Breaking News :

Tuesday, April 15
.

வீட்டருகில் பவளமல்லி மரம் இருப்பது நல்லதா?


மரத்தின் பூவினை “பாரிஜாத மலர்’’ என்றும் அழைப்பார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமானது, இந்த பாரிஜாத மலர். இந்த மலரை சாதாரணமாக பெண்கள் தலையில் சூடிக்கொள்வதில்லை. இது பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய தெய்வீக சக்தி வாய்ந்த மலர் என்பதால், இந்த மரம் வீட்டிற்கு அருகில் இருப்பது நல்லது என்கிறார்கள். மாலை நேரத்தில், இந்த புஷ்பம் மலரும் நேரத்தில் வருகின்ற நறுமணம் அந்தப் பகுதியையே தெய்வீக சாந்நித்யம் நிறைந்ததாக மாற்றும் தன்மை உடையது.

தேவலோக விருட்சங்களில் ஒன்று பவளமல்லி மரம். இலக்கியத்தில் இது, ‘சேடல்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி, சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும் தன்மை கொண்டது. பொதுவாக, இந்த மரம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் வெகுவாகப் பூத்துக் குலுங்கும். பெரும்பாலும், பூஜைக்குரிய மலர்கள் அனைத்தும் உதிர்வதற்கு முன்பு பறிக்கப்படுவதுதான் வழக்கம். மண்ணில் உதிர்ந்து விட்ட பூக்கள் பூஜைக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், பவளமல்லி மலர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இந்தப் பூக்கள் இரவில் பூத்து, அதிகாலையில் உதிர்வதால் அவற்றை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்குப் பயன்படுத்துவது தவறில்லை என்கிறது சாஸ்திரம்.

பவளமல்லியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். இந்த பவளமல்லி மலர் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும்பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும். இந்தப் பூ செடியில் இருந்து உதிரும்போது இரு பகுதியாகப் பிரிந்து விழும். அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறிய விதை இருக்கும். அந்த விதையை தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.

பாரிஜாத மலர் எனவும் அழைக்கப்படும் இந்தப் பூ குறித்து ஒரு புராணக் கதை கூறப்படுகிறது. பாரிஜாதம் என்ற இளவரசி, சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால், சூரியன் அவளை ஏற்கவில்லை. இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து இறந்தாள். இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்துதான் பவளமல்லி விருட்சம் உருவானது என்று வாயு புராணம் கூறுகிறது. சூரியன் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், இந்த விருட்சம் சூரியனைப் பார்த்து பூப்பதைத் தவிர்த்து, இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. இதனால்தான் இது, ‘வருந்தும் மரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. பவளமல்லி பூ, திருமாலுக்கு மிகவும் உகந்தது. பவளமல்லி வேரில் ஆஞ்சனேயர் குடியிருப்பதாக நம்பிக்கை.

தேவலோகத்தில் இருந்த பாரிஜாத மலரை சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ண பகவானிடம் கேட்க, ஸ்ரீகிருஷ்ணர் பவளமல்லி மரத்தைக் கொண்டுவந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம். ஆனால், மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்று கூறப்படுகிறது.

பவளமல்லியில் இருந்து நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்துக்குக்கான மருந்துகளைக் கண்டுபிடித்து உணர்த்தி இருக்கிறார்கள். பவளமல்லி மரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவளமல்லி சிறுநீரகத்தைக் காக்கக்கூடிய மருத்துவத்தன்மை கொண்டது. இது நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்தாகவும் செயல்படுகிறது. கால் மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. பவளமல்லி மரத்தின் வேரை மென்று தின்றால் பற்களின் ஈறுகளில் உருவாகும் வலி குணமாகும்.

விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். பவளமல்லி விதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை மறைந்து, முடி வளரும் என்று கூறப்படுகிறது! சாதாரணமாக வீட்டில் வளரக்கூடிய இந்த பவளமல்லி மரத்தில் பட்டு வீசும் காற்று ஆரோக்கியத்தைத் தந்து உடல் நலத்தை பாதுகாக்கக் கூடியதாகவும் விளங்குகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.