கணவன் மனைவி இருவருக்குமிடையில் திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. நமது பெரியவர்கள் கூட "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்" என்று சொல்லக் கேட்டிருப்போம்.
இதற்கு காரணம், சரியான பரஸ்பர புரிதல் இல்லாமையே. புரிதல் இல்லாத நிலை தொடர்ந்தால் விவாகரத்து வரைக்கும் கூட செல்ல நேரிடும் . குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை வரும். அப்படி ஒரு நிலை வராமல் எப்படி தவிர்ப்பது என்பது பற்றி பார்ப்போம். ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள் சில ...
1. எழும்போதே ஒருவருக்கொருவர் புன்னகையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை.
2. வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம். வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா செல்லலாம்.
3. இருவரில் ஒருவர் தவறு செய்திருப்பின் அடுத்தவர் முன்னிலையில் அதனை சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்தாமல் தனிமையில் சுட்டிக்காட்டி விளக்கலாம்.
4. அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து ஆச்சர்யப்படுத்துங்கள்.
5. எப்போது பார்த்தாலும் செல்போனை நோண்டிக்கொண்டு அல்லது டிவி பார்த்துக்கொண்டோ இருக்காமல், கூடுமானவரை ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துப் பேசுங்கள்.
6. சமையல் முதல் EB பில் கட்டுவது என அனைத்து வேலைகளிலும் ஒருவருக்கொருவர் உதவுங்கள்.
7. சாப்பிடும் தருணங்களில் டிவி யில் கவனம் திருப்பாமல், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே சமையலை ருசித்து சாப்பிடுங்கள். அது எதிர் தரப்பினரை திருப்தியடையச் செய்யும்.
8. தனிமையான தருணங்களில் இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தலைகோதிவிடுவது, மடியில் தலை வைத்துப்படுப்பது, கை கோர்த்துக்கொள்வது போன்ற தொடுதல்கள் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.
9. எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்ற எதிர்காலக் கனவுகள் பற்றி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுங்கள்.
10. I love you அல்லது I miss you போன்ற க்ரீட்டிங் கார்டுகளை அவ்வப்போது பரிமாறிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது SMS. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இப்படி SMS அனுப்புங்கள்.
11. ஒருவரின் தேவைகள் என்னவென்று மற்றொருவர் கேட்கும் முன்பே, அதனைப் புரிந்துகொண்டு நிறைவேற்றுங்கள்.
12. வாதம் செய்யும்போதோ, அறிவுரை கூறும்போதோ, ஒருவர் சொல்வதை மற்றொருவர் கூர்ந்து கவனிக்க வேண்டும் சரியானதாக இருப்பின் ஈகோ பார்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
13. தனக்குப் பிடித்த விஷயங்களை இன்னொருவர் செய்யும்போது மனம் விட்டுப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பாராட்டுதல் அன்பை மேலும் வலுப்படுத்தும்.
14. ஏதாவது ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும்போது மற்றொருவரின் பார்வையில் இருந்தும் பார்த்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், தன் வாதம் தான் கடைசியாக இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.
15. வெளியூரில் இருந்தால், அலைபேசி மூலம் அவ்வப்போது பேசி அக்கறையை வெளிக்காட்டுங்கள்.
16. தங்கள் விருப்பங்களை மற்றொருவர் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அவசரப்படுத்தாதீர்கள். பொறுமை அவசியம். அதே போன்று நீ இப்படித் தான் இருக்க வேண்டுமென தன்னுடைய விருப்பங்களை அடுத்தவர் மேல் திணிக்கவும் கூடாது.
17. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுங்கள். சுய விருப்பு வெறுப்புக்களை தெரிந்துவைத்துக்கொள்வது மிக முக்கியம்.
18. எந்த சூழ்நிலையிலும் அவரவர்க்குரிய சுய மரியாதையை கெடுக்கும் வண்ணம் நடக்கக் கூடாது. நண்பர்கள் உறவினர்கள் போன்ற வெளியாட்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொள்ளுதல் கூடவேகூடாது.
19. பிறந்த நாள், திருமணநாள் போன்ற நாட்களை மறந்துவிடாமல் பரிசுப்பொருட்கள் தந்து ஒன்றாக நேரத்தை செலவழியுங்கள்.
20. தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், தன் மேலுள்ள குறைகளையோ அல்லது தவறுகளையோ ஒத்துக்கொண்டு மனமார மன்னிப்பு கேட்கப் பழகுங்கள்.
21. கணவனோ மனைவியோ தம்மிடம் தவறினை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கும்போது அவரைக் குத்திக்காட்டாமல் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டு சகஜநிலைக்குத் திரும்புங்கள்.
22. தினமும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளுங்கள். முத்தம் என்பது காமம் சார்ந்த விஷயமல்ல, அது காதலை வெளிப்படுத்தும் நிலைப்பாடு.
23. வீட்டில், குழந்தைகளுக்கு எதிரில் சண்டையோ வாக்குவாதமோ வைத்துக்கொள்ளாதீர்கள். குழந்தைகளிடமும் தன்மையாக இனிமையாகப் பேசுங்கள், பழகுங்கள்.
24. குழந்தைகளின் படிப்பு, எதிர்காலதிட்டம் ஆகியவற்றை இருவருமே கலந்து ஆலோசனை செய்யுங்கள்.
25. ஏதேனும் சந்தர்ப்பங்களில் பலவீனமாக உணர்ந்தீர்களானால் அதை தாராளமாக தன் துணையிடம் தெரிவித்து அவருடைய உதவியை ஈகோ பார்க்காமல் ஏற்றுக்கொள்ளலாம்.
26. உங்கள் இருவருக்குள் நடந்த சுவாரஸ்யமான கடந்தகால காதல் சம்பவங்களை அவ்வப்போது நினைவுபடுத்தி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள். இது அன்பு குறையாமல் இருக்க உதவும்.
27. மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துவைத்திருக்க வேண்டும். உடல் சார்ந்த நேரங்களில் கூட, காமத்தை விட காதல் பிரதானமாக இருக்க வேண்டும்..
28. சாதாரணமாக கை பிடித்து நடக்கும்போது கூட உனக்காக நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை அந்த பிடி ஏற்படுத்த வேண்டும்.
29. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறும்போது, உதாரணமாக தலைவலி என்று சொன்னால் “எனக்கு அதுக்கு மேல வலிக்குது“ என்று பதிலளிக்காதீர்கள். உண்மையான அக்கறையுடன் பணிவிடை செய்யுங்கள்.
30. கணவனோ/மனைவியோ அடுத்தவரின் குடும்பத்தாரை குறைக்கூறாதீர்கள். அது உங்களது குடும்பத்தினர் மீது அவருக்கு துவேஷத்தை ஏற்படுத்தும்.
31. ஒருவருக்கொருவர் அனாவசியமாக சந்தேகப் படாதீர்கள்.
32. ஒருவருக்கொருவர் காதலை வெளிக்காட்ட தயங்காதீர்கள். மனதிற்குள் வைத்து ஒளிக்கும் காதல் எதற்கும் பிரயோஜனப்படாது.
33. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆன்மிக உணர்வுக்கு உரிய மதிப்பளியுங்கள். இன்றைய சூழலில் இது மிகவும் முக்கியமான விஷயம். குறிப்பிட்ட கடவுளை வணங்கும்படியோ/ குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும்படியோ உங்கள் துணையை வற்புறுத்தாதீர்கள்
விட்டுக்கொடுப்பதும், புரிந்துகொள்வதும் அன்னியோன்னியத்தை வலுப்படுத்தும் ஆயுதங்கள்.
ஒருவருக்கொருவர் அவமானமோ வெட்கமோ பார்க்காமல் வெளிப்படையாக இருத்தல், ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும், பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விஷயங்களையும் ஒளிவுமறைவின்றி பகிர்தல் போன்றவைகள் கணவன் மனைவி உறவினை மேலும் வலுப்படுத்தும். விட்டுக் கொடுப்பதால் உங்களின் உறவு கெட்டுவிடாது ..!!!
அது மேலும் இறுகி கெட்டிப்படும்..!