சக்கரவர்த்தி முதல் குறுநில மன்னர்கள் வரை அந்தப்புரம் வைக்காத மன்னர்களே கிடையாது. இந்த வார்த்தையை உபயோகிக்காத எந்த வரலாற்று எழுத்தாளரும் இல்லை, அந்தப்புரம் எப்படி இருந்திருக்கும் என்பதை பற்றி அறியும் ஆவலில் வாங்கியதே முகில் எழுதிய "அகம் புறம் அந்தப்புரம்" என்ற வரலாற்று நூல். ஆயிரம் பக்கங்களை தாண்டிய இந்த புத்தகத்தை தூக்குவதே பெரிய பயிற்சி தான். இணயத்தில் அந்தப்புரம் பற்றிய தேடலில் ஒன்னும் அகப்படவில்லை. ஆதலால் வரும் தலைமுறையினருக்கு அந்தப்புரத்தை பற்றிய அறிவை உண்டாக்கவே இந்தப் பதிவு.
துருக்கி சுல்தான்களின் அந்தப்புரம்தான் உலகிலேயே மிகவும் பிரசித்தப் பெற்றதும், சரித்திர ஆசிரியர்களால் கொண்டாடப்படுவதும் ஆகும். இணைத்திருக்கும் படங்கள் எல்லாம் இணையத்தில் இருந்து எடுத்தது, ஒட்டாமன் மன்னர்களின் அந்தப்புரம் பற்றியது.
சரி அந்தப்புரம் எப்படி இருக்கும் ?
நீண்ட திரைச் சீலைகள்... அலங்கரிக்கப்பட்ட மாடங்கள்..எங்கு நோக்கினும் அழகிகள்....சில மன்னர்கள் தங்கள் வருவாயில் அற்பது சதவீதம் அந்தப்புரத்திற்கு செலவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தப்புரத்தின் தலைவி பட்டத்து மகாராணிதான். அந்தப்புரத்து பெண்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறார்கள்.
1. மகாராணி - மன்னர் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்ட பெண்கள்
2. ராணி - திருமணம் செய்து மனைவி போல நடத்தப்படுபவர்
3. ஆசை நாயகிகள் - மன்னனோடு கலவி கொண்டவர்கள்
4. அழகிகள் - மன்னனின் கடைக்கண் பார்வைக்காக காத்திருப்பவர்கள்
சரி இவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் எப்படி ?
மகாராணிகள் அறைகள் மிகப் பெரியது. சேவகம் செய்யவே நூற்றுக்கணக்கான பெண்கள் இருப்பர்கள். ராணிகள் அறைகள் ஓரளவுக்கு பெரிதாக இருக்கும். ஆசை நாயகிகளுக்கு ஒரே ஒரு அறைதான். மற்ற அழகிகள் பொது அறையில் தான் தங்க வேண்டும்.
உணவைப் பொருத்தவரையில் அரண்மனையில் ஒரு நாளைக்கு எழுபது பதார்த்தங்கள் சமைத்தார்கள் என்றால் மகாராணி எதுவேண்டுமென்றாலும் கேட்டு சாப்பிடலாம். தங்க தட்டில் பரிமாறப்படும். ராணிகளுக்கு முப்பது பதார்த்தங்கள் வரை வெள்ளித் தட்டில் வைத்து கொடுக்கப்படும். ஆசை நாயகிகளுக்கு அதிகப் பட்சம் பத்து பதார்த்தங்கள் பித்தளை தட்டில் வைத்து பரிமாறப்படும்.
தங்கள் அழகுக்கு அழகு சேர்ப்பது... மன்னரை மகிழ்விப்பது. இசை, ஆடல், பாடல், கூடல் கலைகளைக் கற்றுக் கொடுக்க அதில் அனுபவமிக்க தனித்தனி ஆசிரியைகள் உண்டு. பட்டத்து மகாராணிக்குத்தான் கொஞ்சம் அதிகப்படியான வேலை. அந்தப்புரத்தின் வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பது, சமையல் துறை, மருத்துவ துறை, மன்னர் திருமணம் செய்த பெண்களையும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் பற்றி கணக்கு வைத்துக் கொள்வது. ஒவ்வொன்றையும் கவனிக்க தனித்தனி செயலர்களை மகாராணி வைத்துக் கொள்ளலாம்.