சகலகலா வல்லவன்.. என்றால் உலக வரலாற்றில் சீசரைத் தவிர வேறு யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.. அனைத்து வித்தைகளும் கைவரப் பெற்ற .. உடலெல்லாம் மச்சம் என்று சொல்லலாம். உலக அழகி , எகிப்தின் தேவதை இவரிடம் மயங்கிக் கிடந்தாள்..
சீசர் ஒரு பெண் பித்தர்.. சந்தேகத்திற்கு இடமே கிடையாது. ஆனால் அவர் ஆண்களோடும் உறவு வைத்துக் கொண்டார் என குறிப்பிடுகிறார்கள். நிக்கோமெடிஸ் தவிர வேறோரு ஆணை நினைத்துக் கூட பார்க்கமாட்டார் என அவருடன் இருந்தவர்கள் சத்தியம் கூட செய்தார்கள்.
சீசரின் சமகாலத்தவரும் , கேன்சலாக பணியாற்றியவருமான மார்க்கஸ் துல்லியஸ் ஸிஸரோ ஒரு படி மேலே போய் " ஜூலியஸ் சீசர் ரோம் நாட்டின் அத்தனை பெண்களுக்கும் கணவர்: அத்தனை ஆண்களுக்கும் மனைவி " என்று போட்டுத் தாக்கினார்.இவரது வீரர்கள் கூட .. இவரைக் குறித்து பலான பாடல்கள் எல்லாம் பாடுவார்களாம்.தலைவர் அதை கண்டு கொள்வதே இல்லை.
கன்னி ராசி இருந்ததே தவிர , இவருக்கு கல்யாண ராசி இல்லவேயில்லை. முதலில் நிச்சயித்த பெண் கொஸூட்டியாவை தாய் சொன்னதால் கைகழுவினார். பின் திருமணம் செய்த முதல் மனைவி கொர்னீலியா அழகான பெண் குழந்தையை ( ஜூலியா) கொடுத்து விட்டு திடீரென மரணமடைந்தார்.இரண்டாம் மனைவி பாம்பியா வை விவாகரத்து செய்து விட்டார். காரணம் எளிதானது.
ஒரு முறை சீசர் வீட்டில் பூஜை நடந்தது. ஆண்கள் அனைவரும் வெளியே.( பூஜை பெண்களுக்கானது ) தற்செயலாக வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரு பெண் , புதர் அசைவதைக் கண்டு கூச்சலிட்டாள்.அனைவரும் ஓடிவர, புதரில் இருந்து பெண் வேடமணிந்த ஆண்.பெண்களுக்கான இடத்தில் நுழைந்தது எவ்வாறு? அவன் யாரும் எதிர்பாராத குண்டைத் தூக்கிப் போட்டான்.
" நான் பாம்பியாவின் கள்ளக் காதலன்.சீசர் வெளியே போயிருக்கும் போது , அவளை ரகசியமாக சந்திப்பேன் " பாம்பியா இல்லை என்று மறுத்தாள். சீசர் பார்த்தார் " நான் இந்த நிமிடமே பாம்பியாவை விவாகரத்து செய்கிறேன் "
சீசரின் தாய் அம்ரேலியா கேட்டார் " சீசர்! நீ அவளை சந்தேகப்படுகிறாயா?"
"இல்லை . சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்." பிற்காலத்தில் அனைவராலும் எடுத்தாளப்படும் புகழ் பெற்ற வாக்கியத்தை திருவாய் மலர்ந்தருளினார்..
தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சீசர் என்னவென்றாலும் செய்யத் தயாராக இருந்தார்.எனவே மிகப்பெரிய வீரரும் , முன்னால் கான்சலுமான பாம்பே யுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்.நம் ஊர் போல பச்சோந்தி கூட்டணி அல்ல.. சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் எந்த காரணம் கொண்டும் மீற மாட்டார்கள். கன்னத்துல போட்டுக்கோ.. தெய்வக் குத்தம் ஆயிரும்.
பாம்பே யின் வயது 55. மூன்று மனைவிகளை வரிசையாக விவாகரத்து செய்து விட்டார்.சீசரின் மகள் ஜூலியாவுக்கு வயது 17. பாம்பேயை தனது கைக்குள் போட்டுக் கொள்ள , துருப்புச் சீட்டாக தனது இளம் வயது மகளை பயன் படுத்த விரும்பினார்.அடிக்கடி அவரைத் தனது வீட்டுக்கு வரவழைத்து விருந்தளிக்க , கைமேல் பலன்.காதலுக்கு கண் இல்லை.மூளையும் இல்லை. இருவருக்கும் காதல். தொடர்ந்து திருமணம்.
இருந்தாலும் ஜூலியாவை தங்க தாம்பாளத்தில் வைத்து பாம்பே தாங்கினார்.ஐந்தே வருடங்களில் பிரசவத்தின் போது ஜூலியா மரணம் அடைய ,பாம்பே - சீசர் உறவு ( இருவருக்கும் அதிகாரப்பசி ) ப் பாலம் , நம்ம ஊர் பாலம் மாதிரி, சில நாட்களில் உடைந்து போனது. இருவரும் பரம எதிரியாக மாறினர்.
பாம்பே ரோம் எல்லையைத் தாண்டி எப்பிரஸ் என்ற கிரேக்க பகுதியில் இருந்து கொண்டு , சீசருக்கு குடைச்சல் கொடுக்க, இருவருக்குமான போரில் பாம்பே தோல்வி அடைந்து விட , தனது நண்பரான 12 ஆம் தாலமியின் வாரிசான 13 ஆம் தாலியின் ஆட்சி எகிப்தில் நடந்து கொண்டிருந்ததால். எகிப்து தன்னை ஆட்கொண்டு நினைத்த வரம் கொடுக்கும் என்று ஓடினார்.
மருமகன் பாம்பே , மகள் இறந்ததுமே மாறிய மகனாகிப் போய் விட்டதால், மீண்டும் தலையெடுக்க விடாமல் தடுக்கும் விதமாக எகிப்து நோக்கி சிறு படையுடன் கிளம்பினார் சீசர். எகிப்து மன்னர் 12 ம் தாலமி இறந்ததும் அவரது மகன் 13 ம் தாலமி இப்போது மன்னன்.( மீசை முளைக்க இன்னும் காலம் கனியவில்லை) வயது 15. அவரது அக்கா கிளியோபாட்ரா அவரைவிட 7 வயது மூத்தவள். தம்பி தாலமி அவளைத் திருமணம் செய்து கொண்டான்.இல்லை அவள் திருமணம் செய்து கொண்டாள் என்பதே பொருத்தமாக இருக்கும்.
தங்கள் அரசு கைவிட்டு போகக் கூடாது என்பதற்காக , உடன் பிறந்தோரை திருமணம் செய்வதே சாலச் சிறந்தது.( எகிப்து அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா ) அங்கு சகோதர சகோதரிகளைத் திருமணம் செய்து கொள்வது சகஜமான , ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது. கிளியோபாட்ரா வுக்கு தனது கணவரான தம்பியை வீழ்த்தி விட்டு , ஆட்சியைப் பிடிக்க தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தார். ஆனால் அரசர் 12ம் தாலமியால் நியமிக்கப்பட்ட ராஜதந்திரி போதினெஸ். இவர் ஒரு திருநங்கை. மிகச்சிறந்த புத்திசாலி. இவர் கிளியோபாட்ரா வின் கனவில் மண்ணை வாரிப் போடுவதை தனது தேசியக் கடமையாகக் கருதி, அவளது நடவடிக்கைகளுக்கு தடைகளைப் போட்டுக் கொண்டு இருந்தார்.
எகிப்து வந்த தகவலைச் சொல்லி விட்டு , படகில் காத்திருந்தார் பாம்பே .ஆனால் ஜெயிக்கும் குதிரையான சீசரை ஆதரிக்க விரும்பிய போதினெஸ் கட்டளைப்படி , எதிர் பாராத விதமாக .படகிலேயே கொல்லப்பட்டார் . நடந்தது தெரியாமல் சீசர் பாம்பேயைத் தேடி எகிப்தை அடையும் முன்பே தாலமியும் ,எதினோஸூம் சீசரை வரவேற்றனர். , கிளியோபட்ரா ( அவளுக்கென்று தனிப்படை உருவாக்கி இருந்தாள் ) வை அரசியலில் இருந்து, முடிந்தால் உலகத்தில் இருந்தும் நீக்கிவிட்டு தாலமியின் ஆட்சியை பலப்படுத்த உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.( தாலமி பொம்மையை தன் விருப்பப்படி ஆட்டிவைத்து உண்மையில் எதினோஸ் தான் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.)
சீசர் ஒரு வாரம் அவகாசம் ( மேலிடத்தில் கேட்க வேண்டும் ) கேட்டார். உண்மையில் அவர் தான் நினைத்ததை மட்டுமே செய்து முடிப்பவர்..ஓ.. இந்த கிளியோபாட்ரா எப்படி இருப்பாள்? உலகப் பேரழகி என்கிறார்களே. எப்படியாவது போதினெஸின் ஒற்றர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு , அவளைப் பார்த்து விடத் துடித்துக் கொண்டிருந்தார் சீசர் . இந்த ஒரு வாரகால அவகாசமும் இதற்குத்தான் எதினோஸ் அவர்களே! சீசரும் இந்த அளவுக்கு மெனக்கெட்டிருக்க வேண்டாம்.தேனே வண்டைத் தேடி வந்து கொண்டிருந்தது.
கிளியோபாட்ரா தனது அழகால் அனைவரையும் கட்டி வைத்திருந்தாள்.ஆண்களை மயக்கும் வித்தைகளை நன்கு அறிந்து வைத்திருந்தாள். எதினோஸ் மட்டும் அரவாணி இல்லை என்றால் அவரையும் தனது மோக வலையில் வீழ்த்தியிருப்பாள்.அவளுக்கும் சீசரது உதவி தேவை. தனது அழகால் அந்த சீசரை எளிதில் வீழ்த்தி அவனது உதவியுடன் ஆட்சிக்கட்டிலைப்பிடிக்க , சீசரோடு கட்டிலைப்பகிர தயாரானாள். சீசரைப் போலவே அதிகாரத்திற்காக எதையும் செய்யக் கூடியவள்.
தானே நேரில் யாருக்கும் தெரியாமல் வருவதாகவும், ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று ரகசியமாக செய்தி அனுப்பினாள். ," வா! என் உலக அழகியே..உனக்காக எதுவும் செய்வேன். "ராணியின் ஆட்கள் வந்தால் தடையின்றி உள்ளே அனுப்பக் கட்டளையிட்டுக் காத்திருந்தான். அனைவரின் கண்களிலும் இருந்து தப்பித்து , ஒரு நம்பிக்கைக்குரிய வீரருடன்(அப்பல்லோ டோரஸ் ) கிளம்பினாள்.
சீசரின் இருப்பிடத்திற்கு படகிலிருந்து அவ்வீரன் மட்டும் இறங்கி வந்தான்.தோளில் மிகப்பெரிய சுருட்டிய கம்பளி. சீசருக்கு ராணியின் அன்பளிப்பு.. என்று கூறக் கேட்டதும் தடையின்றி அனுமதி. சீசரின் முன்னால் " பெருமதிப்பிற்குரிய சீசர் அவர்களே! இது எங்கள் எகிப்து ராணியின் அன்பளிப்பு. இதை உங்களிடம் ஒப்படைக்கப் சொன்னார்கள்." வந்தவன் சென்று விட்டான்.என்னடா இது ? ராணி வருவாள் என்று பார்த்தால் கம்பளி வடிவில் ஒரு கோணி வந்திருக்கிறதே.. ஏமாற்றத்துடன் கம்பளியைத் தரையில் உருட்டி விட, தன்னை எகிப்துக்கு வந்ததில் இருந்து தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்த அழகிய கிளி( யோபாட்ரா ) தரையில் உருண்டதைக் கண்ட சீசர் ஒரு கணம் செய்வதறியாது திகைத்து நின்றார். இப்படி ஒரு பேரழகா?
கிளியோபாட்ரா தனது மோக வலையை விரித்து , யாருக்கும் அடங்காத சீசரை தனது கைகளுக்குள் கட்டி வைத்தாள். அப்புறம் என்ன? எதிரிகளை ( உனது எதிரிகள் எனது எதிரிகள் பெண்ணே! ) வீழ்த்தி , கிளியோபாட்ரா வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். இவ்வுலகில் அழகும் அறிவும் உள்ள பெண்கள் யாராலும் ஜெயிக்க முடியாத சக்திகள். பெண் சபலம் இல்லாத ஒரு அறிவாளியால் மட்டுமே இச்சக்திக்கு ஈடு கொடுக்க முடியும்..நம்ம சீசர் எந்த மூலைக்கு?
ரோமில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி இருவரையும் பிரித்தது. ரோமுக்குச் செல்ல வேண்டிய நிலை. சீசருக்கு ஆட்சி முக்கியம் . தனது காதலியிடமிருந்து பிரியாவிடை பெற்றாலும் தனது அடையாளமாக ஒன்றை விட்டுச் சென்றார்.ஆம்..அவர் சென்ற சில மாதங்களில் கிளியோபாட்ரா ஒரு குழந்தையை ஈன்றெடுத்தாள்.14 ம் தாலமி என்று பெயரிடப்பட்டது. அப்படியா ? என்று ரோமும் , எகிப்தும் நமட்டு சிரிப்பை உதிர்த்துக் கொண்டது. அவர்கள் அவனுக்கு வைத்த செல்லப்பெயர் குட்டி சீசர்.
கிளியோபாட்ரா தனது கணவன்.( இன்னமும் மீசை வரவா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டே இருந்தது.) மற்றும் கைக்குழந்தை சிஸேரியன். ஆம் 14ம் தாலமி பெயர் மாற்றப்பட்டு விட்டது. உலகுக்கே தந்தை யார் என்று தெரியும் போது , இது மட்டும் எதற்கு ? கிளியோபாட்ரா வைப் பொறுத்தவரை மறைப்பதற்கு என்று அவளிடம் எதுவும் இல்லை..அனைவரும் குடும்பத்துடன் ரோமிற்கு வருகை புரிந்தனர். இது சீசரின் குழந்தை தான் என்பதை ரோமுக்கு உணர்த்தி , தன் உரிமையை நிலை நாட்டிக் கொள்ளவே. இந்த அரசு முறைப் பயணம்.அரச மரியாதையுடன் உள்ளே நுழைந்தாயிற்று.
சீசரால் அப்போது வீனஸ் கடவுளுக்கு கோவில் கட்டி திறக்கப்பட்ட போது மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். வீனஸ் தேவதையின் உருவம் கிளியோபாட்ரா வடிவில். ( நமது அம்மா சிலை திருமதி. பழனிச்சாமி மாதிரி இருந்தது போலத்தான் இதுவும். அதெல்லாம் மாத்த முடியாது.. ஆமாம்.. சீசர் சொல்லி விட்டார். எகிப்துக்கு கிளம்பும் போது தனது ஆசை மகனுக்கும் , தனது காதலிக்கும் ஏகப்பட்ட பரிசுப் பொருட்களை வழங்கி பிரியா விடை கொடுத்தான். தர்மப்படி தனது மகன் என்றாலும், சட்டப்படி அவன் தாலமியின் மகன். ரோமும் இதை ஏற்றுக் கொண்டு, உரிமை வழங்கப்போவதில்லை.
யாராவது "நீ கிளியோபாட்ரா மாதிரி அழகாக இருக்கிறாய்" என்றால் சந்தோஷப்படும் முன் சற்றே யோசியுங்கள்..பெண்களே!!!.