மூன்றாம் பிறை பார்த்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும்., நான்காம் பிறை பார்த்தால் 'நாய்படாத பாடுதான்' என்றும் அநேகமானவர்கள் கூறி கேட்டதுண்டு.
அது மூன்றாம் பிறை பார்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இப்படிச் சொல்லப்பட்டதே தவிர, நான்காம்பிறை பார்ப்பவர்களுக்கெல்லாம் நாய்பாடு ஏற்படும் என்பதல்ல. இதற்கு உதாரமணமாக...
ஒரு முறை விநாயகப் பெருமான் சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார். கையில் கொழுக்கட்டையுடன் வந்திருந்த விநாயகரைக் கண்டு ஏளனம் செய்த சந்திரன் மீது விநாயகர் மிகுந்த கோபம் அடைந்தார். அன்று பிள்ளையார் சதுர்த்தி வேறு. கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார்.
மனம் வருந்திய சந்திரனோ, தான் அறியாது செய்த தவற்றை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டுக்கொண்டான். விநாயகர் சந்திரனை மன்னித்தார், ஆனால், முழுவதுமாக மன்னிக்கவில்லை. மூன்றாம்பிறையைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார்.
நான்காம்பிறையைப் பார்த்ததால் வரும் கெடுபலனை தவிர்க்க புராண காலத்தில் கிடைத்த ஒரு தீர்வைப் பார்ப்போம். ஒருமுறை சதுர்த்தியில் வரும் நான்காம் பிறையைப் பார்த்து வீண்பழிக்கு உள்ளானார் கண்ணன்.
இதற்குப் பரிகாரமாக, அடுத்த திங்களில் (அடுத்த மாதத்தில்) அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் செய்ததோடு கணபதியையும் வேண்டி பழியில் இருந்து விடுபட்டதாக புராணம் கூறுகிறது.
காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே, மாலையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.