Breaking News :

Monday, May 05
.

காக்கைக்கு சாதம் வைத்தால் வேண்டிய வரம்?


தினமும் காக்கைக்கு சாதம் வைத்து இந்த மந்திரத்தை சொன்னால் வானத்திலிருந்து தேவர்களே வந்து உணவை உண்டு நம்மை வாழ்த்துவார்களாம்! அப்படி என்ன மந்திரம் அது?*

காக்கையைப் பித்ருக்களுக்கு இணையாக இந்து சமுதாயத்தில் போற்றிப் புகழப்படுகிறது. தினமும் காக்கைக்கு சாதம் வைத்து விட்டு பின்னர் நாம் உணவு அருந்துவது மரபாக இருந்து வந்தது. காலப்போக்கில் இந்நிலை மாறி குறிப்பிட்ட விசேஷ மற்றும் முக்கிய தினங்களில் மட்டும் காக்கைக்கு உணவு வைப்பதை தொடர்ந்து வருகிறோம். இப்படி காக்கைக்கு உணவு வைக்கும் பொழுது இந்த மந்திரத்தை கூறினால் வானத்து தேவர்களே வந்து அவற்றை உண்டு, நமக்கு வேண்டிய வரங்களை அருள்வதாக ஐதீகம் உண்டு. அந்த மந்திரங்களை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

ஒவ்வொரு நாளும் நாம் சாப்பிடுவதற்கு முன்னர் உணவு சமைத்த பின்பு முதல் உணவாக காக்கைக்கு தானம் கொடுக்க வேண்டும். காக்கைக்கு சாதம் வைத்த பின்பு நாம் சாப்பாட்டில் கையை வைத்தால் நமக்கு என்றென்றும் பித்ரு தோஷம் என்பதே ஏற்படாது. பித்ரு தோஷம் மட்டுமல்லாமல் காக்கைக்கு உணவு வைத்தால் பல்வேறு தோஷ நிவர்த்தி பெறலாம் என்கிறது ஜோதிடம். எனவே காலம் காலமாக நாம் பின்பற்றி வரும் இந்த மரபை தொடர்ந்து கடைபிடித்து வருவது நம் குலம் செழிக்க வழிவகுக்கும்.

வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு வைத்து பசியாறிய பின்பு நம் பசியைப் போக்கிக் கொண்டால் அதை விட புண்ணியம் என்ன இருக்க முடியும்? இந்த வகையில் குறிப்பிட்ட இந்த மந்திரங்களை நாம் உச்சரித்த பின்பு காக்கைக்கு சாதம் வைத்தால் பித்ருக்கள் அல்லாது, மேலிருந்து தேவர்களும், முனிவர்களும் வந்து அந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்வார்களாம். இதனை பலி மந்திரம் என்று கூறப்படுகிறது.

நீங்கள் சமைத்து முடித்த பின்பு கொஞ்சம் சாதத்தை இலையில் வைத்து அந்த இலையை ஒரு சிறிய தட்டில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பூஜை அறையில் அமர்ந்து கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அதன் பிறகு அந்த தட்டை எடுத்துக் கொண்டு போய் காகத்திற்கு உணவு படைக்க வேண்டும். காகத்தை அழைத்து உணவை எடுக்க செய்ய வேண்டும். காகம் உணவை எடுத்த பின்பு நீங்கள் வீட்டிற்குள் சென்று உணவருந்தலாம்.

மந்திரம்

பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன!
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா!!

வைணவ சமயத்தைப் பின்பற்றும் பெருமாள் பக்தர்கள் மேற்கூறிய இந்த மந்திரத்தை உச்சரித்து அவ்வுணவை காகத்திற்கு வைத்தால் நாரதர், அர்ஜுனர், மகாபலி, விபீஷணர், பீஷ்மர், கபிலர் ஆகியோர் அந்தப் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டு நீங்கள் கேட்ட வரத்தை வாரி வழங்குவார்களாம்.

மந்திரம்

பாண ராவண சண்டேஸ
நந்தி ப்ருங்கி ரிடாதய
மஹாதேவ ப்ரஸாதோயம்
ஸர்வே க்ருஹணந்து ஸாம்பவா:

சைவ சமயத்தை பின்பற்றும் சிவ பக்தர்கள் மேற்கூறிய இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு அந்த உணவை காகத்திற்கு கொண்டு போய் வைக்க வேண்டும். அவ்வாறு செய்ய வானத்திலிருந்து சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், ராவணன், பிருங்கி முனிவர், பாணாசுரன் ஆகிய சிவனடியார்கள் இறங்கி வந்து அந்த உணவை ஏற்றுக் கொண்டு, நீங்கள் வேண்டிய வரங்களை வாரி வழங்குவார்கள் என்பது நியதி. தத்தம் குல வழக்கத்தின்படி மந்திரத்தை உச்சரித்து தினமும் காக்கைக்கு உணவு படைத்து தேவாதி தேவர்கள் உடைய ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.