(பெரியவாளுக்கு அத்வைதம் - உபநிடதம் - பிரம்ம ஸூத்ரம் -பகவத் கீதை -புராணம் மட்டும்தான் தெரியும் என்பதில்லை.
பட்டிக்காட்டு செவிவழிக் கதைகளும் தெரியும்)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-127
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
பெரியவாளுக்கு அத்வைதம் - உபநிடதம் - பிரம்ம ஸூத்ரம் -பகவத் கீதை -புராணம் மட்டும்தான் தெரியும் என்பதில்லை. பட்டிக்காட்டு செவிவழிக் கதைகளும் தெரியும்.
ஒரு சோலையில் தங்கியிருந்தபோது, ஒரு குயில் அகவிற்று.
பெரியவாள் ஒரு சிஷ்யனைக்கூப்பிட்டு,தரிசனத்துக்கு வந்தவர்களில், ஐந்து வயது குழந்தையைக் காட்டி, "அந்த பறவையின் பெயர் என்ன?" என்று கேட்கச் சொன்னார்கள்.
குழந்தை சர்வ சாதாரணமாக, "அக்காக்குருவி" என்றது.
"அக்காக் குருவின்னு நீங்களெல்லாம் கேள்விப் பட்டிருக்கேளோ?"-பெரியவா தொண்டர்களிடம்.
யாரும் கேள்விப்பட்டதில்லை!
பெரியவாள் கூறினார்கள்.
"கிராமங்களில் ஒரு கதை சொல்லுவா, ஒரு மரத்திலே கூடு கட்டிண்டு, ரெண்டு பட்சி இருந்ததாம்.- ஒன்று பெரிசு (அதனால் அக்கான்னு பேரு) இன்னொன்று சின்னது (தங்கை). ரெண்டு பட்சியும் ஒரு நாளைக்கு ஆற்றிலே குளிக்கப் போச்சு.ஆற்றிலே, நிறையப் பிரவாகம். அக்கா பட்சி ஸ்நானம் செய்தபோது, வெள்ளம் அடிச்சிண்டு போயிடுத்து. வெள்ளத்தைப் பார்த்து பயந்துண்டு,தங்கைக் குருவி ஸ்நானம் பண்ணாமலே, பக்கத்தில் இருந்த ஒரு மரத்துக்கு வந்துடுத்து.
அக்கா இன்னும் வரல்லையேன்னு, துக்கம் தாங்காமே "அக்கா அக்கா"ன்னு அழைச்சிண்டே இருந்ததாம்.இப்படி ஒரு கதை கிராமத்திலே, இந்தக் குழந்தைக்கு, இந்தக் குயில், குருவியைக் காட்டிலும் பெரிசா இருக்கிறதாலே,அக்கா குருவின்னு சொல்றது, சமர்த்துக் குழந்தை!"
பெரியவாளுக்குத் தெரியாத விஷயமே சூரியனுக்குக் கீழே (ஏன் மேலேயும்) இருக்கவே இருக்காதோ?
நாம்,தங்கைக் குருவிகள் தாமே! எப்படிப் புரியும்?