Breaking News :

Sunday, December 22
.

அவனுக்குப் பசி அவள் மேல் ருசி..


அவனுக்குப் பசி
அவள்  மேல் ருசி..
இடைவெளியில் இருப்பு
இப்போதைக்கு யார் பொறுப்பு..
அவன் தான் காரணம்
என் மேல் கருணையில்லா
கள்வனே காரணம்...
கண்ணை மறைத்து
காதலியை தழுவினான்..
காதகன்..கிராதகன்..
பதம் முடித்து பாதம் தழுவும்


பிச்சைக்காரன் அவன்..
புடவை நனைத்து
குளிர் காயும் குந்தியின் மகன்.
உடை களைந்து
நிலம் புணர்ந்த
நீசன் அவன்..
நிறைமாத மேகங்களை
குறைப்பிரசவம் செய்பவன்..
கருத்த தேகம் கொண்டு
கார்முகில் பெயரானவன்..
பெருத்த நேரம் மின்னலிட்டு
மேனி தழுவ வந்தவன்..
இருப்பையெல்லாம் அவன் தின்று
இடியாய் இடிப்பவன்..
இடையில் இளைப்பாற
இவள் வாசம் குளிப்பவன்...
குடிகார குயவன் அவன் - தேன்
குடம் உண்டு களித்து
குட்டைகளில் நிறைந்தவன்..
குமரன் கிழவன்
கதிரவன் புதல்வியின் கணவன்
நயவஞ்சகன்......
நான்
கண்ணயர்ந்த நேரம்
அவளைக் கொண்டவன்..
என் அனுமதியின்றி
அவளுடலைத் தொட்டவன்..
கள்வன்..கயவன்
கண்ணெதிரே வந்தான்..
கலை முதல் கடை வரை
கட்டியணைத்துச் சென்றான்..
நெஞ்சம் பொறுக்கவில்லை
இனி கத்தி அழுதும் பயனில்லை..
நாளைமுதல் சபதம் செய்தேன்
நான் வாழும் வரை அவனை
குடித்தே அழிப்பேன்
முடிவு செய்தேன்.....
ஆனாலும்
கவனம் இனி தேவை தான்
காலையும் மாலையும்
பின்னிரவு வேலையும்
உண்டு ருசித்தவன்..
அவளை மெல்ல இரசித்தவன்..
மீண்டும் வரலாம்...
போதை தீர்ந்ததும்
பேதை காண வரலாம்..
மின்னலைக் கொண்டு
கண்களை மறைக்கலாம்..
தூறலைத் தூதனுப்பி
துகிலைப் பறிக்க முயலலாம்..
எச்சரிக்கை இனி தேவை தான்
கைவசம்..
எப்போதும் ஒரு குடை தேவை தான்..

.. இயலிசம்....

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.