Breaking News :

Thursday, December 26
.

மர வழிபாடு ஏன்?


முற்காலத்தில் மக்கள் இயற்கையை கடவுளாக பாவித்து வழிபட்டு வந்துள்ளார்கள்.  நீர், நெருப்பு ஆகாயம் என அனைத்தையும் இறைவீகமாகவே கருதியவர்கள் ஆலயங்களில் காணப்பட்ட ஸ்தல விருட்ஷங்களையும் கடவுளின் அவதாரங்களாகவே கருதி ஆலயங்களில் அந்த மரங்களை வழிபட்டு வந்துள்ளார்கள். அதன் காரணம் ஒவ்வொரு ஆலயத்துக்கும் அதிகாரபூர்வமாக  ஒரு ஸ்தல விருஷம் இருந்துள்ளது என்பதினால் அந்தந்த தல விருட்ஷங்கள் அங்குள்ள தெய்வத்துடன் சம்மந்தப்பட்டதாக இருந்துள்ளது என்ற நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தது. இதுவே பின் காலத்தில் இயற்கை வழிபாடு என  உருமாறியது.

”ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள தலவிருட்ச மரங்களின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், உச்சிப் பகுதியில் சிவன் என மும்மூர்த்திகளும் குடியிருப்பர். அதன் கிளைகளிலும் இலைகளிலும் அவர்களால் படைக்கப்பட்ட தேவ, தேவதைகள் வசிக்கின்றனர். தெய்வங்கள் அந்த மரத்தில் காலைப் பொழுதில் தங்கி இருக்கின்றனர். மாலைப் பொழுதில் அவர்கள் சென்ற பின் சித்தர்களும், யட்சர்களும் அதில் வந்து தங்கிடுவர்” என்கிறது  கருடபுராணம்.

மர வழிபாடு என்பது காலம் காலமாக இருந்துள்ளது.  முன் ஒரு காலத்தில் மர  வழிபாட்டின் தத்துவம் என்னவென்றே தெரியாமல் இருந்த மக்கள் பின்னாட்களில் குருமார்களும், பெரியோர்களும் செய்து வந்திருந்த போதனைகளினால் ஈர்க்கப்பட்டு பசுமையான மரங்களில் தெய்வங்கள் குடியுள்ளதாக நம்பி  மர வழிபாட்டை கடைப்பிடித்து வந்தார்கள். அதன் இன்னொரு முக்கியமான காரணம் முன்காலத்தில்  நாட்டுப்புறங்களில் இருந்த ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும்  மரங்களின் அடியில் அமைந்து  இருந்ததினால் மரங்கள்  தெய்வீகத் தன்மைகளை கொண்டவையாக உள்ளன என்பதாக மக்கள் நம்பினார்கள். மர  வழிபாடு காலப்போக்கில் இயற்கை வழிபாடு என்பதாக கருதப்பட்டது.

அனைத்து மரங்களும் தெய்வங்களுடன் சம்மந்தப்பட்டது இல்லை. சில மரங்கள் மட்டுமே சில தெய்வங்களுக்கு உகந்த மரங்கள். இவற்றில் வினாயகருக்கு உகந்ததாக அரச மரம், மாரியம்மனுக்கு உகந்ததாக வேப்ப மரம், சிவபெருமானுக்கு கடம்ப மரம் அல்லது வில்வ மரம் மற்றும் தத்தாத்திரேயர் மற்றும் லஷ்மிக்கு நெல்லி மரம் போன்றவை உண்டு. பழனியில் உள்ள திரு ஆவினன்குடி முருகன் ஆலயத்தின் தல மரம் நெல்லி என்கிறார்கள். பல ஆலயங்களிலும் வில்வம் மற்றும் வன்னி மரமே ஆலயத்தின்  தல மரங்களாக உள்ளன. அவற்றை போல பெருமைக் கொண்டது பனை மரம் ஆகும்.  இலங்கையில் தான் முருகப் பெருமானின் மனைவியான வள்ளி தேவியும் வேடர்களால் வளர்க்கப்பட்டவள் என்பதாக புராண  வரலாறும் உள்ளது.  பனை மரத்தடியில்தான் முருகனும் வள்ளியும் தமது காதலை வெளிப்படுத்தினார்கள்.

ஆகவே வேடர்கள் பனை மரத்தை வணங்கியதின் மூலம்  அவர்கள்  முருகப் பெருமானை வணங்கி வந்தவர்கள் என்பது புரிகிறது. ஆகவே வேடர்கள் வணங்கி வந்திருந்த பனை மரம் முருகனுக்கும் உகந்த மரம் என்பதாகிறது. அதனால்தான்  சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையை ஆண்டு வந்திருந்த பாண்டுரங்க அபயன் என்பவர் ‘வேட்டைக்காரர்களுக்கு மரியாதை தரும் வகையில் பனை மரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது அரண்மனையில் பனை மரங்களை வைத்ததாக’ மகாவம்சம் எனும் நூலில்  கூறப்பட்டு உள்ளது. திருப்பனந்தாள், திருப்பனங்காடு, திருப்பனையூர், திருமழல்பாடி, திருக்குறுங்குடி போன்ற ஆலயங்களில் பனை மரமே ஆலயத்தின் தல மரம்  ஆகும். சங்க இலக்கியங்களான அகநானூறு மற்றும் நற்றிணை போன்ற நூல்களிலும் மர வழிபாட்டை மேன்மைப்படுத்தும் பாடல்கள் உண்டு.

பலரும் நினைப்பது போல ஆலயங்களில் உள்ள மரங்களில் மட்டுமே தெய்வங்கள் குடி உள்ளன என்ற நம்பிக்கை சரியானது அல்ல. மற்ற இடங்களில் உள்ள  வேறு சில மரங்களும் தெய்வங்களின் அவதாரங்கள் குடி உள்ள மரங்கள் ஆகும். நமது விதியை நிர்ணயிக்கும் நட்ஷத்திரங்களின் அதிபதி தேவ, தேவதைகள் வசிக்கும் இடமும் மரங்கள் ஆகும்.  இவை அனைத்தையும் அறியாமலேயே ஆலயத்தில் உள்ள  மரங்களையும், அவற்றைத் தவிர வேப்ப மரம், ஆல மரம் மற்றும் அரச மரம் போன்ற மூன்றையும் மட்டுமே தெய்வீக மரங்களாகக் கருதி பெரும்பாலான  மக்கள் வழிபட்டு  வந்துள்ளார்கள். நட்ஷத்திரங்களின்  அதிபதி தேவதைகள் உள்ள மரங்கள் பற்றிய செய்தியை அதிக மக்கள்  உணர்ந்திருக்கவில்லை.

நட்ஷத்திரங்களின் அதிபதியானவர்கள்  தேவ, தேவதைகளா? ஒவ்வொரு நட்ஷத்திரத்துக்கும் உரிய அதிபதி தேவதைக்கு  தனிப்பட்ட மரம் உண்டா?,  அதில்தான் நட்ஷத்திரங்களின் அதிபதிகளான தேவ, தேவதைகள் வசிக்கிறார்களா என ஒருவர் வியப்பு அடையலாம். அவை உண்மையே. ஒவ்வொரு நட்ஷத்திரத்துக்கும் ஒரு அதிபதி தேவதை உண்டு. அந்த ஒவ்வொரு அதிபதி தேவதைக்கும் ஒரு தனி மரம் உண்டு. அந்த மரமே ஒருவரது நட்சத்திர மரமும் ஆகும். அதன் பின்னணி என்ன?

இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது பரப்பிரும்மம் என்ற சக்தியில் இருந்து முதலில் வெளி வந்தவர்கள் மூன்று கடவுட்களான பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் என்பவர்களே. மற்ற அனைத்துக் கடவுட்களுமே அவர்களுடைய சக்தியினால் வெளி வந்த அவதாரங்கள்தான். அது போலவேதான் 27 நட்ஷத்திரங்களும், அவற்றுக்கான அதிபதி தேவ, தேவதைகளும் பல நிலைகளில் உருவான பரப்பிரும்மனின் சக்திகளே. அவர்கள் அனைவருமே யாரால் படைக்கப்பட்டார்களோ அந்த தெய்வத்தின் தூதுவர்களாக உள்ளவர்கள்.  ஆனால் அவற்றுக்கு என தனிப்பட்ட சக்திகள் எதுவும் கிடையாது என்பதினால் அந்த தேவதை அவதாரங்களுக்கு அவற்றைப் படைத்த தெய்வங்கள் சில விசேஷ  சக்திகளை கொடுத்துள்ளார்கள்.  அந்த தேவதைகள்  கொண்டுள்ள  அனைத்து சக்திகளுமே பரப்பிரும்மனால் படைக்கப்பட்ட மூன்று கடவுட்களான பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் போன்றவர்களின் சக்திகளுக்கு உட்பட்டவையே.

பிரபஞ்சம் படைக்கப்பட்டவுடன் இருபத்தி ஏழு நட்ஷத்திரங்களையும் படைத்து அந்தந்த நட்ஷத்திரங்களுக்கும்  அதிபதிகளாக  இருபத்தி ஏழு அதிதேவ, தேவதைகளும் படைக்கப்பட்டார்கள். அப்படி படைக்கப்பட்ட தேவ, தேவதைகளும்   பூலோகத்தில் சென்று மக்களின் கண்களுக்குப் புலப்படாமல் தங்கி இருந்து மனித குல மேம்பாட்டுக்கு வழி காட்டுமாறு உபதேசிக்கப் பட்டார்கள்.  பூலோகத்தில் வந்து தங்கி இருக்க வேண்டிய நிலையில் அனுப்பி வைக்கப்பட்ட  தேவ, தேவதைகள்  எங்கு சென்று  தங்க முடியும்?  எனவேதான் அவை பூலோகத்தில் வந்ததும் தங்கி இருக்க சில மரங்களும் பூலோகத்தில் படைக்கப்பட்டன. அந்த மரங்களில் குடி உள்ள நட்ஷத்திரங்களின் தேவதைகள் தமது ஸ்வாச உணர்வுகளையும், தன்மைகளையும்  அந்த மரத்தை சுற்றி வெளியிட்டுக் கொண்டே இருப்பதினால் அந்த மரங்கள் தெய்வீக சக்தி கொண்ட தேவதை மரங்கள் ஆயின.

அந்த ஸ்வாச உணர்வுகளையும், தன்மைகளையும்தான் ஜீவ சக்தி என்பார்கள். தேவதைகள் தமது ஸ்வாச உணர்வுகளையும், தன்மைகளையும் அதாவது ஜீவ சக்தியை அந்தந்த மரங்களின் இலைகள் மூலமும், மரங்களின் மரப்பட்டைகள் மூலமும் வெளிப்படுத்திக் கொண்டே உள்ளன.  அதைப் போலவேதான் தெய்வங்களும் பூலோகத்தில் வந்து பல்வேறு அவதாரங்களில் தங்கி இருந்தபோது அவர்கள் மரங்களின் அடிகளில் தங்கி இருந்தே தவம் செய்து தமது சாபங்களை விலக்கிக்  கொண்டார்கள். அப்போது அவர்கள் தம்மை சுற்றி தமக்கு பாதுகாப்பாக இருக்க தமது சக்திகளை அந்த மரங்கள் மூலமே வெளியிட்டு உள்ளார்கள். அதனால் அந்தந்த தெய்வங்கள் தவம் இருந்த மரங்கள் தெய்வீக மரங்கள் ஆயிற்று.  பின்னர் அந்த குறிப்பிட்ட அவதார தெய்வத்தின் பல ஆலயங்களில் அந்த குறிப்பிட்ட மரங்களின்  பிரிவே தல மரங்கள் ஆயின.

அப்படி என்றால் மரங்கள் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தனவா என்ற கேள்வி எழலாம். மரங்களுக்கு காந்த சக்தி அதிகம் உண்டு. அவற்றுக்கும் ஜீவ சக்திகள் உண்டு. அந்த ஜீவ சக்திகளை அந்தந்த மரங்கள் அவற்றின் வேர்ப்பகுதிவரை  அழியாமல் வைத்திருக்கும். வேரும் வளர வளர அந்த ஜீவ சக்திகளும் பெருகிக் கொண்டே இருக்கும்.  இதனால்தான் தெய்வங்கள் பூமிக்கு வந்து தவம் இருந்த நிலையில் தமது சக்திகளை மரங்களுக்குள் விட்டுச் சென்றார்கள். அந்த சக்திகளை அந்தந்த மரங்கள் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டன. இந்த  உண்மைகளின்  காரணமாகவே நட்சத்திர அதிபதி தேவதைகளையும் மரங்களில் வசிக்க ஏற்பாடு செய்து, அந்த மரங்களில் அந்தந்த நட்ஷத்திரங்களின் ஜீவ சக்தியை ஊட்டினார்கள். இதனால்தான் ஒருவரை வாழ்த்தும்போது   ‘உன் பெருமை  விருட்ஷம் போல வளர வேண்டும்’ என்பார்கள்.

நட்ஷத்திரங்களும், அவற்றுக்கான மரங்களும் படைக்கப்பட்டப் பின் அவற்றுக்கு  முன்னால்  உருவாக்கப்பட்ட அனைத்து மனிதர்களுக்கும் பஞ்ச பூத சக்திகளை உள்ளடக்கி குறிப்பிட்ட ஸ்வாச உணர்வுகளும், உயிர் தன்மைகளும் தரப்பட்டு  அவர்கள்  27 தனித் தனி தன்மைகளைக் கொண்ட மனிதர்களாகவும் பிரிக்கப்பட்டார்கள்.  லட்ஷக்கணக்கிலான அணுக்களால் பின்னப்பட்ட அந்த  உணர்வுகள் எனும் ஜீவசக்தியானது  அந்தந்த மனிதர்களை சுற்றிக் கொண்டே இருக்கும். அந்த ஜீவசக்தியே ஆரா, அதாவது ஒருவரை சுற்றி  இருக்கும் ஒளிக்கற்றைகள் போலவே அவர்களை சுற்றிக் கொண்டு இருக்கும்.  அந்த  மூலத் தன்மைக் கொண்ட ஜீவசக்தியானது  நீடிக்கும்வரை அவர்கள் நல்ல தன்மையுடன், ஆன்மீக எண்ணங்களுடன் இருப்பார்கள். தீமைகளை செய்ய அஞ்சுவார்கள், நியாய உணர்வுகளும், மனசாட்சியும் அவர்களிடம் மேலோங்கி இருக்கும். அவர்கள் அன்பு கொண்டவர்களாக, தியாக உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆரோ போல மனிதர்களை சுற்றி உள்ள ஜீவசக்தியான ஸ்வாச  உணர்வும், தன்மைகளும்
மனிதர்களை கட்டுப்படுத்தும் விதத்தில் படைக்கப்பட்ட 27 நட்ஷத்திரங்களுக்கும் அவற்றின் அதிபதி தேவ, தேவதைகளுக்கும் அதே மனிதப் பிரிவினரின் ஜீவ சக்திகளும் தரப்பட்டிருந்தன என்பதினால் அந்த  குறிப்பிட்ட ஸ்வாச உணர்வுகளையும், உயிர் தன்மைகளையும்  கொண்டிருந்த மக்கள் பாவ காரியங்களில் ஈடுபடத் துவங்கியவுடன்,  அவர்களது  தனிச் சிறப்புத் தன்மைக் கொண்ட, இயற்கையாக கொடுக்கப்பட்டிருந்த ஜீவ சக்திகளும் அழியத் துவங்கி, பாவாத்மாக்கள் அவர்களை சுற்றித் திரியத் துவங்கும். அவர்களிடம் இருந்து தன்னியல்பாக உருவாக்கப் பட்டிருந்த  அந்த ஒளிக்கதிர்கள் அதாவது ஆரோ போன்றதும்  அழியத் துவங்கும்.

இதனால் அவற்றைக் கண்டு வெறுப்படையும்  அவர்களை சார்ந்த நட்சத்திரங்கள் அவர்களை விட்டு விலகிச் செல்லத் துவங்க, அந்த நட்சத்திரக் குடும்பத்தை சார்ந்த மக்கள் மேலும் மேலும் தீய சக்திகளினால் பிடிக்கப்பட்டு மேலும் மேலும் பாவங்களை செய்தபடி இருப்பார்கள்.  அப்படி என்றால் அந்த நிலையை எப்படி மாற்றி அமைப்பது? அதை யார் செய்வார்கள்? அவர்களுக்கு இருக்க வேண்டிய அவர்களது நிஜமான,  தூய்மையான  ஜீவ சக்திகளை எப்படி மீட்டுத் தர இயலும்?

அந்த காரியத்தை செய்ய முடிந்தவை  அந்தப் பிரிவு மக்களை கண்காணிக்கும்  தேவ, தேவதைகள்தான். அவர்களாலேயே தமது பிரிவை சேர்ந்த மனிதர்களின் உண்மையான ஸ்வாச உணர்வுகளையும், உயிர் தன்மைகளையும் மீண்டும் உயிர்பித்துத் தர முடியும்.  அதற்கு மனிதர்கள் செய்ய வேண்டிய ஓரே வழி  என்னவென்றால் அவர்கள் அந்த தேவ தேவதைகளின்  அருளைப் பெற முயல வேண்டும். அந்த தேவ, தேவதைகளின் அருளை அவர்களால் எப்படிப் பெற முடியும்?

அது மிகவும் சுலபமானது. அந்த தேவதைகள் குடி இருக்கும்  மரங்களின் அடியில் சென்று அதன் அடியில் நின்றிருந்தவாறு அந்த மரத்தின் தேவதைகளை ஆராதிப்பதின்  மூலமும், அங்கு அந்த தேவதைகளை துதிப்பதின் மூலமும் தாம் அறியாமையினால் செய்து வரும் பாவங்களின் தீய பலாபலன்களைக் குறைத்துக் கொள்ள முடியும்.  நடுவில் தாம் இழந்திருந்த தமது உண்மையான ஜீவசக்தியை மீண்டும் உயிர்பிக்க முடியும். அந்த மரங்களை வணங்கித் துதிப்பதின் மூலம் அதை எப்படி அடைய முடியும்?

குறிப்பிட்ட ஜீவ சக்திகளை கொண்ட  தேவதைகள் எந்த  மரத்தில் குடியிருக்குமோ அவற்றின் ஜீவ சக்திகள் அந்த மரத்தில் இருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கும். அந்த ஸ்வாச  உணர்வுகளும் தன்மைகளும் அந்த மரத்தில் இருந்து வீசிக்கொண்டே இருக்கும்.  அப்படி மரங்கள் மூலம் தேவதைகளினால் வெளிப்படுத்தப்படும் கதிவீச்சுக்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி அதே தன்மைகள் கொண்ட மனிதர்களை சுற்றி உள்ள ஒளிக் கற்றைகளுக்குள்ளே உள்ளே  மட்டுமே ஊடுருவிச் செல்ல முடியும் என்பது நியதி ஆகும்.

ஆகவேதான் அந்த மரத்தடியில், அந்த நட்சத்திரப்  பிரிவை சார்ந்த மனிதர்கள் வந்து அந்த மரங்களை வணங்கி துதிக்கும்போது  அதில் குடி உள்ள தேவதைகள் அந்த மனிதர்களை சுற்றி இருக்க வேண்டிய லட்ஷக்கணக்கிலான அணுக்களால் பின்னப்பட்ட உண்மையான  ஸ்வாச உணர்வுகளும், உயிர் தன்மைகளும் குறைந்து இருப்பதையும், அந்த இடங்களில் பாவ அணுக்கள் நல்ல அணுக்களுடன் கலந்து சுற்றித் திரிவதையும், அதனால்தான் அந்த மனிதர்கள் தம் உணர்வின்றி, பாவ காரியங்களில் ஈடுபடுவதையும் உணர்ந்து கொண்டு, தன்னை நாடி வந்து தமது தொல்லைகளைக் களையுமாறு வேண்டி வழிபடும் தமது பிரிவு மக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாவங்களின் தாக்கத்தைக் குறைக்கும்  வகையில் அந்த மரத்தில் இருந்து அவர்களுக்கு தேவையான ஸ்வாச உணர்வுகளையும், தன்மைகளையும் வெளிப்பட வைக்கும்.  அந்த தன்மைகள் அந்த  மனிதர்களை சுற்றி உள்ள ஒளிக்கற்றைக்குள் புகுந்து அங்கு குடியேறி உள்ள  தீய அணுக்களை துரத்தி அடித்துத் துரத்திவிட்டு அவர்களை சுற்றி உள்ள ஒளிக்கதிர்களை மீண்டும் உண்மையான தன்மையை கொண்ட ஜீவசக்தியின் அணுக்களால் நிறப்பி   விடும்.

இப்படியாக ஒவ்வொரு முறையும் அந்தந்த மனிதர்கள் தமக்கு உரிய நட்சத்திர மரத்தின் அடியில் சென்று அவற்றை வலம்  வந்து வணங்கித் துதிக்கையில் அவர்களை சுற்றி உள்ள தீய அணுக்கள் அந்த மரத்தில் குடியுள்ள தேவதைகளின் சக்தியினால் அழிக்கப்படுவதினால், அதனுடன் அந்த மனிதர்களின் பாவங்களின் தாக்கமும் விலகி விலகி அவர்களுடைய பாவச் சுமைகளும் குறையத் துவங்கும். அவர்கள் மீண்டும் புத்துணர்ச்சிப் பெறுகிறார்கள்.   ஒரு விதத்தில் பார்த்தால் மீண்டும், மீண்டும் தம்மை அறியாமலும், அறிந்தும் பாவச் செயல்களில் ஈடுபட்டு பாவங்களை சுமக்கும் மனிதர்கள், மர வழிபாட்டின் மூலம் தேவதைகளின் அருளைப் பெற்று அவற்றை மீண்டும், மீண்டும் அழித்துக் கொள்வது  ஏற்றத் தாழ்வு நிலை கொண்ட முடிவற்ற கடல் அலையைப் போன்றது என்றாலும்,  இப்படி செய்வதின் மூலம் ஒருவர் மரணம் அடையும் முன் தமது பாவங்களை ஓரளவு குறைத்துக் கொள்ள முடிகிறது என்பதினால்தான் தமது நட்சத்திரதுக்கு  ஏற்ற மரம் உள்ள இடத்தைக் கண்டுபிடித்து வருடத்துக்கு  ஒரு முறையாவது அந்த மரத்தை வணங்கித் துதிப்பது நலம் என்பார்கள்.

தமது நட்ஷத்திரத்துக்கு ஏற்ற மரங்களை வணங்கித் துதிப்பத்தின் மூலம்  அவரவர் பெற்று இருந்த பூர்வ ஜென்மப் பாவங்கள் குறையும், கடன் தொல்லை நீங்கும், தீராத நோய் விலகும். மேலும்  தம் நட்சத்திர மரத்திற்கு நீர் ஊற்றி வழிபாடு செய்யும் பொழுது அவரவர் ஊற்றும் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு அந்த மரம் புதிய இலைகளைத் துளிர்க்க வைக்கும்போது அந்த நீரை ஊற்றி ஆராதித்தவர்களின் குடும்பமும் செழிக்கும் என்பதெல்லாம் நம்பிக்கை ஆகும்.  அந்த மரங்கள் அவரவர் ஊற்றும் தண்ணீரை உறுஞ்சுவது அவரவர் செய்த பிரார்த்தனைகளை அந்த மரத்தில் குடியுள்ள அவரவர் நட்சத்திர தேவதைகள் ஏற்றுக் கொண்டு அருள் புரிய காத்திருக்கும் நிலை ஆகும்.

அந்தந்த நட்ஷத்திரத்தை  சேர்ந்தவர்கள், தமக்கே உரிய அந்தந்த தலமரங்களின் காய்ந்த குச்சிகள், இலைகள் இவற்றைச் சேகரித்து தங்கள் வீட்டின் நுழை வாயிலில் கட்டி வைத்தால்  பில்லி, சூன்யம் மற்றும் ஏவல் முதலிய தொல்லைகள் அவர்கள் வீடுகளுக்குள்  வருவதில்லை என்ற நம்பிக்கையும்  உண்டு.  அதைப் போலவே அந்தந்த மரங்களின் குச்சிகளை பணப்பெட்டியில் வைத்திருந்தாலும் செல்வம் அழியாமல் மாறாக நிலையாக இருக்கும் என்பார்கள். அதன் காரணமும் அவற்றில் குடி உள்ள தேவதைகளின் ஸ்வாச  உணர்வுகளும் அதன்  தன்மைகளும்தான்.

இதற்காகத்தான் இருபத்தி ஏழு நட்ஷத்திரங்களையும் மும்மூர்த்திகளே படைத்தார்கள். மனித பிறவிகளையும்  இருபத்தி ஏழு குணாதிசயங்களைக் கொண்ட பிரிவினராக  பிரித்து அந்த 27 பிரிவினரை பூலோகத்தில் கண்காணித்து, நல்வழிப்படுத்தும் பணியில் தாம் முதலில் படைத்த 27 நட்ஷத்திரங்களின் அதிபதியாக அதே மரங்களின் ஸ்வாச  உணர்வுகளும், தன்மைகளும் கொண்ட தேவ, தேவதைகளையும் காவல் தேவதையாக அமைத்தார்கள். அந்த தேவ, தேவதைகள் அந்தந்த மனிதர்களின் பாவ புண்ணியங்களை கண்காணித்தவாறு இருந்து கொண்டு, அவர்கள் பாவ காரியங்களை செய்யும்போது அவர்களை திருத்தி நல்வழியில் அழைத்துச் செல்ல முயலும்.

அந்த தேவதைகளுக்கு சில சக்திகளும் கொடுக்கப்பட்டு இருந்தன என்பதை ஏற்க்கனவே கூறி உள்ளேன். அந்த விசேஷ சக்தி மூலம் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களையும், சிறு பாவங்களினால் ஏற்படும் தோஷங்களையும் அந்த தேவதைகளினால் விலக்க முடியும் என்பதே அவற்றுக்கு கொடுக்கப்பட்ட விசேஷ சக்தியாகும். அது மட்டும் இல்லாமல் அந்த தேவதைகள் அந்த மனிதர்களின் பூர்வ ஜென்ம புண்ணியப் பலன்களுக்கு ஏற்ப அவர்களுடைய வேண்டுதல்களையும் தம்முடைய அதிபதி தெய்வத்திடம் எடுத்துச் சென்று மனிதர்களின் குறைகளைக்  களைகின்றனவாம்.  இதனால்தான் தெய்வத்திடம் இருந்து நல்ல அருளைப் பெற முதலில் அவரவர்களது நட்ஷத்திரங்களின் அதிபதி  தேவதைகளை மரவழிபாடு மூலம் ஆராதிப்பது அவசியம் ஆகும். அதை அவரவர் வணங்க வேண்டிய மரங்களை வணங்கித் துதிப்பதின் மூலம் மட்டுமே செய்ய இயலும்.

நட்சத்திரங்கள் படைக்கப்பட்டபோது  முதலில் வெளிவந்தது அஸ்வினி. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தவையே பரணி, கிருத்திகை, ரோஹினி , மிருச்சிகம், திருவாதரை, புனர்பூசம் , பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாஹம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரத்தாதி, உத்திரட்டாதி, மற்றும் ரேவதி போன்றவை ஆகும்.

ஒரு விஷயத்தைப் பார்த்தோமானால் பெரும்பாலான பக்தர்கள் ஆலமரம், அரச மரம் மற்றும் வேப்ப மரம் இவற்றை மற்றுமே பூஜைக்கு உகந்த மரங்களாக கருதி அவற்றை பிரதர்ஷணம்  செய்வதும், அவற்றின் அடியில் பூஜிப்பதையும் நாம் பார்க்கிறோம்.  அதுவும் இந்த மூன்று மரங்களும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து இருந்தால் அது பூஜிக்கத்தக்க இடமாகவே பாவிக்கப்படுகிறது. ஆலயங்களுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் ஆலயத்தின் ஸ்தல விருட்ஷம் என்ற பொருளிலேயே மரங்களைப் பார்க்கின்றார்களே தவிர  வேறு பல மரங்களுக்கும் தெய்வீகத் தன்மை உண்டு என்பதை அறிந்து கொள்ளவில்லை.

நம் அனைவரும் நமது ராசிபலனுக்கு ஏற்பவும், நட்ஷத்திரங்களுக்கு ஏற்பவும் குறிப்பிட்ட ஆலயங்களுக்கு சென்றும், குறிப்பிட்ட தெய்வங்களுக்கும் ஆராதனை செய்து வணங்குகிறோமே தவிர, அதைப் போலவே நமது ஜன்ம நட்ஷத்திரங்களுக்கும் ஏற்ப மரங்கள் உள்ளன, அவற்றை வணங்குவதின் மூலம் பல பாபங்களை விலக்கிக்  கொள்ளலாம், பல நன்மைகளை அடையலாம் போன்ற உண்மை பலருக்கும் தெரியாது.  இதன் காரணம் ஜென்ம நட்ஷத்திரங்களுடன் சம்மந்தப்பட்ட மரங்களின் தெய்வீகத் தன்மைக் குறித்த நூலேடுகள் மற்றும் புராணங்கள் அதிகம் காணப்படவில்லை. இரண்டாவது காரணம் ஸ்தல விருட்ஷங்கள் எனப்படும் மரங்களின் மகிமைகளைக் குறித்தும் ஆலயங்களில் விவரங்கள் காணப்படவில்லை.

மரவழிபாட்டை எப்படி செய்வது ?  தமது ஜென்ம நட்ஷத்திரத்துக்கு உகந்த மரத்தை தெரிந்து கொண்டு, வருடத்துக்கு ஒரு முறையாவது அங்கு சென்று அந்த மரத்துக்கு குங்கும சந்தனம் இட்டு, பூக்களை அதன் மீது தூவி,  அந்த மரத்தை பதினோரு  முறை பிரதர்ஷனம் செய்து, அதன் வேருக்கு பாலையும் நீரையும் ஊற்றி அபிஷேகம் செய்து, அதை நமஸ்கரித்துவிட்டு அங்குள்ள தேவதையிடம் தமது பாவங்களைக் களைந்து  தமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டு வர வேண்டும்.  பூஜை செய்து வழிபட்டதும்  அந்த மரத்தின் அடியில் அல்லது  அதன் பக்கத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும். அப்போதுதான் அவரவர் இழந்திருந்த ஜீவசக்தி மீண்டும் அவர்களுக்கு அந்த மரங்களில் குடியுள்ள தேவதைகள் அந்த மரத்தின் இலைகள் மற்றும் கிளைகள் மூலம் வெளிப்படுத்தும் அதிர்வலைகளில் இருந்து கிடைக்கும். அதன் மூலம் அவர்களை சூழ்ந்திருந்த பாவங்களின் சுமைகளும் விலகத் துவங்கும். இதையே நட்சத்திர மர வழிபாடு என்கிறோம்.

ஆனால் அத்தகைய புனிதமான மர வழிபாடான இயற்கை வழிபாடு என்பதை தற்காலத்தில் ஒரு சுற்றுலா பயணம் போல மாற்றி அமைத்து  பயணிகளை பொழுதுபோக்குக்காக எங்காவது வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு உணவருந்தி, ஓய்வெடுத்து திரும்ப அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.  இயற்கை வழிபாடு எனும் பெயரில் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்பவர்கள் இயற்கை வழிபாட்டின் உண்மையான காரணத்தையும், தத்துவத்தையும், அதனால் விளையும் நன்மைகளையும், அங்குள்ள மரங்களின் தன்மைகளையும், யார் யார் அங்குள்ள மரங்களில், எந்த மரங்களை வழிபட வேண்டும் என்பதையும் வந்துள்ளவர்களுக்கு  எடுத்துக் கூறி  நல்வழிக் காட்டாமல் பொழுதுபோக்கு அம்சமாகவே அதை  மாற்றி அமைத்து விட்டார்கள். இதனால்தான் இயற்கை வழிபாட்டின் முக்கியமான மர  வழிபாடு பற்றி பலருக்கும் தெரியாமல் உள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.