், கன்னி, விருச்சிக ராசிகளில் நின்றிருந்தால், கடன்கள் தொடர்கதையாக இருக்கும்.
பரிகாரம்: புதன்கிழமைகளில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி தளத்தால் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், கடன் தொல்லை நீங்கும்.
கும்பம்: சனியின் ஆதிக்கம்கொண்ட கும்ப லக்னத்துக்கு 6-வது ராசி கடகம்; அதிபதி சந்திரன். இவர் கடகம், சிம்மம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தால் கடன்கள் தொல்லை தரும்.
பரிகாரம்: தொடர்ந்து ஆறு பிரதோஷங்களுக்கு அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று சிவனாருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டு வரவேண்டும். ஒருமுறையேனும் திங்களூக்குச் சென்று தரிசனம் செய்து வரலாம்.
மீனம்: குருவின் ஆதிக்கம்கொண்ட மீன லக்னத்துக்கு ஆறுக்குடையவன் சூரியன். இவர் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகளில் நின்றால் கடன்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரியபகவானுக்கு தீபம் ஏற்றி, செம்பருத்திப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.