Breaking News :

Thursday, May 08
.

"கோகுலாஷ்டமியும், குலாம் காதரும்" - காஞ்சி பெரியவா


(பெரியவா இட்டுக்கட்டின கதை)(கற்பனையாக சொன்ன கதை)

(ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து முடிச்சுப் போட்டா, "கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்"ன்னு வசனமாவே சொல்றதா ஆச்சு) (கோகுலாஷ்டமி ஸ்பெஷல் போஸ்ட்--26-08-2024)

சரியானதைத் துல்லியமாக கண்டு பிடிப்பதற்கு நகைச்சுவை சொட்டும் ஓர் உதாஹரணம் 'கோகுலாஷ்டமியும் குலாம்காதரும்' என்ற சொற்றொடர் எப்படி வந்தது என்று காட்டுகிறார் பெரியவா.

"தென் திருப்பேரை--ன்னு தென்பாண்டி நாட்டில ஒரு உசந்த திவ்யதேசம், "திவ்யதேசம்"னா என்னன்னா, தேவாரம் இருக்கிற சிவ க்ஷேத்ரங்களைப் "பாடல் பெற்ற ஸ்தலம்"-கிறாப்பல, திவ்ய ப்ரபந்தம் இருக்கிற பெருமாள் க்ஷேத்ரங்களுக்கு திவ்ய தேசம்"னு பேர்.அப்படி 108 இருக்கிறதுல, பாண்டிய தேசத்துல 18 இருக்கு.அதுல ஒண்ணு திருப்பேரை.அங்கே பெருமாளுக்கு ஸம்ஸ்கிருதத்துல மகர பூஷனர்-னு பேர். மகர குண்டலம் போட்டுண்டு இருக்கிறவர்னு அர்த்தம்.

மகரம் என்கிற ஜாதியைச் சேர்ந்த மத்ஸ்யம் [மீன்] சுருட்டிண்டு இருக்காப்பல அந்தக் குண்டலத்தோட "ஷேப்" இருக்குமானதால் அப்படிப் பேர். மகரபூஷணப் பெருமாளைத் தமிழ்ல மகர நெடுங்குழைக் காதர்னும், சுருக்கிக் "குழைக் காதர்"னு மாத்திரமும் சொல்லுவா.

ரொம்ப நாள் முன்னாடி நம்ப மடத்து ஆதரவுல "ஆர்ய தர்மம்"னு ஒரு மாஸப் பத்திரிகை வந்துண்டிருந்தது. அதுல குழைக் காதையங்கார்னு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ஆர்டிகிள் எழுதறதுண்டு. அவரைக் காதர் ஐயங்கார்,காதர் ஐயங்கார்னே சொல்லுவோம்!"

"அந்த மாதிரி ஒரு குழைக்காதர், பிரிட்டிஷ் ராஜாங்கத்துல குமாஸ்தாவா உத்யோகம்.
பண்ணிக்கிண்டிருந்தவர், வெள்ளைக்காரதுரை கிட்ட கோகுலாஷ்டமிக்கு லீவ் அப்ளை பண்ணியிருந்தார்.

கோகுலாஷ்டமிக்கு 'பப்ளிக் ஹாலிடே' உண்டுதான். ஆனா, க்ருஷ்ண ஜயந்தின்னு ஸ்மார்த்தாள் அஷ்டமி திதியை வெச்சு கோகுலாஷ்டமின்னும், வைஷ்ணவாள் ரோஹிணி நக்ஷத்ரத்தை வெச்சு ஸ்ரீஜயந்தின்னும் பண்றதுனால திதி ஒரு நாள்லயும், நக்ஷத்ரம் வேற நாள்லயும் வரது ஸகஜம்

அப்படி ரெண்டு க்ருஷ்ண ஜயந்தி வந்தாலும், கவர்மென்ட் ஹாலிடே என்னமோ கோகுலாஷ்டமிக்குத்தான் விட்டிண்டிருந்தா. அதுலதான், ஸ்ரீஜயந்தி வேற நாளில் வந்த ஒரு வருஷம். அந்தக் குழைக்காதர் ஐயங்கார், ஒரே பண்டிகைக்கு இரண்டு பேரைக் காட்டி துரையைக் குழப்ப வேண்டாம்னு நெனச்சு, "எங்க ஸப்-ஸெக்டுக்கு இப்பத்தான் கோகுலாஷ்டமி.அதனால் லீவு தரணும்"னு அப்ளிகேஷன் போட்டார்.

"திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன்னும், தரங்கம்பாடியை ட்ரான்க்யுபார்னும் புரிஞ்சுண்டவாதானே அந்த துரைமார்கள்! மூணே எழுத்து, ஸிம்பிள் 'மதுரை'யை தக்ஷிணத்துல 'மெஜுரா' வாகவும் வடக்கே 'மட்ரா'வாகவும் புரிஞ்சுண்டவாளாச்சே!

அதனால் அந்ததுரைஎன்னபண்ணினார்ன்னா , "குழைக்காதர்" ங்கிறதை, 'குலாம் காதர்'னு நெனச்சுண்டுட்டான்!. 'குலாம் காதர்' [என்பது] துருக்காள் நெறயவே வெச்சுக்கற பேரானதால அவன் காதுக்கு ஃபெமிலியரா இருந்தது.

ஹிண்டு-முஸ்லீம் பேர் வித்யாஸம் பார்க்கத் தெரியாம ஸ்ரீவைஷ்ணவரை குலாம் காதராக்கிட்டான்!

தன்னோட டைப்பிஸ்ட்கிட்ட "குலாம் காதர்னு" ஒரு க்ளார்க் கோகுலாஷ்டமிக்கு லீவ் கேட்டிருக்கார், ஸாங்க்ஷ்ன் பண்ணி -யாச்சுன்னு தெரிவிச்சுடு"ன்னான்.

"அந்த டைப்பிஸ்ட் ஹிந்து. "இதென்னடா கூத்து?"ன்னு அவர் அப்ளிகேஷனைப் பார்த்தார். அவருக்கு ஒரே வேடிக்கை -யாயிடுத்து. வேடிக்கையை எல்லார்கிட்டயும் சொல்லி 'ஷேர்" பண்ணிக்கிண்டார்.

அதுலேர்ந்து தான் ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து முடிச்சுப் போட்டா ". கோகுலாஷ்டமியும்குலாம் காதரும்"னு வசனமாவே சொல்றதா ஆச்சு.

"இந்தக் கதை...நானே கட்டினதுதான். எழுத்தாளர்கள் என்ன 'மார்க்' போடுவாளோ?"

(மெம்பர்களே பெரியவா கதைக்கு ஒரு கமென்ட் போடுங்கோ)

கட்டுரையாளர்-ரா.கணபதி.
புத்தகம்-கருணைக் கடலில் சில அலைகள்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub