Breaking News :

Sunday, May 04
.

மூன்று கால் முனிவர்?


முனிவர்களும் மனிதர்கள்தான் என்பதால், உருவத்தில் பெரிதான எந்த வேற்றுமையும் அவர்களிடம் இருப்பதில்லை. ஆனால், அவர்களுடைய சக்தியோ அதீதமானது.

எதையும் சித்திக்கக்கூடிய வல்லமை படைத்தவர்கள் என்பதால், அவர்களை சித்தர்கள் என்றும் அழைக்கிறோம். அப்படி மனிதர்களை விட வித்தியாசமாக ஒரு முனிவர் இருந்திருக்கிறார். அவர் தான் பிருங்கி முனிவர். 3 கால்களுடன் இருந்த இந்த முனிவரால்தான், சிவனும் பார்வதியும் ஒரே உடலாய் அர்த்தநாரீஸ்வரராக மாறினார்கள் என்கிறது புராணம்.

சென்னையில் உள்ள பரங்கிமலைதான் இவர் தவம் செய்த இடம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. பிருங்கி தவம் செய்த மலை என்பதால் அது பிருங்கி மலை என்று அழைக்கப்பட்டதாகவும், விஜயநகர மன்னர்கள் காலத்துக்குப் பிறகு அது, பரங்கிமலையாக திரிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு ஆதாரமாக அங்கிருக்கும் சிவன் கோயிலையும், அங்கு இருந்த சோழர்கள் காலத்திய கல்வெட்டையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். அருகில் இருக்கும் பார்வதியை கூட வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கும் குணம் படைத்தவர். இப்படி நாள்தோறும் சிவனை மட்டுமே வழிபட்டு வந்தாலும் அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை.

இதைக்கண்டு அம்பாள் கோபமடைந்தாள். இதுகுறித்து சிவனிடம் முறையிட்டாள். நாம் தனித்தனியாக இருப்பதால் தானே இப்படி என்னைப் புறக்கணித்து உங்களை மட்டும் வழிபடுகிறார். நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இருந்தால் என்ன செய்வார்? அப்போது என்னையும் சேர்த்துதானே வழிபட்டாக வேண்டும் என்று கேட்டார்.

அன்று சிவபெருமானை வழிபட வந்தார் பிருங்கி முனிவர். எதிரில் இருவரும் ஒன்றிணைந்து ஒரே உருவமாய் அம்மையப்பனாய் நின்றனர். அதைக் கண்டு அதிர்ந்து போனார் பிருங்கி முனிவர். ”இப்படி இருந்தால் நம்முடைய ஈசனை எப்படி வணங்குவது? அங்கே அம்பாளும் அல்லவா இருக்கிறாள்” என்று யோசித்த பிருங்கி முனிவர், வண்டு உருவம் எடுத்தார். அம்மையப்பனின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் சுற்றி வணங்கிச் சென்றார்.

இதைக்கண்டு மேலும் கோபமடைந்தார் அம்பாள். உடலில் சக்தி இருப்பதால்தானே இதைச் செய்ய முடிந்தது என்று, பிருங்கி முனிவரின் உடற்பாகத்திலுள்ள தசைக்கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்து பிருங்கி தடுமாறினார். ”உன்னை வணங்கியதற்காகவா எனக்கு இந்த தண்டனை?” என்று பிருங்கி முனிவர் சிவபெருமானிடம் கேட்டார். நிலைமையை உணர்ந்துகொண்ட ஈசன், உடனே வலிமையுள்ள 3-வது கால் ஒன்றை கொடுத்து அருளினார்.

அத்துடன், "பிருங்கி முனிவரே, நாங்கள் இருவரும் ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். சிவசக்தி வழிபாடே சிறந்தது" என்று உபதேசித்தார்.

அதனால் மனம் தெளிந்த பிருங்கியும், ”என்னை அறியாது செய்த தவறுகளை மன்னித்து அருள வேண்டும்” என்று அம்பாளிடம் மன்னிப்பு கோரினார். அறியாமல் செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் பொழிந்தார்.

திருச்சி திருவானைக்கோவில், ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் சிவலிங்க சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ள வெளிப்பிரகார தூணில் 3 கால்களுடன் கூடிய பிருங்கி முனிவரின் சிற்பம் இருக்கிறது.

திருவானைக்கோவில் சென்றால் பிருங்கி முனிவரை தரிசித்து வழிபட மறக்காதீர்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.