அந்த ஊரில ஆச்சி இட்லிக்கடை எல்லா ருக்கும் தெரிஞ்ச கடை. ஏழ பாழை களுக் குன்னே நடந்துக்கிட்டு இருந்தகடை. அங்க ஏழைபாழைங்க கூடக் கொறைய இருந்தாலும் வாங்கிக்கிட்டு சாப்புடச்சொல்லும்
ஆச்சியோட கடை காலையில ஆறில இருந்து ஏழுமணிவாக்கில தொடங்கும். தொறந்த வன்ன வாரவுகளுக்கு தோசை அப்புறமா வடை இட்லி அப்புறம் பூரிக் கெழங்கு அதுக்கு காரச்சட்டினி சாம்பார் எல்லாம் குடுக்கும், வெல வெளியவிடக்கம்மி ஒரு இட்லி 7 ரூ வடை5 ரூதோசை 20 ரூ பூரி 20 ரூ நு வாங்கும்.
காசு குடுத்துட்டுச் சாப்புடுறவங்களும் இருப்பாங்க கடன் சொல்லிச் சாப்புடு றவங்களும் வருவாங்க. ஆச்சி ஆருக்கும் இல்லைன்னு சொல்லாது. அந்தக்கடையில ஒதவிக்கு வாவரவ கருப்பாயி. அது கடையில கூடமாட வந்து ஒத்தாசையா வேலை செய்யும். ஆச்சி அத வடை சுடச்சொல்லும். இட்லி எடுக்கச்சொல்லும். அதுக்குச் சம்பளம் 50 ரூ சாப்பாடு கணக்கில்ல
ஆச்சி கடை மொத்தமே4 மணி நேரம்தான். 11.00 மணிக்கிக் கடையச்சாத்திரும். அம்புட்டுத்தான் யாவாரமே. அதுல பொழப்ப ஓட்டிக்கிட்டு இருந்துச்சு. ஆச்சியோட மயன் அவனோட லீவு நாளுகள்ல வந்து கூட மாட இருப்பான். அவனுக்கு ஒரு கம்பெனில வேல அதநம்பிக்கலியாணமும் அவனுக்கு ஆச்சி பண்ணி வைச்சிருந்துச்சு. மருமகளும் குணசாளி தான் பொறுமையா வேலை செய்வா.இது நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு
ஆனா எல்லாமே அப்புடியே போய்கிட்டு இருந்தா அப்புறம் ஒலகம் என்னாகிறது. சோதனை வந்துச்சு. மொதல் சோதனை மகன் வேலை செய்யிறப்ப கால்ல அடிபட்டு நடக்க முடியாமப்போனதால வேலைக்கிப் போகமுடியல அவன் வேலை செஞ்ச கம்பெனில அவனோட அஜாக்கிரதையால தான் அப்படி ஆச்சு அதுனால இழப்பீடு இல்லை வேலைக்கிம் வர வேணாம்னு சொல்லிட்டாங்க
இப்ப மெயின் வருமானம் நின்ன நிலையில அவன் வேற வழியில்லாம கடைக்கி வந்துட்டான். ஏற்கனவே நடந்த யாவாரத்துல வந்த வருமானம் சொற்பம். அவன் சம்பளம் வாங்குனதால சரியாப்போச்சு. அது இப்ப நின்னவன்ன நெல தடுமாறிப்போச்சு. அதுனால வியாபாரத்தை விரிவு படுத்த ஆலோசனை செஞ்சி மத்தியானம் லெமென் சாதம் தயிர்சாதம் பிரிஞ்சு ரைஸ் வடைனு விரிவு படுத்துனாங்க. அது மொதல்ல நல்லாத்தான் போச்சு அப்புறம் டல்லடிக்க ஆரம்பிச்சது. பாதிநேரம் அதுவே எல்லாரும் சாப்புடுறமாதிரி ஆயிப்போச்சு.
”பட்ட கால்ல படும் கெட்ட குடியே கெடும்” நு சொல்லுறமாதிரி இவங்களுக்கு எதிர போட்டிக்கடை ஒன்னு தொறந்தாங்க. அதுல இவங்களை விடக்கம்மியா வெலை வச்சி விக்கவும் அது இவங்க வியாபாரத்தைப் பாதிச்சிச்சி. கொஞ்சம் கொஞ்சமா படுக்க ஆரம்பிச்சது. சரக்கு போட்டு ஓடுனாத்தான் இது மாதிரி கடைகளுக்கு லாபம். போட்ட சரக்கு நின்னுச்சின்னா படு நட்டம் ஆயிடும் அதுதான் ஆச்சிக்கி நடந்தது . சுத்தமாப் படுத்துருச்சு கடை வாடகைக்குக் கட்டு படி ஆகாததால கடைய மூடுற மாதிரி ஆயிப்போச்சு
கடைய மூடிட்டு அவங்க வீட்டு வாசல்லயே எடம் கொஞ்சமா இருந்ததால இட்லி தோசை மாத்திரம் விக்க ஆரம்பிச்சது ஆச்சி. வருமானம் போதல வாய்க்கும் கைக்கும் மா போச்சு. பல நேரங்கள்ல பட்டினி. நடுத்தரவர்கத்தின் கீழ்மட்ட ப் பிரதிபலிப்பா பிச்சை எடுக்க வேண்டியநிலை ஆனா அது சுய கெளவுரவம் தடுத்துச்சு.
என்னப்பா முருகா இப்படிச்சோதிக்கிறயேனு ஆச்சி அழுது பொலம்புச்சு. அப்புடி இருக்குறப்ப ஒருத்தர் வந்து ஆச்சிக்கிட்டப் பேசுனாரு. ”நீங்க கடைபோட்டிருந்தப்ப உங்க கடையில சாம்பார்சாதம் தயிர்சாதம் வாங்கிச் சாப்பிட்டுருக்கேன். நல்லா இருந்துச்சு நான் வருசா வருசம் பங்குனி உத்திரத்தன்னிக்கி திருப்ரோண்டத்தில மண்டவம் புடிச்சி ஆளு வைச்சி சமைச்சி அன்னதானம் பண்ணுவேன் இந்த வருசம் மண்டவத்துல வேலை நடக்குறதால மண்டவம் கெடைக்கல. எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா 20 படி சாம்பார்சாதாம் 20 படி தயிர்சாதம் பண்ணிக் குடுக்க முடியுமா? அப்புடிக்குடுத்தா நான் அதை மண்டவத்துமுன்னாடி பாக்குமட்டத் தட்டுல வைச்சி அன்னதானம் பண்ணிருவேன்” நு கேட்டார்
அப்ப ஆச்சியோட மயன் தயங்குனான் . ”நாம ரெண்டுகிலோ மூனுகிலோ சமைச்சித்தான் பழக்கம். 20 படி நமக்குபழக்கமில்லயே” நு
அதுக்கு ஆச்சி சொல்லிச்சி
” எல்லாம் ஒரு கணக்குத்தான் தாரளமாப் பண்ணலாம் தொணைக்கி ஆள் வைச்சிக்கலாம் நம்மலுக்கு முருகனாப்பாத்து ஒரு வழியத்தொறந்து விட்டுருக்கான். அதை விடக்கூடாது”ன்னு சொல்லிச்சி
சரிங்கையா பண்ணிக்குடுக்குறோம்னு அடவான்ஸ் வான்குச்சு ஆச்சி. ஆனா மறுபடியும் சோதனை. பங்குனி உத்திரத்துக்கு மொதநாள் சரியான காயச்சல். மகனுக்கு. என்ன பண்ணுறதுன்னு தெரியல பேசாம அட்வான்ஸ் திருப்பிக்குடுத்துறலாம்னு அவருக்கு ஆச்சி போன் பண்ணுச்சு
ஆனா அவர் பொலம்ப ஆரம்பிச்சிட்டாரு. ”இனிமேப் போய் எங்க நான் ஏற்பாடு பண்ணமுடியும். நேர்த்திக்கடன் நின்னு போயிரக்கூடாது. தயவு பண்ணுங்கன்னு” கெஞ்ச ஆரம்பிச்சிட்டாரு. வேற வழியில்லாம வேலையில ஆச்சி எறங்குச்சு. தொணைக்கி அந்த பழைய கருப்பாயியக் கூப்புட்டுக்கிச்சி கருப்பாயி புருசனும் தொணைக்கி வந்தாருமூச்சப்புடிச்சி ஒரு வழியா சமைச்சி முடிச்சாச்சி அதுல உப்பு புளி காரம் குத்து மதிப்பாப்போட்டுருந்துச்சு ஆச்சி. அன்ன தானம்றதால எச்சில் படாமச் சமைச்சிருந்துச்சு ஆச்சி . எல்லாத்தையும் ரெடி பண்ணின பின்னாடி ஒரு குட்டியானயில ஏத்திகொண்டுபோனாரு அவரு. கூடவே ஆச்சியும் போச்சு. சாமிக்கிப் படைச்சிட்டு எல்லாம் சரியா இருக்கான்னு பாக்கனும்னு படபடப்பு.
மண்டவத்துல வைச்சி பூசை பண்ணி காக்காக்கு வைச்சிட்டு அவர் சாப்பிட்டுப் பாத்துட்டு “ ஆச்சி தேவாமிர்தமா இருக்கு” நு சொன்னவன்ன உசிறு வந்துச்சு ஆச்சிக்கு அவர் பேசுனதுக்கு மேலயே குடுத்தார். ஆச்சிக்கு கண்ணு கலங்கிடுச்சு.
அவரோட நண்பர்கள் நிறையா வந்திருந்தாங்க . அவங்களும் சாப்புட்டுட்டுப் பாராட்டுனாங்க
அப்ப அவர் சொன்னார்” என்னோட நண்பர்கள் வீட்டுச்சின்னச் சின்ன விசேசங்களுக்கு டிபன் அப்புறம் 50 சாப்பாடு மாதிரி பண்ணித்தரமுடியுமா நான் சொன்னா அவங்க கேப்பாங்க.”
” ஓ தாரளமா செய்யலாம் “ நு ஆச்சி சொல்லவும் அவர் சொன்னார் இனிமே உங்க பிசினஸ் மாறப்போகுது. நீங்க கேட்டரிங்க் சர்வீஸ்னு ஆரம்பிங்க. ஒங்ககிட்ட இருக்குற தெறமைக்கு கலியாணத்துக்கே பண்ணலாம் அதுக்கு அச்சாரமா என்னோட மகன் கலியாணத்துக்கு நீங்கதான் பண்ணுறீங்க உங்களால முடியும் இப்பவே அட்வான்ஸ் தாறேன்னு ஒரு தொகையக் குடுத்தார்.
ஆச்சி அதுக்கப்புறம் பெண்களை சேத்துக்கிட்டு கேட்டரிங்க தொழில ஆரம்பிச்சது என்ன பேரில வைக்கலாம்னு யோசனை செஞ்சப்ப ஆச்சிக்கு மொதல் மொதல்ல ஆடர் குடுத்த அந்த ந்ல்லவர் பேரான ஆறுமுகம் என்ற பேரிலயே ஆரம்பிச்சது. “ ஆறுமுகம் கேட்டரிங் சர்வீஸ்” நு ஆரம்பிச்சது
அந்த ஆறுமுகமும் சும்மா இல்ல. இணையத்தளத்துல பதிவு போட்டார் இது பத்தி. நண்பர்களை அதில ரிவ்யூ போடச்சொன்னார். அதுல ”ஆறுமுகம் கேட்டரிங் சர்வீஸ்” பிரபலயம் ஆயிருச்சு. ஆடர்கள் வந்து குவியத்தொடங்குச்சு.
இப்ப கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஊனமுற்ற வர்கள் இவங்களை அரவனைச்சி வேலை குடுத்துச்சு.
ஒரு நாள் அந்த ஊரில எதுத்தாப்புல கடை தொறந்த அந்த அம்மா வந்திச்சி. ஆச்சியோட வளர்ச்சியப்பாத்து அசந்திடுச்சு. அப்ப ஆச்சி கேட்டுச்சு கடை எப்படிப்போகுது ? நு அதுக்கு அந்தம்மா சொல்லிச்சி ”அங்க இப்ப மூனு கடை எங்களுக்கும் யாவாரமில்லாம மூடிட்டோம் ”நு
அப்ப ஆச்சி சொல்லிச்சி
” அந்த ஊர் சனத்தொகைக்கு ஒரு கடையே அதிகம் அவ்வளவுதான் அங்க யாவாரம். அதுனாலதான் நீயாவது பொழைச்சிக் கட்டும்னு மூடிட்டு வந்தேன்”
அந்தம்மா கேட்டிச்சி” தப்பா நெனைக் கலைன்னாஎன்ன மன்னிச்சி எனக்கு ஒரு வேலை போட்டுக்குடுங்க ஆச்சி ” நு
அதுக்கு ஆச்சி சொல்லிச்சி “ தப்பா நெனைக்க என்ன இருக்கு இது வியாபாரம் போட்டி இருக்கத்தான் செய்யும். ஆனா நீ யாவாரம் தொடங்குனதாலதான் நான் இங்க வந்து இந்த நெலமைக்கி ஒசந்துருக்கேன். நீயும் வா சேந்து ஒழைக்கலாம் சம்பாரிக்கலாம்” நு
அதைக்கேட்டுட்டு அந்த அம்மா கண்கலங்கி ஆச்சி கையப்புடிச்சிக்கிருச்சு. ”என் அம்மா மாதிரி நீங்க எப்புடி ஒங்களால இப்படி இருக்க முடியுது?”
அப்ப ஆச்சி சொல்லிச்சி ஒரு ஏழையோட பசியின் வலி இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். நு அப்ப ஆச்சி கண்ணுலயும் நீர் கோர்த்துக்கிச்சி தான் பசியோட இருந்த நாளுகளை நெனச்சி.
அ.முத்துவிஜயன்